Last Updated : 06 Aug, 2014 10:00 AM

 

Published : 06 Aug 2014 10:00 AM
Last Updated : 06 Aug 2014 10:00 AM

தொடரைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்?

சர்வதேச கிரிக்கெட் என்பது மலர்ப் படுக்கை அல்ல என்பது இந்திய டெஸ்ட் அணியின் இளைஞர்களுக்குப் புரிந்திருக்கும். இங்கே வெற்றியும் தோல்வியும் ஏற்றமும் சறுக்கலும் மிக விரைவில் மாறிவிடும். திறமை அல்ல, சீராகவும் தொடர்ச்சியாகவும் வெளிப்படும் திறமையே இங்கு முக்கியம்.

அதுவும் ஒருவரோ இருவரோ திறமை காட்டினால் போதாது. மட்டையிலும் பந்து வீச்சிலுமாகச் சேர்ந்து குறைந்தது ஐந்து பேராவது நன்கு ஆடினால்தான் வெற்றிபெற முடியும். இந்த யதார்த்தத்தை இப்போது இந்திய அணியின் இளைஞர்கள் நன்கு புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்பலாம்.

முரளி விஜய், அஜிங்க்ய ரஹானேயின் மட்டை வீச்சு, இஷாந்த் ஷர்மாவின் துல்லியமான எகிறு பந்துகள், இங்கிலாந்து மட்டையாளர்களின் பொறுப்பற்ற மட்டை வீச்சு ஆகிய அனைத்தும் சேர்ந்து லார்ட்ஸ் டெஸ்டில் பெற்றுத் தந்த வெற்றியை சவுத்ஆம்ப்டன் தோல்வி மறக்கச் செய்துவிட்டது. தோல்வியை விடவும் தோல்வி பெற்ற விதம் அதிர்ச்சி தருவதாக இருந்தது.

இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 508 ரன்கள் மட்டுமே இந்தியாவால் எடுக்க முடிந்தது. எதிரணியை இரண்டு இன்னிங்ஸிலும் மொத்தமாக ஆட்டமிழக்கச் செய்ய முடியவில்லை. சவால் அளிக்காமல் தோற்றதுதான் அணியைப் பற்றிய கவலைகளை ஏற்படுத்துகிறது.

தோல்வி ஏன்?

வெற்றி நாயகன் இஷாந்த் காயம் காரணமாக ஆட முடியவில்லை என்றதுமே இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விகள் எழுந்தன. 2011-ல் ஜாகீர் கானுக்குக் காயம் ஏற்பட்டபோது நிகழ்ந்த அதே சறுக்கல் இங்கும் ஏற்பட்டது. முதலில் ஆடிய இங்கிலாந்து 500 ரன்களுக்கு மேல் குவித்ததும் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியானது. இந்தியா

பந்து வீசும்போது சாதுவாக இருந்த ஆடுகளம் இங்கிலாந்து பந்து வீசும்போது வேறு வடிவம் எடுத்தது. ஆடுகளத்தில் எந்த மாற்றமும் பெரிதாக நடந்துவிடவில்லை. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சரியான இடங்களில் தொடர்ந்து பந்து வீசினார்கள். இந்திய மட்டையாளர்கள் தொடர்ந்து தவறான ஷாட்களை அடித்தார்கள். இரண்டும் தொடர்ந்து நடந்ததுதான் இந்தியாவின் தோல்விக்குக் காரணம்.

இஷாந்த் இல்லாத நிலையில் மற்ற பந்து வீச்சாளர்கள் கூடுதலான பொறுப்புணர்ச்சியுடனும் துல்லியத்துடனும் பந்து வீசியிருக்க வேண்டும். புவனேஸ்வர் குமார், முகம்மது ஷமியின் பந்துகளின் வரிசையும் அளவும் சீரற்றிருந்தன. புதிதாகச் சேர்க்கப்பட்ட பங்கஜ் சிங் ஏற்படுத்திய வாய்ப்புகள் கோட்டைவிடப்பட்டன.

முதல் இன்னிங்ஸில் எதிரணி அதிக ரன் குவித்துவிட்ட நிலையில் வெற்றிக்கான வாய்ப்பைவிட டிராஅல்லது தோல்விக்கான வாய்ப்புதான் அதிகம் என்னும் நிலையில் ஆடத் தொடங்கிய இந்திய அணி நீண்ட நேரம் ஆட வேண்டும் என்னும் டெஸ்ட் பால பாடத்தை மறந்ததுபோல் ஆடியது. ஷிகர் தவன் மீண்டும் தடுமாறினார். சதீஸ்வர் புஜாராவும் விராட் கோலியும் மீண்டும் சறுக்கினார்கள்.

சீராக ஆடிவரும் விஜய் விரைவில் ஆட்டமிழந்தார். ரஹானேயும் அரை சதத்துக்கு மேல் நிற்கவில்லை. ரோஹித் ஷர்மா பொறுப்பற்ற முறையில் ஆடி ஆட்டமிழந்தார். மகேந்திர சிங் தோனி, ஜடேஜா போன்றவர்களால் மீட்புப் பணியைச் செய்ய முடியவில்லை.

புஜாரா, கோலி சறுக்கல்

ஆடுகளத்தில் பெரிய அபாயம் இல்லாத நிலையிலும் இந்தியா சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தது சீரற்றதும் பொறுப்பற்றதுமான ஆட்டத்தின் விளைவு. இன்றைய மட்டை வரிசையின் தூணாகக் கருதப்படும் புஜாராவும் கோலியும் தொடர்ந்து சறுக்குவது அணிக்குப் பெரும் தலைவலியாக அமைந்துவிட்டது.

இந்நிலையில் ரோஹித் ஷர்மா 20 ஓவர் போட்டியில் ஆடுவதைப் போல ஆடியது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக இருந்தது. முதல் இன்னிங்ஸில் புஜாரா, கோலி, ரோஹித் என யாரேனும் ஒருவர் இன்னும் சிறிது நேரம் ஆடியிருந்தால் இந்தியாவின் ஸ்கோர் 400-ஐத் தொட்டிருக்கும். போட்டி டிரா ஆகியிருக்கும்.

இரண்டாம் இன்னிங்ஸிலும் இந்தியப் பந்து வீச்சாளர்களால் இங்கிலாந்து மட்டையாளர்களைத் தொந்தரவு செய்ய முடியவில்லை. ஆனால் இங்கிலாந்து வீச்சாளர்கள் இந்திய மட்டையாளர்களை அசவுகரியமான நிலைக்குத் தள்ளினார்கள். ஆடுகளத்தைப் பயன்படுத்திய விதத்தில் அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள்.

நான்காவது போட்டி வியாழனன்று தொடங்குகிறது. இதில் வென்றால் மட்டுமே தொடரில் தோல்வியைத் தவிர்க்க முடியும். இஷாந்த்துடன் புவனேஸ்வர் குமாரும் ஆட இயலாத நிலையில் இந்தியாவின் நிலை மேலும் பலவீனமாகியிருக்கிறது. ஸ்டூவர்ட் பின்னியை இரண்டு போட்டிகளில் ஆடவைத்தாலும் அவரைக் கிட்டத்தட்ட பயன்படுத்தவே இல்லை. இங்கிலாந்தின் மொயீன் அலி சுழல் பந்து வீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்திக்கொண்டிருக்கிறார்.

இந்தியாவின் திறமையான சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வினோ பெவிலியனில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார். ஜடேஜாவின் சுழலுக்கு யாரும் திணறுவதாகத் தெரியவில்லை. வேகப் பந்து வீச்சாளர்கள் உருவாக்கும் வாய்ப்புகளை ஸ்லிப் தடுப்பாளர்கள் கைநழுவ விடுகிறார்கள். தோனியின் விக்கெட் கீப்பிங்கும் சிறப்பாக இல்லை. இத்தனை பிரச்சினைகளுக்கு நடுவே இந்திய கேப்டனுக்கு இருக்கும் தேர்வுகள் என்ன?

அஸ்வின் அவசியம்

பந்து வீச்சில் இஷாந்த், புவனேஸ்வர் இல்லாத நிலையில் முதல் தரமான சுழல் பந்து வீச்சாளரான அஸ்வினைக் கண்டிப்பாக அணியில் சேர்க்க வேண்டும். அதற்காக பலிகொடுக்கப்பட வேண்டியது ஆல்ரவுண்டர் ஜடேஜாவா அல்லது வேகப் பந்து வீச்சாளரா என்ற கேள்விக்கே இடமில்லை. இங்கிலாந்தின் ஆடுகளங்களை வைத்துப் பார்க்கும்போது வேகப் பந்து வீச்சாளரைக் குறைப்பது அறிவுடமை ஆகாது.

ஜடேஜா கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றால் மட்டையாளரின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். அதாவது ரோஹித்தை நீக்கலாம். ஆனால் கோலி, புஜாரா ஆகியோர் தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில் இதுவும் நல்ல யோசனையாக இருக்க முடியாது.

ஷமி, பங்கஜ் சிங், பின்னி ஆகியோரில் ஷமியைத் தவிர வேறு யாருக்கும் டெஸ்ட் போட்டியில் அனுபவம் இல்லை. எனவே அஸ்வின் இருக்க வேண்டியது அவசியம். இவர்களுடன் ஜடேஜாவா அல்லது ரோஹித்தா என்று கேப்டன் முடிவுசெய்ய வேண்டும். ரோஹித்தை நீக்கினால் 6 மட்டையாளர்கள், ஒரு ஆல் ரவுண்டர், நான்கு பந்து வீச்சாளர்கள் என அணியின் சமன்பாடு இருக்கும். அஸ்வினும் ஓரளவு மட்டையாடக்கூடியவர் என்பதால் துணிந்து 6 + 1 + 4

என்ற சமன்பாட்டைத் தேர்வு செய்யலாம். அல்லது முன்னணி மட்டையாளர்களில் ஒருவர் என்னும் முறையில் ரோஹித்தைத் தெர்வுசெய்தால் அவர் பகுதி நேர பந்து வீச்சாளராகவும் செயல்பட வேண்டியிருக்கும். அஸ்வின் எப்படியும் அணியில் இருக்க வேண்டும்.

பேட்ஸ்மேன்களுக்கு பொறுப்பு

அதைவிட முக்கியம் மட்டையாளர்கள் சுதாரித்துக்கொள்ள வேண்டியது. இந்தியப் பந்து வீச்சு அந்நிய மண்ணில் 20 விக்கெட்களை எடுக்கும் வலிமையுடன் இருப்பது அரிதான நிகழ்வுகளில் ஒன்று. தற்போதைய நிலையில் பந்து வீச்சின் மீது அதிக நம்பிக்கை வைக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் மட்டை வீச்சில் பிரகாசித்தால் மட்டுமே போட்டியில் நிற்க முடியும். அதை உணர்ந்து மட்டையாளர்கள் ஆட வேண்டும். பந்து வீச்சு பலவீனமாக இருந்தால் வெற்றி கிட்டாது என்பது உண்மைதான்.

ஆனால் மட்டை வீச்சு வலுவாக இருந்தால் தோல்வியைத் தவிர்க்கலாம். வெற்றி கிடைக்காதபோது தோல்வியைத் தவிர்க்க முனைவதே டெஸ்ட் போட்டியின் தன்மை. அதைச் செய்ய இந்தியாவின் ஏழு மட்டையாளர்களும் முனைப்புக் கொள்ள வேண்டும். அதுதான் இந்தத் தொடரின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x