Published : 28 Feb 2024 10:23 PM
Last Updated : 28 Feb 2024 10:23 PM

பிசிசிஐ ஒப்பந்தம் | ஜெய்ஸ்வால் உள்ளே... இஷான், ஸ்ரேயஸ் வெளியே!

இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேஸ் ஐயர் | கோப்புப்படம்

மும்பை: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களின் ஆண்டு ஒப்பந்த விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. இதில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார். அதே நேரத்தில் இந்திய அணிக்காக விளையாடி வந்த ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தம் சார்ந்த விவரங்களை பிசிசிஐ புதுப்பிக்கும். அந்த வகையில் 2023 - 2024 சீசனுக்கான வீரர்களின் ஒப்பந்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் உள்ளூர் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மறுத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் இடம்பெறவில்லை. கடந்த சீசனுக்கான ஒப்பந்தத்தில் இவர்கள் இருவரும் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் அங்கம் வகிக்கும் வீரர்கள் அணிக்காக விளையாடாத சமயங்களில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ பரிந்துரை செய்திருந்தது.

  • கிரேடு ஏ+ (4 வீரர்கள்) - ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா
  • கிரேடு ஏ (6 வீரர்கள்) - அஸ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ், கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா
  • கிரேடு பி (5 வீரர்கள்) - சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், அக்சர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • கிரேடு சி (15 வீரர்கள்) - ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்குர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பரத், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், ரஜத் பட்டிதார்

இது தவிர இந்த காலகட்டத்தில் குறைந்தது 3 டெஸ்ட் போட்டிகள் அல்லது 8 ஒருநாள் போட்டிகள் அல்லது 10 டி20 போட்டிகளில் விளையாடும் வீரர்கள் ‘கிரேடு சி’ ஒப்பந்தத்தில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக துருவ் ஜுரல் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோர் தற்போது 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார்கள். அவர்கள் இருவரும் தரம்சாலாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் விளையாடினால் ‘கிரேட் சி’ பிரிவில் இணைவார்கள்.

இவர்கள் தவிர தேர்வு கமிட்டி சார்பில் வேகப்பந்து வீச்சாளர்களான ஆகாஷ் தீப், விஜய்குமார் வைஷாக், உம்ரான் மாலிக், யாஷ் தயாள், வித்வாத் காவேரப்பா ஆகியோரது பெயரையும் ஒப்பந்த ரீதியிலான பரிசீலனைக்கு பரிந்துரைத்துள்ளது.

ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இதற்கு பரிசீலிக்கப்படவில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதோடு அனைத்து வீரர்களும் தேசிய அணிக்காக விளையாடாத சமயங்களில் உள்ளூர் அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று விளையாட முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

புஜாரா, ஷிகர் தவான், உமேஷ் யாதவ், தீபக் ஹூடா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் கடந்த சீசனுக்கான ஒப்பந்தத்தில் இடம் பெற்று இருந்தனர். தற்போது வெளியாகி உள்ள ஒப்பந்த பட்டியலில் அவர்களும் இடம்பெறவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x