Published : 24 Feb 2024 05:42 PM
Last Updated : 24 Feb 2024 05:42 PM

ராஞ்சி டெஸ்ட் நாள் 2 - ஜெய்ஸ்வால் மட்டுமே அபாரம்: சறுக்கிய இந்திய அணி 219/7

ராஞ்சி: ராஞ்சி டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று இங்கிலாந்து தன் முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இந்திய அணி, இங்கிலாந்தின் அட்டகாசமான பந்து வீச்சினால் ஆட்ட முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. விக்கெட் கீப்பர் ஜூரெல் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 30 ரன்களுடனும், குல்திப் யாதவ் 17 ரன்களுடனும் கொஞ்சம் சேத தடுப்பு ஆட்டம் ஆடிவருகின்றனர். இருவரும் நாளை 3-ம் நாளில் தொடர்வார்கள்.

ஆட்டக்களம் பார்ப்பதற்கு ஒரு மாதிரியாக இருந்ததே தவிர நன்றாக இருக்கும் போல் தெரிகிறது என்று நாம் சிந்திக்கும் போதே பந்துகள் கணுக்காலுக்குக் கீழ் சீறும் தன்மையை வெளிப்படுத்தியது. அதற்கு நேற்று பென் ஸ்டோக்ஸ் இரை, இன்று அஸ்வின் இரை. இங்கிலாந்து தரப்பில் உயரமான ஆஃப் ஸ்பின்னர் ஷோயப் பஷீர் பிட்சின் உதவியுடன் நல்ல அபாரமான லெந்தில் வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணியின் பேட்டிங் முதுகெலும்பை உடைத்தார். மற்றொரு இளம் ஸ்பின்னர் டாம் ஹார்ட்லி 2 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முன்னதாக இன்று 302/7 என்று இங்கிலாந்து தொடங்கியது. ஜோ ரூட் 106 ரன்களுடனும் ஆலி ராபின்சன் 31 ரன்களுடனும் தொடங்கினர். இருவரும் மேலும் 45 ரன்களைச் சேர்த்து மிக முக்கியமான 102 ரன்கள் கூட்டணி அமைத்தனர். ஆலி ராபின்சன் 96 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்து இன்று முதலில் ஆட்டமிழந்தார். தேவையில்லாமல் ஜடேஜா பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடப்போய் பந்து கிளவ்வில் உரசிச் செல்ல ஜூரெல் கேட்ச் எடுக்க ஆட்டமிழந்தார். ஆனால் இவர் ரிவியூ செய்து பார்த்தார், அதில் பந்து கிளவ்வில் பட்டது கிளீன் ஆகத் தெரிந்தது. அடுத்து ஷோயப் பஷீர் இறங்கினார். ஜோ ரூட் அவரிடம் நின்று ஆடு அவுட் ஆகாதே நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னது போல்தான் தெரிந்தது.

ஆனால் அவரோ ஜடேஜாவின் பந்தை அடிக்கப் போய் எட்ஜ் ஆகி பாயிண்டில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து சென்றார். அவர் சிங்கிள் எடுத்திருக்க வேண்டும். ரூட்டிற்கு ஸ்டாண்ட் கொடுத்திருக்க வேண்டும் அதைச் செய்யவில்லை. ஜேம்ஸ் ஆண்டர்சன் கொஞ்சம் ஒத்துழைப்பார் என்று எதிர்பார்த்தார் ஜோ ரூட். ஆனால் அவரும் ஜடேஜா பந்தில் ஸ்வீப் ஆடப்போய் எல்.பி.ஆனார். ஜடேஜா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜோ ரூட் அட்டகாசமான 31வது டெஸ்ட் சதத்தில் 122 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

இவரது இந்த இன்னிங்ஸை கடந்த டெஸ்ட் போட்டியில் காட்டியிருந்தால் நிச்சயம் இங்கிலாந்து கடந்த டெஸ்ட் போட்டியில் கொஞ்சம் ஃபைட் செய்திருக்கும். ஆனால் பாஸ்பால் குருட்டுத்தனத்திலிருந்து இப்போதுதான் அவரால் மீள முடிகிறது. ஆகாஷ் தீப் முதல் 3 விக்கெட்டுகளுக்குப் பிறகு பழைய பந்தில் சோபிக்கவில்லை. மேலும் 19 ஓவர்களில் 83 ரன்கள் என்று சற்றே அடி வாங்கினார்.

குல்தீப் யாதவை இந்த இன்னிங்ஸில் ரோகித் சர்மா சரிவரப் பயன்படுத்தவில்லை. 40-வது ஓவர்தான் அவரைக் கொண்டு வந்தார். பந்துகள் திரும்புவது நின்று போக அஸ்வினை நம்பினார். அஸ்வினுக்கும் அடி என்றுதான் கூற வேண்டும். அவர் 22 ஓவரில் 83 ரன்களை வாரி வழங்கி 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார்.

ஜெய்ஸ்வால் அதிரடி, மற்றவர்கள் மார்ச் ஃபாஸ்ட்: இந்திய அணி இறங்கியவுடன் வெடரன் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் அவுட்ஸ்விங்கர் கைவரிசையில் ரோகித் சர்மா விரைவில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். ஜெய்ஸ்வால் மீதுதான் நம்பிக்கை இருந்தது, அவரும் அதைப் பூர்த்தி செய்தார். உணவு இடைவேளைக்குப் பிறகு ஜெய்ஸ்வாலும் ஷுப்மன் கில்லும் நன்றாக ஆடினர். ஆண்டர்சன் வீசிய ஒரு ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசி இருவரும் அரைசதக் கூட்டணியை வந்தடைந்தனர். ஜெய்ஸ்வால் இன்றைய சிறந்த பவுலர் பஷீரை லாங் ஆன் மேல் பெரிய சிக்சரை விளாசினார். முன்னதாக ஜேம்ஸ் ஆண்டர்சனை நேர் ட்ரைவ், பிறகு ஒரு அட்டகாசமான பிளிக் என்று தனது கிளாசைக் காட்டினார்.

ஷுப்மன் கில் 38 ரன்களில் பஷீரின் நன்றாகத் திரும்பிய பந்திற்கு முன் காலை நன்றாக முன்னால் தூக்கிப்போட்டு ஆடியிருந்தால் எஸ்கேப் ஆகியிருப்பார். ஆனால் அரைகுறையாக முன் காலை நீட்டியதால் எல்.பி.ஆனார். நடுவர் கையை உயர்த்த ரிவியூவில் அம்பயர்ஸ் கால் ஆனது. கில் வெளியேறினார். படிதார் 17 ரன்களில் 4 பவுண்டரிகள் என்று ப்ராமிஸ் காட்டினார். ஆனால் அவரும் ஷோயப் பஷீர் பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். இவரும் ரிவியூ செய்தார் ஆனால் பயனில்லை.

ரவீந்திர ஜடேஜா இறங்கி ஏதோ சாயங்காலம் கல்யாணத்துக்குப் போகணும் என்பது போல் 2 சிக்சர்களை அடித்து விட்டு அவசரம் அவசரமாக ஷோயப் பஷீர் பந்தை தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து விட்டு விக்கெட்டை விட்டெறிந்தார். ஜெய்ஸ்வால் பிட்சின் நிச்சயமின்மை காரணமாக கொஞ்சம் நிதானித்தார். ஆனால் அவர் 73 ரன்களில் பந்து மிகவும் தாழ்வாகச் செல்ல போல்டாகி வெளியேறினார்.

சர்பராஸ் கான் கடந்த மேட்ச் போல் ஆடவில்லை. நிதானமாக ஆடினார். ஏனெனில் சூழ்நிலை அப்படி. அந்தச் சமயத்தில் பென் ஸ்டோக்சின் அட்டகாச பீல்ட் செட் அப்பில் தூக்கி அடித்து அவுட். ஆனால் மற்ற வீரர்களுக்குக் கிடைக்கும் சலுகை இவருக்குக் கிடைக்காது. ஆகவே அவர் 53 பந்துகளில் 1 பவுண்டரி மட்டுமே அடித்து 14 ரன்களில் ஹார்ட்லி பந்து ஒன்று குறுக்காக ஸ்பின் ஆக எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் ரூட் கேட்சிற்கு வெளியேறினார். இது பெரிய விக்கெட்.

அஸ்வினும் ஹார்ட்லியின் மிக மிகத் தாழ்வாக வந்த பந்தில் எல்.பி.ஆனார். பிட்சின் கைங்கரியம். இந்தியா 177/7 என்று சரிவு கண்டது. கடைசியில் பென் ஸ்டோக்ஸின் களவியூகம் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை. டெய்ல் எண்டர் குல்தீப் யாதவுக்குப் போய் அனைவரையும் டீப்பில் வைத்து பவுலிங் செய்தார். ஜுரெல் நல்ல தடுப்பாட்ட உத்தியுடன் ஆடினார். அவருக்கு நிறைய பந்துகள் மிக மிகத் தாழ்வாகச் சென்றன.

இந்தியா 219/7 என்று உள்ளது. நாளை 250 ரன்களை முதலில் எட்ட வேண்டும் பிறகு 270 ரன்களுக்கு முயற்சி செய்ய வேண்டும். 100 ரன்களுக்குள் இங்கிலாந்து முன்னிலையைச் சுருக்கி பிறகு இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்தை 150 ரன்களுக்கு மடக்கினால் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும். அப்படி ஆகவில்லை என்றால் இப்போது இங்கிலாந்தின் வசம் இருக்கும் இந்த டெஸ்ட் அவர்கள் வெற்றி பெற வழிவகை செய்யும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x