Published : 16 Feb 2024 11:42 AM
Last Updated : 16 Feb 2024 11:42 AM

சர்பராஸ் கான் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்ட தந்தை - பின்னணியில் சூர்யகுமார் யாதவ்

ராஜகோட்: அனில் கும்ப்ளேவிடம் இருந்து டெஸ்ட் தொப்பியை சர்ப்ராஸ் கான் பெற்ற நிகழ்வில் தான் கலந்து கொண்டதற்கு சூர்யகுமார் யாதவ்தான் காரணம் என்று சர்ப்ராஸ் கானின் தந்தை நவுஷத் கான் தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அறிமுக வீரராக இங்கிலாந்து அணிக்கு எதிரான ராஜ்கோட் போட்டியில் சர்பராஸ் கான் களம் கண்டுள்ளார். முதல் சர்வதேச டெஸ்ட் இன்னிங்ஸில் அரை சதம் பதிவு செய்து அசத்தியிருந்தார்.

இந்திய டெஸ்ட் அணியின் 311-வது வீரராக சர்பராஸ் கான் அறிமுகம் ஆகியுள்ளார். டெஸ்ட் அணிக்கான ‘கேப்’-பை பெற்றதும் அதை தனது தந்தையின் கைகளில் கொடுத்து நெகிழ செய்தார். தொடர்ந்து மகனை ஆரத் தழுவிக் கொண்டார் சர்பராஸ் கானின் தந்தை நவுஷத் கான். ‘இந்திய அணிக்காக நான் விளையாடுவதை அப்பா பார்க்க வேண்டுமென விரும்பினேன். அந்த வகையில் எனது கனவு பலித்தது’ என அரை சதம் விளாசிய பிறகு சர்பராஸ் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, அறிமுக நிகழ்வில் கலந்துகொண்ட நவுஷத் கான், ஆனந்தக் கண்ணீர் ததும்ப தனது மகனை வாழ்த்தி இருந்தார். நவுஷத் கான், மும்பையில் கிரிக்கெட் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அவர் சர்பராஸ் கானுக்கும் பயிற்சியாளர். இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் போகுமாறு சொன்ன காரணத்தால் மகனின் அறிமுக டெஸ்ட் போட்டியை பார்க்க மும்பையில் இருந்து ராஜ்கோட் பயணித்துள்ளார் நவுஷத். இதுதொடர்பாக நவுஷத், “ஆரம்பத்தில், நான் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள கூடாது என்றுதான் நினைத்தேன். ஏனென்றால், அது சர்ப்ராஸை ஒருவித அழுத்தத்திற்கு உள்ளாக்கும். அதைத் தவிர எனக்கும் கொஞ்சம் சளி இருந்தது. அதேநேரத்தில் தான் சூர்யகுமார் யாதவ்வின் செய்தி என்னை கிட்டத்தட்ட உருக வைத்தது. சூர்யாவின் அந்த செய்திக்குப் பிறகு, இங்கு வராமல் இருக்க என்னால் முடியவில்லை. ஒரு மாத்திரை சாப்பிட்டுவிட்டு இங்கு வந்துவிட்டேன்” என்றார்.

நவுஷத் கானுக்கு சூர்யகுமார் யாதவ் அனுப்பிய செய்தியில், “உங்கள் உணர்ச்சிகளை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் என்னை நம்புங்கள், கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நான் அறிமுகமானேன். எனது டெஸ்ட் தொப்பியைப் பெறும் நிகழ்வின்போது, என் அப்பாவும் அம்மாவும் என் பின்னால் இருந்தனர். உண்மையில் அந்த தருணம் மிகச் சிறப்பு வாய்ந்தது. இப்படியான தருணங்கள் அடிக்கடி வருவதில்லை. எனவே நீங்கள் செல்ல வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x