Last Updated : 15 Feb, 2018 12:47 PM

 

Published : 15 Feb 2018 12:47 PM
Last Updated : 15 Feb 2018 12:47 PM

ஒப்புக்கொள்கிறேன், எங்களிடம் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லை: காலிஸ் கருத்து

தென் ஆப்பிரிக்கா வீரர்கள் சுழற்பந்து வீச்சை எதிர்கொண்டு விளையாடி பழகாததும், இங்கு தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாததுமே தோல்விக்கு காரணம், இதை ஒப்புக்கொள்கிறேன் என்று தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-1 என்று இழந்தபோதிலும் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடியது.

இதனால், 6 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 எனக் கைப்பற்றி முன்னணியில் உள்ளது. இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர்கள் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்துவீச்சுக்கு தென் ஆப்பிரிக்க வீரர்கள் பெரும்பாலானோர் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். சாஹல் 14 விக்கெட்டுகளையும், யாதவ் 16 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் ஜாக் காலிஸ் தென் ஆப்பிரிக்க அணியின் தோல்வி குறித்து, டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பொதுவாக சிறந்த லெக் ஸ்பின்னர்கள் பந்துகளை கணித்து விளையாட சிறிது நேரம் ஆகும். தென் ஆப்பிரிக்கா வீரர்களைப் பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சை போதுமான அளவில் விளையாடாததும், தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் இல்லாததுமே தோல்விக்கு காரணமாகும்.

சிறந்த லெக் ஸ்பின்னர்கள் இல்லாததை நான் இந்த நேரத்தில் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த காலகட்டம் இளைஞர்கள் கற்றுக்கொள்ளும் காலமும்.

அனுபவம் என்பது கிரிக்கெட்டில் முக்கியமானது. லெக் பிரேக் பந்துவீச்சை கணிப்பதில் இருவகைகள் உள்ளன. பந்துவீச்சாளரின் கையைவிட்டு பந்து வரும்போதே கணிப்பது, 2-வது வகை, பந்து தரையில் பிட்ச் ஆனபின் கணித்து விளையாடுவது. ஆனால், இதை ஒரே நேரத்தில் பேட்ஸ்மன் செய்ய முடியாது.

ஒருவர் அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்றால்தான், அவரால் சிறப்பாகச் செயல்பட முடியும். தனக்கு தெரிந்தவகையில் விளையாடினால், இது போன்ற சிரமங்களைத்தான் சந்திக்க வேண்டியது இருக்கும்.

முன்னாள் வீரர் கிரேம் ஸ்மித்துக்கு பின் வந்தவர்களில் பெரும்பாலான வீரர்களுக்கு சுழற்பந்துவீச்சை கணித்து ஆழ்ந்து அனுபவம் இல்லை.

இப்போதாவது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அனுபவமான வீரர்கள் அணியில் இல்லாவிட்டால், அணியின் நிலை என்னாகும் என்பதை உணர வேண்டும். குறிப்பாக டீவில்லியர்ஸ், டூ பிளசிஸ் ஆகியோர் இல்லாததன் விளைவுதான் வீரர்கள் சுழற்பந்துவீச்சுக்கு திணறுகிறார்கள்.

ஆதலால், இளம்வீரர்களை சர்வதேச கிரிக்கெட் உலகில் அறிமுகப்படுத்தும் முன், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கவனமாக பரிசீலிக்க வேண்டும்.

நான் விளையாடிய காலத்தில் ஒருநாள், டெஸ்ட், டி20 ஆகிய 3 பிரிவுகளிலும் சிறப்பாக விளையாடக்கூடிய ஆல்-ரவுண்டர்கள் இருந்தனர். ஆனால், இப்போது, முழுமையான ஆல்ரவுண்டர்கள் குறைவாக இருக்கிறார்கள்.

இந்திய வீரர் ஹர்திக் பாண்டயா பொறுத்தவரை இளம் வீரராக இருந்தாலும், அதிகமான விஷயங்களை கற்று வருகிறார். நல்ல எதிர்காலம் இருக்கிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பேட்ஸ்மன், பந்துவீச்சாளர்கள், ஆல்ரவுண்டர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் என சமநிலையுடன் வீரர்கள் உள்ளனர். சுப்மான் கில், கம்லேஷ் நாகர்கோட்டி, ஷிவம் மவி ஆகிய இளம் வீரர்களும் உள்ளனர்.

இவ்வாறு காலிஸ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x