Published : 15 Feb 2024 01:32 PM
Last Updated : 15 Feb 2024 01:32 PM

இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுக வீரராக சர்ஃபராஸ் கான்... ஆனந்த கண்ணீரில் நெகிழ்ந்த தந்தை

ராஜ்கோட்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுக வீரராக சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜூரல் களமிறங்கியுள்ளனர்.

ராஜ்கோட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து 3 விக்கெட் இழப்புக்கு 111+ ரன்கள் ஸ்கோர் செய்து விளையாடி வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா நீண்ட இடைவேளைக்குப் பிறகு அரைசதம் அடித்திருக்கிறார்.

இதனிடையே, இந்தப் போட்டியில் இந்தியா தரப்பில் சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். 26 வயதாகும் சர்ஃபராஸ் கான் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பிடிக்க போராடி வந்தார். இத்தனைக்கும் ரஞ்சி ட்ராபி போன்ற உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடியும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. சர்ஃபராஸ் கான், முதல்தர கிரிக்கெட்டில் 45 போட்டிகளில் விளையாடி, 69.85 சராசரி உடன் 3,912 ரன்கள் குவித்துள்ளார். இதில் 14 சதங்களும், 11 அரைசதங்களும் அடக்கம். இந்த நிலையில்தான் ஸ்ரேயஸ் ஐயர், விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய மூவரும் டெஸ்ட் தொடரை தவறவிட்ட நிலையில் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, இன்றைய போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார்.

அவருக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே, டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை வழங்கினார். இந்த நிகழ்வை சர்ஃபராஸின் தந்தை நௌஷாத் கான் மற்றும் சர்ஃபராஸின் மனைவி ஆகியோர் ஆனந்த கண்ணீருடனும் நெகிழ்வுடனும் கண்டுகளித்தனர். அப்போது, தனது மகனின் முதல் தொப்பியை தனது கைகளில் எடுத்து முத்தமிட்ட சர்ஃபராஸின் தந்தை, மகனை ஆரத்தழுவினார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. பலரும் சர்ஃபராஸ் கானுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x