Published : 07 Feb 2018 06:10 PM
Last Updated : 07 Feb 2018 06:10 PM

சானிட்டரி நாப்கின் விழிப்புணர்வு பிரசாரத்தில் ரவி சாஸ்திரி: கோலியும் இணைய வலியுறுத்தல்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரியும் பெண்களுக்கான சானிட்டரி நாப்கின் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் (“pad man”) ஈடுபட்டுள்ளார்.

இதற்காக அவர் கையில் சானிட்டரி நாப்கின் வைத்து, புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் சுகாதாரத்துடன் இருக்க வேண்டி விழிப்புணர்வு பிரசாரத்திலும், அவர்களுக்கான நாப்கின்களை தயாரிப்பதிலும் இருப்பவரின் கதைதான் பேட் மேன் (pad man) திரைப்படமாகும். இந்த திரைப்படம் வரும் 9ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் இந்தி நடிகர் அக் ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைக்கதை எழுதி ஆர். பால்கி இயக்கி உள்ளார்.

தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த முருகானந்தம் அருணாச்சலம் என்ற தொழில்முனைவோர் குறித்த கதைதான் (“padman” ) ஆகும். தனது கிராமத்திலும், வீட்டிலும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் என்னவிதமான துன்பங்களை அனுபவிக்கிறார்கள், சுகாதாரமற்ற வழிமுறைகளைப் பயன்படுத்துகிறார்கள், மூடநம்பிக்கைகளில் இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து முருகானந்தம் வேதனை அடைந்தார்.

அவர்களுக்காக மிகக் குறைந்த விலையில் நாப்கின் தயாரிக்கும் எந்திரத்தை உருவாக்கி நாப்கின் தயாரித்துவழங்குகிறார். முருகானந்தம் உருவாக்கிய எந்திரத்தை பயன்படுத்தி இன்று பல்வேறு கிராமங்களில் பெண்கள் நாப்கின்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்து சம்பாதித்துவருகின்றனர்.

முருகானந்தத்தின் சாதனையைப் பாராட்டி, மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பைப் பெற்று இருக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் கையில் நாப்கினுடன் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

தற்போது தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணியுடன் பயணம் மேற்கொண்டுள்ள ரவி சாஸ்திரி அங்கு இருந்தபடியே நாப்கின் குறித்த விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது-

என்னுடைய கையில் நாப்கின் இருக்கிறது. நடிகர் அக்சய் குமாரின் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு நானும் ஆதரவு தருகிறேன். இதன் மூலம் பெண்கள் காலம் காலமாக கடைபிடிக்கும் மூடநம்பிக்கைகள் உடைத்து எறியப்படும் என்று நம்புகிறேன்.

மாதவிடாய் குறித்த விழிப்புணர்வையும், ஆரோக்கியத்தையும் வெளிப்படையாக பேசட்டும். இந்த விழிப்புணர்வு பிரசாரத்துக்கு இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஆகியோரும் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன், இந்திய பாட்மிண்டன் நடத்திர வீராங்கனை பி.வி.சிந்து கையில் நாப்கின்னை வைத்து விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டார். இவர் போல் ஏராளமான பிரபலங்களும் நாப்கின்கள் மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x