Published : 31 Jan 2024 04:06 PM
Last Updated : 31 Jan 2024 04:06 PM

‘பாஸ்பால்’ என்ற வார்த்தை மெக்கல்லமுக்கே பிடிக்கவில்லை -  பென் ஸ்டோக்ஸ்

பிரெண்டன் மெக்கல்லத்தின் செல்லப்பெயர் ‘Baz’. அவரை அப்படித்தான் சக வீரர்களும் கிரிக்கெட் சகாக்களும் செல்லமாக அழைக்கின்றனர். அவர் இங்கிலாந்து பயிற்சியாளரான பிறகு அடித்து ஆடும் பாணியிலான ஒரு ஆட்டத்தை இங்கிலாந்திடம் புகுத்தினார். “தோல்விகள் கண்டு பயப்பட வேண்டாம். கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் அடித்து ஆடுங்கள். ரசிகர்களை திருப்தி படுத்துங்கள்” என்று ஒரு புதுக்கொள்கையை புகுத்த அது கன்னாபின்னாவென்று ‘கிளிக்’ ஆக, இங்கிலாந்து தொடர் டெஸ்ட் வெற்றிகளைப் பெற்று வருகின்றது. இந்த அதிரடி முறையை ‘பாஸ்பால்’ என்று செல்லமாக அழைக்கத் தொடங்கியது கிரிக்கெட் உலகம்.

ஆனால், இப்படி அழைப்பது பிரெண்டன் மெக்கல்லமுக்கே பிடிக்கவில்லை என்கிறார் பென் ஸ்டோக்ஸ். ஆம்! இந்த முறைப்படி 4வது இன்னிங்ஸில் சேஸிங் செய்து வெற்றி பெறுவதை ஒரு பிராண்டாகவே மாற்றி வருகிறது இங்கிலாந்து. அதேபோல் ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் அஸ்வின், ஜடேஜா ஸ்பின் பவுலிங்கை ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்கூப், ரிவர்ஸ் ஸ்கூப் என்று வெளுத்துக் கட்டி ஆலி போப் 196 ரன்களைக் குவிக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 190 ரன்கள் பின் தங்கியிருந்த போதிலும் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் டெஸ்ட்டை வென்றது.

ஹார்ட்லி என்ற இடது கை ஸ்பின்னர் முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் கையில் செம அடி வாங்கினாலும் தொடர்ந்து அவருக்குப் பவுலிங்கைக் கொடுத்து தயார் செய்தார் பென் ஸ்டோக்ஸ். இது இரண்டாவது இன்னிங்சில் அவர் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்ற உத்வேகமாக விளங்கியது.

இந்நிலையில் பாஸ்பால் என்ற பதம் குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது: “இந்தப் பதம் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட ஒன்று. நாங்கள் இந்தப் பதத்தைப் பயன்படுத்துவதில்லை. மேலும் அந்தப் பயன்பாட்டிலிருந்து விலகியே இருக்கிறோம். நாங்கள் பிரெண்டன் மெக்கல்லமின் பயிற்சியின் கீழ் ஆடிவரும் முறையில் மாற்றம் ஏற்பட்டு வெற்றிகளை பெற்ற பிறகு இந்தப் பெயர் புழக்கத்தில் பிரபலமானது. எங்களுக்கு அந்தப் பதம் பிடிக்கவில்லை. ஏன்? மெக்கல்லமே அந்தப் பதத்தை வெறுக்கிறார். அந்தப் பதம் எங்கள் மீது திணிக்கப்படும் போதெல்லாம் நாங்கள், ‘இங்கிலாந்து இப்படித்தான் டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடும்’ என்று கூறி வருகிறேன்.” என்றார் பென் ஸ்டோக்ஸ்.

பாஸ்பால் என்ற வார்த்தை எந்த அளவுக்குப் பிரபலம் எனில் கடந்த ஆண்டு கொலின்ஸ் ஆங்கில அகராதி அந்த வார்த்தையை தங்கள் பட்டியலில் சேர்த்து அதற்குக் கீழ் வரும் பொருளை கொடுத்துள்ளது: “A style of Test cricket in which the batting side attempts to gain the initiative by playing in a highly aggressive manner.”

இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கிறது. ஸ்பின் மற்றும் பாஸ்பால் ஆட்ட முறை இந்திய குழிப்பிட்சிலேயே வெற்றி பெற்றுத் தந்ததையடுத்து பிரெண்டன் மெக்கல்லம் அடுத்த போட்டிக்கு வேகப்பந்து வீச்சாளரே இல்லாமல் 4 ஸ்பின் பவுலர்களைக் கொண்டு ஆடப்போவதாகக் கூறி வருகிறார். பிப்ரவரி 2-ம் தேதி 2வது டெஸ்ட் தொடங்குகிறது. இந்திய அணியில் ராகுல், ஜடேஜா காயத்தினால் இடம் பெற மாட்டார். ஏற்கெனவே கோலி இல்லை. எனவே ரஜத் படிதார், குல்தீப் யாதவ் அணிக்குள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x