Published : 29 Jan 2024 07:15 AM
Last Updated : 29 Jan 2024 07:15 AM

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

ஹைதராபாத்: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் டாம் ஹார்ட்லி 7 விக்கெட்களைச் சாய்த்து அந்த அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 436 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 80, ஷுப்மன் கில் 23, ஸ்ரேயஸ் ஐயர் 35, கே.எல்.ராகுல் 86, பரத் 41, ரவீந்திர ஜடேஜா 87, அக்சர் படேல் 44 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில்ஜோ ரூட் 4 விக்கெட்களையும் டாம் ஹார்ட்லி, ரெஹான் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

190 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 77 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 316 ரன்கள் குவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று 4-வது நாள் ஆட்டத்தை ஆலி போப் 148 ரன்களுடனும், ரெஹான் அகமது 16 ரன்களுடனும் தொடங்கினர். ரெஹான் அகமது 28 ரன்கள் எடுத்த நிலையில், பும்ரா பந்துவீச்சில் கர் பரத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஆலி போப்புடன் ஜோடி சேர்ந்த டாம் ஹார்ட்லி 52 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஆலி போப் இரட்டை சதத்தை நெருங்கினார். ஆனால் துரதிருஷ்டவசமாக 196 ரன்கள் எடுத்திருந்தபோது, பும்ரா பந்தில் போல்டானார். அவரது ஸ்கோரில் 21 பவுண்டரிகள் அடங்கும். மார்க் வுட் ரன் எடுக்காமலேயே ஆட்டமிழந்தார். இதையடுத்து 102.1 ஓவர்களில் 420 ரன்களுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4, அஸ்வின் 3, ரவீந்திர ஜடேஜா 2, அக்சர் படேல் ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியஅணி விளையாடத் தொடங்கியது. குறைந்த வெற்றி இலக்கு என்பதால் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ரோஹித் சர்மாவும், யஷஸ்விஜெய்ஸ்வாலும் நிதானத்துடன் விளையாடி ரன்களைச் சேர்த்தனர். ஆனால்சுழற்பந்து வீச்சாளர் டாம் ஹார்ட்லி அபாரமாக பந்து வீசி யஷஸ்வி ஜெய்ஸ்வாலை வீழ்த்தினார். அவர் 35 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்தார். இதைத் தொடர்ந்து விளையாட வந்த ஷுப்மன் கில் ரன் கணக்கைத் தொடங்காமலேயே, டாம் ஹார்ட்லி பந்துவீச்சில், ஆலி போப்பிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார்.

இதைத் தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மாவின் விக்கெட்டையும், எல்பிடபிள்யூ முறையில் டாம் ஹார்ட்லி வீழ்த்தினார். ரோஹித் 58 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்திய இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய வீரர்களுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தார். கே.எல். ராகுல் 22 ரன்களிலும், அக்சர் படேல் 17 ரன்களிலும், ஸ்ரேயஸ் ஐயர் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரவீந்திர ஜடேஜா 2 ரன்கள் எடுத்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன்-அவுட்டானார். இதனால் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் என்ற மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

பின்னர் 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கர் பரத்தும், ரவிச்சந்திரன் அஸ்வினும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தது. இந்தக் கூட்டணியையும் டாம் ஹார்ட்லி பிரித்தார். ஹார்ட்லிவீசிய பந்து, கர் பரத்தை ஏமாற்றி ஸ்டம்பை பதம் பார்த்தது. கர் பரத் 59 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார்.

மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்த அஸ்வின், கடைசிகட்ட ஓவரின்போது அவசரப்பட்டு பந்தை அடிக்க கிரீஸிலிருந்து ஏறி வந்தபோது ஸ்டம்பிங் முறையில் அவுட்டானார். அவரும் 28 ரன்கள் எடுத்தார்.

கடைசி விக்கெட்டாக முகமது சிராஜ் 12 ரன்களில் அவுட்டாக இந்தியாவின் 2-வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.பும்ரா 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 69.2 ஓவர்களில் 202 ரன்களுக்குஇந்திய அணி ஆட்டமிழந்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

இந்த போட்டியில் அறிமுகமான இங்கிலாந்து வீரர் டாம் ஹார்ட்லி 62 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்களைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஜோ ரூட், ஜேக் லீச் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

ஆலி போப் ஆட்டநாயகன்: 2-வது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 196 ரன்களைக் குவித்த ஆலி போப் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி: குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்த டெஸ்ட் போட்டிகள் வரிசையில் இந்தப் போட்டி 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதற்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிராக சென்னையில் 1999-ல் நடைபெற்ற போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் 1977-ல் நடைபெற்ற போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்திலும், பாகிஸ்தானுக்கு எதிராக பெங்களூருவில் 1987-ல்நடைபெற்ற போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்திலும், தற்போது இங்கிலாந்துக்கு எதிராக ஹைதராபாத் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வி கண்டுள்ளது.

விசாகப்பட்டினத்தில் 2-வது டெஸ்ட்: இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1- 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் வரும் பிப்ரவரி 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x