Published : 29 Jan 2024 07:50 AM
Last Updated : 29 Jan 2024 07:50 AM

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் | இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சாம்பியன்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார். இது இவர் வெல்லும் முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னரும், ரஷ்ய வீரர் டேனியல் மேத்வதேவும் மோதினர். இந்தப் போட்டியில் ஜன்னிக் சின்னர் 3-6, 3-6, 6-4, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் டேனியல் மேத்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

முதல் 2 செட்களில் ஆக்ரோஷமாக விளையாடினார் டேனியல் மேத்வதேவ். இதனால் முதல் 2 செட்களையும் அவர் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார்.

ஆனால் அடுத்த 3 செட்களிலும் சுதாரித்து ஆடினார் ஜன்னிக் சின்னர். 3 செட்களையும் வென்றால் மட்டுமே பட்டத்தைக் கைப்பற்ற முடியும் என்பதால் ஜன்னிக் சின்னர் அபாரமாக விளையாடினார்.

கடைசி 3 செட்களிலும் சிறப்பாக விளையாடிய ஜன்னிக்சின்னர் 6-4, 6-4, 6-3 என்ற கணக்கில் செட்களை கைப்பற்றி பட்டத்தை வென்றார்.

22 வயதாகும் ஜன்னிக் சின்னர் வெல்லும் முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும் இது. அரை இறுதியில் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சையும், ஜன்னிக் சின்னர் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வெல்லும் முதலாவது இத்தாலி வீரரும் ஜன்னிக் சின்னர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

துரத்தும் துரதிருஷ்டம்: 2021-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் மேத்வதேவ் பட்டம் வென்றிருந்தார். அதைத் தொடர்ந்து அவர் 5 கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிவரை சென்று தோல்வி கண்டுள்ளார். 2021, 2022-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச் சுற்று வரை முன்னேறியிருந்த மேத்வதேவ் அவற்றில் தோல்வி கண்டிருந்தார். தற்போது ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச் சுற்றில் 3-வது முறையாக அவர் தோல்வி கண்டுள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில் அவர் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாத வகையில் அவரை துரதிருஷ்டம் துரத்தி வருவதாக ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x