Published : 02 Feb 2018 01:11 AM
Last Updated : 02 Feb 2018 01:11 AM

விரட்டல் கிங் விராட் கோலி 33-வது சதம்; ரஹானே கூட்டணியுடன் இந்தியா அபார வெற்றி!

 

தென் ஆப்பிரிக்கா அணி தங்கள் நாட்டில் பெற்ற தொடர் வெற்றிகளை (17) கோலி படை முடிவுக்குக் கொண்டு வந்து டர்பன் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. இதன் மூலம் தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

இதனால் முன்னதாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் எடுத்த அபாரமான சதம் வீணானது. விராட் கோலி 33-வது ஒருநாள் சதமான இது வெற்றி விரட்டல் சத எண்ணிக்கையில் 20 ஆக இது அமைந்தது

270 ரன்கள் வெற்றி இலக்கை இந்திய அணி கோலியின் சதம், ரஹானேயின் அபாரமான 79 ரன்களுடன் 45.3 ஒவர்களில் எடுத்து வெற்றி ஈட்டியது. கோலி-ரஹானே கூட்டணி 3-வது விக்கெட்டுக்காக 187 ரன்களைச் சாதித்து டர்பனில் 3-வது விக்கெட்டுக்கான அதிகபட்ச கூட்டணி சாதனை ஆகும்.  விராட்  119 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்து கடைசியில் ஆட்டமிழக்க, தோனி ஒரு புல் ஷாட் பவுண்டரி மூலம் வெற்றி ரன்களை அடித்தார்.

அபாரமாக பந்து வீசிய குல்தீப் யாதவ் “269 நல்ல ஸ்கோர், 45-46 ஓவர்களில் விரட்டி விடுவோம்” என்றார் அதுதான் நடந்தது.

விரட்டல் புகழ் விராட் கோலி தனது 33வது ஒருநாள் சதத்தை அபாரமாக எடுத்து முடித்தார்.

3 ராஜ ஷாட்கள்:

இந்த விரட்டலில் 3 ராஜஷாட்களை நாம் சொல்லியே ஆக வேண்டும். இந்த 3-ல் எது ராஜ ஷாட் என்று கருத்துக் கணிப்பே வைக்கலாம்.

தொடக்கத்தில் ரோஹித் சர்மா, மோர்னி மோர்கெல் வீசிய பவுன்சரை மிக அலட்சியமாக புல் ஷாட்டில் அடித்த சிக்ஸ்.

2-வதாக ஆட்டம் முடியும் தறுவாயில் ரஹானே, கிறிஸ் மோரிஸ் வீசிய குட் லெந்த் பந்தை லாங் ஆனுக்கு மேல் தூக்கி அடித்த மெஜஸ்டிக் சிக்ஸ்.

3-வதாக சதம் அடித்த பிறகு விராட் கோலி, ரபாடா வீசிய சற்றே ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வந்த பந்தை ‘ஆன் த அப்’ என்பார்களே அவ்வகையில் பந்து எழும்பும் போதே கவர் திசை மேல் தூக்கி அடித்த நான்கு ரன்கள்.

இந்த 3 ஷாட்களும் இன்றைய தினத்தின் அற்புதங்கள்!

கோலியின் அபார ஆட்டம்!

எந்த எதிரணியாக இருந்தாலும் கவலையில்லை, எதிரணி வீச்சாளர்கள் எவ்வளவு வேகம் வீசினாலும் கவலையில்லை, கிரீசுக்கு வெளியே நின்று அவர்கள் பந்துக்கு முன்னேறி செல்வது என்பது கோலியின் வழக்கமாகி வருகிறது, இன்றும் ரபாடா, மோர்கெல் 145 கிமீ வேகம் வீசும்போதும் மாறுதல் இல்லை. முதலில் ஒரு பந்து எட்ஜ் ஆனது ஸ்லிப்பில் டுபிளெசிஸுக்கு வலது புறம் கேட்ச் பிடிக்கும் உயரத்தில்தான் சென்றது, மற்றபடி கோலியின் பேட்டிங் தொழில் நேர்த்தி மிகுந்தது.

ஷிகர் தவண் அருமையாக ஆடிவந்த நிலையில் ரன் அவுட் ஆனார், கோலி அழைத்ததைக் காதில் வாங்கவில்லையா, பந்து எங்கு சென்றது என்று தெரியவில்லையா, அல்லது கோலியை அருகில் பார்த்துவிட்டு அவரது விக்கெட்டைக் காப்பாற்ற ஓடினாரா என்று தெரியவில்லை ஷிகர் தவண் 29 பந்துகளில் 6 அருமையான பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து மர்க்கரம் த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். கோலியிடம் கை காண்பித்து ஏதோ கூறினார், கடும் ஏமாற்றத்துடன் பெவிலியன் சென்ற பிறகும் தனக்குத் தானேயும் சஞ்சய் பாங்கரிடமும் ஏதோ பேசிக் கொண்டேயிருந்தார் ஷிகர் தவண். கோலியும் இந்த ரன் அவுட்டில் ஏமாற்றமடைந்தார்.

ஆனால் இது அவரது உறுதியை அதிகப்படுத்தியது நின்றார், பாயிண்ட் மற்றும் கவரில் இரண்டு பவுண்டரிகளை பெலுக்வயோவை விளாசி தனது 33வது சதத்தை எடுத்து முடித்தார். கடந்த 5 ஆண்டுகளாக ஒவ்வொரு 5 இன்னிங்ஸ்களிலும் ஒரு சதம் என்று எடுத்து வருகிறார் கோலி.

ரஹானே இறங்கும் போது இந்திய அணி 67/2 என்று இருந்தது, ஒரு விக்கெட் வீழ்ந்திருந்தால் இவ்வளவு வசதியாக வெற்றி பெற்றிருப்போமா என்பது சந்தேகமே.

இதில் இன்னொன்றையும் கூறியாக வேண்டும், சமீப காலங்களாக தென் ஆப்பிரிக்கா ஒருநாள் வெற்றிகளில் பெரும்பங்களிப்பு செய்து வந்த இம்ரான் தாஹிர் இன்று 10 ஓவர்கள் 51 ரன்கள் விக்கெட் இல்லை. பிளாஸ்டிக் பந்தில் வீசுவது போல் வீசினார், இவர் மட்டுமல்ல மார்க்ரம், டுமினி என்று பிளாஸ்டிக் பந்து பவுலிங் அதிகம் காணக்கிடைத்தது.

முன்னதாக ரோஹித் சர்மா, மோர்கெலை அடித்த அபார சிக்ஸுக்குப் பிறகு ரபாடாவின் 150 கிமீ வேக ஆஃப் ஸ்டம்ப் வெளியே பந்தை மிட் ஆனுக்கு மேல் அடித்த பவுண்டரியும் அசாத்தியமாக இருந்தது. ஆனால் மோர்கெல் பந்து கூடுதலாக எழும்பும் என்று தெரியாமலோ என்னவொ ரபாடாவை அடித்தது போல் ஒரு ஷாட்டை முயன்றார் அசிங்கமாக விக்கெட் கீப்பர் தலைக்கு மேல் கொடியேற்றினார். அதன் பிறகுதான் தவண் ரன் அவுட். மோரிஸ் பந்தை பிளிக் ஆட முயன்றார், பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு லெக் திசையில் மிக அருகிலேயே சென்றது, தவணுக்கு பந்து உண்மையில் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை, திரும்பிப் பார்த்தால் கோலி ஸ்ட்ரைக்கர் முனைக்கு அருகில் ஓடி வந்து கொண்டிருந்தார், தவண் ஓடித்தான் ஆகவேண்டும், ஆனால் மார்க்ரம் த்ரோ ரன்னர் முனை ஸ்டம்பைத் தாக்க தவண் நன்றாக ஆடிவந்த நிலையில் ரன் அவுட் ஆனார், நியாயமாகக் கோபப்பட்டார்.

ரஹானே களமிறங்கும் போது 67/2 என்ற நிலையில் 37 ஓவர்கள் மீதமிருந்தன. இம்ரான் தாஹிர் ஒழுங்காக வீசினால் மட்டுமே வெற்றி பெற முடியும் எனும்போது அவரை ரஹானேவும், கோலியும் அனாயசமாக ஆடினர்.

இருவரும் இணைந்து 189 ரன்களைச் சேர்த்தனர், ரஹானே 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 60 பந்துகளில் அரைசதம் கண்டார், விராட் கோலி 56 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார். இருவரையும் டுபிளெசிஸ் அதிகமாக சிங்கிள்களை எடுக்க அனுமதித்தது போல் தெரிந்தது, களவியூகம் இன்னும் இறுக்கமாக அமைந்திருக்கலாம். கோலி 105 பந்துகளில் சதம் கண்டார்.

ரஹானே 86 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 79 ரன்கள் எடுத்தார், கடைசியில் கிறிஸ் மோரிசை அடித்த சிக்சருக்கு முன்பாக இம்ரான் தாஹிரை ஒரு சிக்ஸ் அடித்திருந்தார்.

கடைசியில் ரஹானே, பெலுக்வயோ பந்தை தூக்கி பவுண்டரிக்கு அடிக்க முயன்று டீப்பில் கேட்ச் ஆனார். விராட் கோலியும் பெலுக்வயோவின் ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட முயன்ற போது டாப் எட்ஜ் ஆகி ரபாடாவிடம் கேட்ச் ஆனது, இதற்கு சற்று முன் தான் தென் ஆப்பிரிக்க பதிலி வீரர் சோண்டோ ஒரு கேட்சை விராட் கோலிக்கு காமெடியாகக் கோட்டை விட்டார்.

தோனி இறங்கி ரபாடா பந்தை மிட்விக்கெட்டில் புல்ஷாட்டில் பவுண்டரி அடித்து வெற்றி ரன்களை எடுத்தார்.

ஆட்ட நாயகன் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x