Last Updated : 08 Jan, 2024 04:28 PM

 

Published : 08 Jan 2024 04:28 PM
Last Updated : 08 Jan 2024 04:28 PM

150+ பதக்கங்கள்... கராத்தேவில் ஜொலிக்கும் கோவை சிறுமி அஸ்மிதா!

கோவை: நாளுக்கு நாள் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறு குற்ற சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், பெண்களின் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகி வருகிறது. ஆண்களுக்கு நிகரானவர்கள்தான் பெண்கள் என்று கூறப்பட்டு வந்தாலும், உடலளவில் பெண்கள் மென்மையானவர்கள்தான். அவர்கள் அப்படிதான் படைக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, ஒவ்வொரு பெண்ணும் தன்னை தற்காத்துக் கொள்ளும் துணிவை, ஏதேனும் ஒரு தற்காப்புக் கலையை கற்பதன் மூலமாக பெற முடியும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்காத சூழலும், பாதுகாப்பு நடவடிக்கையில் தொடர்ந்து தொய்வும் நிலவும் சூழ்நிலையில், பெண்கள் பாதுகாப்பு என்ற தலைப்பில் பாரதியார் குறிப்பிட்ட 'எனதுரிமை, எனதுயிர், என் வாழ்வு என வெகுண்டெழு! ரௌத்திரம் பழகு! என்ற வரிக்கேற்ப, சமீப காலங்களாக தங்களை தற்காத்துக்கொள்ளும் வலிமை படைத்தவர்களாக மாறி வருகிறார்கள் பெரும்பாலான பெண்கள். தற்காப்பு கலை பயிற்சி பெறுபவருக்கு முழு தசை மண்டலமும் ஒருங்கிணைந்து செயல்பட தூண்டப்படுவதுடன், தம் மீதான நம்பிக்கையையும் வலுப்படுத்துகிறது.

அந்த வகையில், எந்தவித ஆயுதங்களும் இல்லாமல், உடலை மட்டுமே கொண்டு தற்காக்கும் கலையான கராத்தேவை தேர்வு செய்து, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு வெற்றி கோப்பைகளுடன் வலம் வருகிறார் கோவையை சேர்ந்த Ruh Continuum என்ற தனியார் பள்ளி சிறுமி அஸ்மிதா. இவரது பெற்றோர் தொழிலதிபரான அருண், ஸ்வேதா, சகோதரி அஞ்சனா.

இதுதொடர்பாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த அஸ்மிதாவிடம் பேசும்போது, ‘‘வெள்ளை நிற சீருடைதான் கராத்தே மீது என் கவனம் திரும்ப முதல் காரணம். நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் இருந்து கீழே பார்க்கும்போது, வளாகத்தில் தினமும் வெள்ளை சீருடையுடன் பலர் கராத்தே பயிற்சி செய்து கொண்டிருப்பார்கள்.

அதை பார்க்கும்போதெல்லாம், எனக்கும் கராத்தே பயற்சிக்கு செல்ல வேண்டுமென்ற ஆசை இருந்து வந்தது. இதை அம்மாவிடம் கூறினேன். ஆனால், ஒன்று அல்லது இரண்டு பயிற்சி வகுப்புகளுக்கு மேல் நீ போகமாட்டேனு அவங்க சொன்னாங்க. ஆனால், பயிற்சிக்கு சென்ற பிறகு ஆர்வம் அதிகமாக, தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ள அம்மாவும், அப்பாவும் உறுதுணையாக இருந்தார்கள்.

என்னை நான் தற்காத்துக்கொள்வது, பிறருக்கு உதவுவது ஆகியவையே கராத்தே தற்காப்பு கலையை தேர்வு செய்ய காரணம். 3 வயதில் கராத்தே பயிற்சியை தொடங்கினேன். இதில் கட்டா, குமிட் என இரண்டு பிரிவுகள் உள்ளன. கட்டா (படிவங்கள்) என்பது 10 பேர் சுற்றி நின்று தாக்க முற்படும்போது எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்ற செயல்முறை. குமிட் (சண்டை) என்பது இருவர் மட்டும் சண்டையிடும் முறை.

இந்த இருபிரிவிலும் பயிற்சி மேற்கொண்டு வந்தாலும், பிரதானமாக கட்டா பிரிவில் பங்கேற்று வருகிறேன். இதில் மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் பங்கேற்று பதக்கங்களையும், கோப்பைகளையும் வென்றுள்ளேன். 5 வயதில் முதல் பதக்கத்தை வென்ற தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

மாவட்ட, மாநில, தேசிய அளவில் சிறப்பிடத்துடன், முதல் முறையாக பிளாக் பெல்ட் பெற்று, 8 முதல் 9 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தாய்லாந்து நாட்டில் நடந்த சர்வதேச அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வென்றேன். அப்போது, என்னையும் சேர்த்து இந்தியா சார்பில் 50 பேர் சென்றிருந்தோம். இதில் எனக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.

சமீபத்தில் 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வென்றேன். இதற்காக எனது பயிற்சியாளர் அறிவழகன் சாருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இதுவரை 150-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும், கோப்பைகளையும் வென்றுள்ளேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹரியானா தலைநகர் சண்டிகரில்
நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தங்கப்
பதக்கம் வென்ற அஸ்மிதா.

இந்த வயதில் தினமும் காலை பயிற்சி, பள்ளி முடிந்தவுடன் மீண்டும் மாலை பயிற்சி என எந்தவித சோர்வும் இன்றி முழு திறனையும் வெளிப்படுத்தினால் மட்டுமே தடைகளை தாண்டி எதிலும் வெற்றி பெற்றுவிடலாம். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வெல்வதே இலக்கு’’ என்கிறார்.

அஸ்மிதாவின் கராத்தே மீதான ஆர்வம் குறித்து தந்தை அருண் கூறும்போது, ‘‘அஸ்மிதா என்ற பெயருக்கு கூர்மை என்று பொருள்படும். அதன்படி, அவர் செல்லும் பாதையில் தெளிவாகவும், கூர்மையாகவும் செயல்படுகிறார். கராத்தேவில் மொத்தம் 8 பிளாக் பெல்ட் உள்ளது. தற்போது, 12 வயதிலேயே 3-வது பிளாக் பெல்ட் பெற்றுள்ளார். அஸ்மிதாவின் ஆர்வம், அர்ப்பணிப்பு உணர்வு எங்களை பிரமிக்க வைக்கிறது.

இதுபோக, நடனம், பாட்டு உட்பட கலை துறையிலும் சாதனை படைத்து வருகிறார். அவரது தாயார் ஸ்வேதாவும் கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்றவர். மேலும், மாரத்தான், சைக்கிளிங், ஸ்கேட்டிங் உட்பட பிற விளையாட்டுகளிலும் சிறந்து விளங்குகிறார். இறைவன் எங்களுக்கு அளித்த பரிசு அஸ்மிதா. ஒலிம்பிக்கில் கராத்தே பிரிவில் மகளை பங்கேற்க செய்து, இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வெல்வதே லட்சியம். அதை அஸ்மிதாவும் திறம்பட செய்து முடிப்பார்’’ என்கிறார் நம்பிக்கையுடன்..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x