Published : 22 Jan 2018 04:43 PM
Last Updated : 22 Jan 2018 04:43 PM

4-வது டி20 சதம் அடித்தார் ரெய்னா: 49 பந்துகளில் அதிரடி; உ.பி. வெற்றி!

கொல்கத்தாவில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட்டில் உத்தரப் பிரதேச அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா பெங்காள் அணிக்கு எதிராக 49 பந்துகளில் சதம் கண்டு தனது 4-வது டி20 சத எடுத்தார்.

ரெய்னா மொத்தத்தில் 13 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 59 பந்துகளில் 126 ரன்கள் விளாசி நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

டாஸ் வென்ற உ.பி. அணிக்கு முதல் ஓவரிலேயே டிண்டா அதிர்ச்சியளித்தார். தொடக்க வீரர் சமர்த் சிங் டக் அவுட் ஆகி வெளியேற, முதல் டவுனில் இறங்கினா கேப்டன் ரெய்னா. வலது கை வீச்சாளர் முகேஷ் குமாரை 4-வது ஓவரில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 20 ரன்கள் விளாசினார். கோஷ் வீசிய அடுத்த ஓவரில் மீண்டும் 2 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்து 20 பந்துகளில் 44 என்று அதிரடி காட்டிய ரெய்னா, அடுத்த முகேஷ் குமார் ஓவரில் 2 பவுண்டரிகளை விளாசி 22 பந்துகளில் அரைசதம் கடந்தார், பிறகு அரைசத மகிழ்ச்சியை அடுத்த பந்தை சிக்சருக்குத் தூக்கி கொண்டாடினார்.

பிறகு இடது கை வேகப்பந்து வீச்சாளர் பிரமானிக் வந்தார், ரெய்னா அவரை சிக்சருடன் வரவேற்றார். கடைசியில் 16வது ஓவரில் 49 பந்துகளில் சதம் கண்டார் ரெய்னா. அதன் பிறகு டிண்டாவை 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸ் அடித்தார், 20-வது ஓவரில் ரெய்னா மீண்டும் முகேஷ் குமாரை சிக்ஸ் விளாசினார். 59 பந்துகளில் 13 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 126 ரன்கள் எடுத்து ரெய்னா நாட் அவுட்டாக உ.பி. அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது. இவருடன் நாத் என்பவர் 43 பந்துகளில் 80 ரன்கள் விளாசி நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இருவரும் சேர்ந்து 163 ரன்களை சுமார் 13 ஓவர்களில் 3-வது விக்கெட்டுக்காக சாத்தி எடுத்தனர்.

தொடர்ந்து ஆடிய பெங்கால் அணி 16.1 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி கண்டது. இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x