Published : 20 Dec 2023 06:46 AM
Last Updated : 20 Dec 2023 06:46 AM

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: 2-வது வெற்றியை பெற்றார் குகேஷ்

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ‘சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்’ சாம்பியன்ஷிப் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் 5-வது சுற்று ஆட்டத்தில் நேற்று இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ், ஹங்கேரியின் சனான் சுகிரோவுடன் மோதினார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 40-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இதன் மூலம் அவருக்கு முழுமையாக ஒரு புள்ளி கிடைத்தது. இந்த தொடரில் குகேஷ் கைப்பற்றும் 2-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் குகேஷ் 3.5 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான ஹரிகிருஷ்ணா தனது 5-வது சுற்றில் ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூடன் மோதினார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹரிகிருண்ஷா 51-வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிரா செய்தார். இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, அமெரிக்காவின் லெவோன் அரோனியன் மோதிய ஆட்டம் 55-வது காய் நகர்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது. செர்பியாவின் அலெக்சாண்டர் ப்ரெட்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் 56-வது நகர்த்தலின் போது உக்ரைனின் பாவெல் எல்ஜனோவ் வெற்றி பெற்றார்.

5 சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் டி.குகேஷ் 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஹரிகிருஷ்ணா, பாவெல் எல்ஜனோவ் ஆகியோர் தலா 3 புள்ளிகளுடன் முறையே 2 மற்றும் 3-வது இடம் வகிக்கின்றனர்.

அமெரிக்காவின் லெவோன் அரோனியன், ஈரானின் பர்ஹாம் மக்சூட்லூ, இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் முறையே 4 முதல் 6-வது இடங்களில் உள்ளனர். ஹங்கேரியின் சனான் சுகிரோவ் 2 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், செர்பியாவின் அலெக்சாண்டர் ப்ரெட்கே ஒரு புள்ளியுடன் 8-வது இடத்திலும் உள்ளனர்.

6-வது நாளான இன்று நடைபெறும் 6-வது சுற்று ஆட்டங்களில் டி.குகேஷ் - பாவெல் எல்ஜனோவ், லெவோன் அரோனியன் - அலெக்சாண்டர் ப்ரெட்கே, அர்ஜுன் எரிகைசி - பர்ஹாம் மக்சூட்லூ, ஹரிகிருஷ்ணா - சனான் சுகிரோவ் மோதுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x