Published : 07 Dec 2023 05:26 AM
Last Updated : 07 Dec 2023 05:26 AM

BAN vs NZ 2-வது டெஸ்ட் போட்டி | 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேசம்: நியூஸிலாந்தும் 5 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்

மிர்பூர்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்தது.

மிர்பூரில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்தவங்கதேச அணியானது நியூஸிலாந்தின் சுழற்பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. தொடக்க வீரர்களான ஜாகீர் ஹசன் 8 ரன்னில் மிட்செல் சாண்ட்னர் பந்திலும், மஹ்முதுல் ஹசன் ஜாய் 14 ரன்னில் அஜாஸ் படேல் பந்திலும் ஆட்டமிழந்தனர். மொமினுல் ஹக் 5, கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 9 ரன்களில் நடையை கட்டினர்.

47 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் முஸ்பிகுர் ரகிம், ஷஹதத் ஹொசைனுடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க முயன்றார். நிதானமாக விளையாடிய முஸ்பிகுர் ரகிம் 83 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்த நிலையில் பீல்டிங்கிற்கு இடையூறு செய்ததாக ஆட்டமிழந்து வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு ஷஹதத் ஹொசைனுடன் இணைந்து முஸ்பிகுர் ரகிம் 57 ரன்கள் சேர்த்தார்.

ஷஹதத் ஹொசைன் 102 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்த நிலையில் கிளென்பிலிப்ஸ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து நூருல் ஹசன் 7, மெஹிதி ஹசன் 20, தைஜூல் இஸ்லாம் 6, ஷோரிபுல் இஸ்லாம் 10 ரன்களில் நடையை கட்ட வங்கதேச அணி 66.2 ஓவர்களில் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. நயீம் ஹசன் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நியூஸிலாந்து அணி தரப்பில் மிட்செல் சாண்ட்னர், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் அஜாஸ் படேல் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணியும் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் தடுமாறி விக்கெட்களை பறிகொடுத்தது. டாம் லேதம் 4, ஹென்றி நிக்கோல்ஸ்1 ரன்னில் தைஜூல் இஸ்லாம் பந்தில் நடையை கட்டினர். டேவன் கான்வே 11 ரன்னில் மெஹிதி ஹசன் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்தார். கேன்வில்லியம்சன் 13, டாம் பிளண்டல் ரன் ஏதும் எடுக்காமல் மெஹிதி ஹசன் பந்தில் வெளியேறினர்.

முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் நியூஸிலாந்து அணி 12.4 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்தது. டேரில் மிட்செல் 12, கிளென் பிலிப்ஸ் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச அணி சார்பில் மெஹிதி ஹசன் 3 விக்கெட்களையும், தைஜூல் இஸ்லாம் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். கைவசம் 5 விக்கெட்கள் இருக்க 117 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்து விளையாடுகிறது நியூஸிலாந்து அணி.

விசித்திர முறையில் அவுட்: வங்கதேச அணியின் சீனியர் பேட்ஸ்மேனான முஸ்பிகுர் ரகிம் 35 ரன்கள் எடுத்த நிலையில் பீல்டிங்கிற்கு இடையூறு செய்ததாக ஆட்டமிழந்து வெளியேறினார். 41-வது ஓவரை கைல் ஜேமிசன் வீசிய நிலையில் முஸ்பிகுர் ரகிம் தடுப்பாட்டம் மேற்கொண்டார். பந்து மட்டையில் பட்டு ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே சென்ற நிலையில் முஸ்பிகுர் ரகிம் விலகிச் சென்று பந்தை கையால் தட்டி விட்டார்.

இதையடுத்து நியூஸிலாந்து வீரர்கள் முறையீடு செய்ய 3-வது நடுவர் அஹ்சன் ராஸா ஆய்வு செய்து முஸ்பிகுர் ரகிம் அவுட் என அறிவித்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பீல்டிங்கிற்கு இடையூறு செய்து ஆட்டமிழந்த 9-வது வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார் முஸ்பிகுர் ரகிம். இதற்கு முன்னர் ‘ஹேண்டில் தி பால்’ என்ற முறையிலேயே நடுவர்கள் அவுட் கொடுத்து வந்தனர். ஆனால் கடந்த 2017-ம் ஆண்டில் விதிமுறைகள் திருத்தப்பட்டன. இதில் ‘ஹேண்டில் தி பால்‘ அவுட் முறை பீல்டிங்கிற்கு இடையூறு செய்தல் என்ற விதியின் கீழ் சேர்க்கப்பட்டது. இதனாலேயே தற்போது நடுவர்கள் பீல்டிங்கிற்கு இடையூறு செய்ததாக முஸ்பிகுர் ரகிமை வெளியேற்றி உள்ளனர். இந்த வகையில் ஆட்டமிழந்த முதல் வங்கதேச வீரர் என்ற மோசமான சாதனைக்கும் உரியவராகி உள்ளார் முஸ்பிகுர் ரகிம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x