

சென்னை: ‘ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டால் நிதியில்லை என கூறும் தமிழக அரசு மக்களுக்கு நன்மை இல்லாத பார்முலா 4 கார் பந்தயத்துக்கு ரூ.40 கோடி ஒதுக்கியுள்ளது. எனவே, இந்த பந்தயத்தை இருங்காட்டுக்கோட்டை வளாகத்தில் நடத்தினால் தேவையற்ற செலவுகள் ஏற்படுவதை தடுக்கலாம்’ எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில டிஎன்பிஎஸ்சி முன்னாள் உறுப்பினர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் அரசு வழக்கறிஞரும், முன்னாள் டிஎன்பிஎஸ்சி உறுப்பினருமான பாலுசாமி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “இந்த பந்தயம் நடத்துவதற்கு பொதுமக்களிடம் ஒப்புதல் கேட்கவில்லை. இந்த பந்தயம் நடத்த வேண்டுமென பொதுமக்கள் யாரும் கோரிக்கை வைக்கவில்லை. அரசு செலவில் இதுபோன்ற சாகச விளையாட்டுகளை நடத்துவது சட்டவிரோதமானது. சாலையில் பந்தயம் நடத்துவதால் சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும் உயிரிழப்பு உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது.
தீவுத்திடலைச் சுற்றி பந்தயம் நட்த்துவதால் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு சிரமம் ஏற்படும். ஆசியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டால் நிதியில்லை என அரசு சொல்லும் போது மக்களுக்கு நன்மை இல்லாத இந்த திட்டத்துக்கு ரூ.40 கோடி ஒதுக்கியுள்ளது. எனவே, இந்த பந்தயத்தை இருங்காட்டுக்கோட்டை வளாகத்தில் நடத்தினால் தேவையற்ற செலவுகள் ஏற்படுவதை தடுக்கலாம்" என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக இன்றே விசாரிக்கக் கோரி நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிடப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள் நாளை (டிச.1) விசாரிப்பதாக கூறினர்.
பார்முலா 4 பந்தயம்: பார்முலா ரேஸிங் சர்க்யூட் இந்தியாவின் முதல் இரவு ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் வரும்டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இந்த பந்தயம் சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்தப்படுகிறது. பந்தயம் தீவுத் திடலில் தொடங்கி ஃபிளாக் ஸ்டாஃப் ரோடு, அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத் திடலில் முடிவடையும். இந்த போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் முதல் முறையாக இரவுப் போட்டியாக சாலைகள் வழியாக நடத்தப்படுகின்ற மிகப்பெரிய மோட்டார் ரேஸ் இதுவாகும். இந்த சிறப்புமிக்க இரண்டு சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்தியா மற்றும் வெளிநாடுக ளிலிருந்து ஆண் மற்றும் பெண் ஓட்டுநர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.