

சென்னை: பார்முலா ரேஸிங் சர்க்யூட் இந்தியாவின் முதல் இரவு ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் வரும்டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இந்த பந்தயம் சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்தப்படுகிறது. பந்தயம் தீவுத் திடலில் தொடங்கி ஃபிளாக் ஸ்டாஃப் ரோடு, அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத் திடலில் முடிவடையும். இந்த போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் முதல் முறையாக இரவுப் போட்டியாக சாலைகள் வழியாக நடத்தப்படுகின்ற மிகப்பெரிய மோட்டார் ரேஸ் இதுவாகும். இந்த சிறப்புமிக்க இரண்டு சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்தியா மற்றும் வெளிநாடுக ளிலிருந்து ஆண் மற்றும் பெண் ஓட்டுநர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டிக்கான முன்னேற்பாடு பணிகளை கடந்த சில தினங்களுக்கு முன்னர்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து தலைமைச் செயலகத்தில், ஃபார்முலா ரேசிங் சர்க்யூட் போட்டியைச் சிறப்பாக நடத்துவது தொடர்பாக அரசுத் துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயதிநி ஸ்டாலின், போட்டிக்கான டிக்கெட் விற்பனையைத் தொடங்கி வைத்து முதல் டிக்கெட்டையும் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை பேடிஎம் இன்சைடர்இணையதளத்தில் தொடங்கியுள்ளது. டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை ரூ.1,699 எனவும், அதிகபட்ச விலை 19,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.