Published : 22 Jul 2014 08:03 AM
Last Updated : 22 Jul 2014 08:03 AM

லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி: 28 ஆண்டுகளுக்கு பிறகு தோனி தலைமையில் சாதனை

வரலாற்றுச் சிறப்புமிக்க லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

1986-ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதே இதற்கு முன்பு இந்திய அணி இந்த மைதானத்தில் பெற்ற கடைசி வெற்றியாகும். இதுவே லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பெற்ற ஒரே வெற்றியாக இருந்தது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி இங்கு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனான தோனியின் சாதனைப் பயணத்தில் லார்ட்ஸ் மைதானத்தில் பெற்றுள்ள வெற்றி முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

சச்சின், ராகுல் திராவிட், லட்சுமண், கங்குலி போன்ற அனுபவ வீரர்கள் விளையாடியபோதுகூட இந்தியாவால் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தை வெல்ல முடியாத நிலை இருந்தது. இப்போது இளம் இந்திய வீரர்கள் லார்ட்ஸில் இங்கிலாந்தை வீழ்த்தி சாதித்து விட்டனர்.

லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து இடையே இதுவரை 16 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று உள்ளன. இதில் 11 முறை இங்கிலாந்து வென்றுள்ளது. 4 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. ஓர் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. திங்கள்கிழமை முடிவடைந்த 17-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்றுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 295 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 319 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா 342 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங்கை தொடர்ந்த இங்கிலாந்து 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2-வது இன்னிங்ஸில் 7 விக்கெட் வீழ்த்திய இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக இருந்த இஷாந்த் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

அந்நிய மண்ணில் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா டெஸ்ட் போட்டியில் இப்போதுதான் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இஷாந்த் சர்மாவின் வேகத்தில் வீழ்ந்தது இங்கிலாந்து

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடி யாமல் இங்கிலாந்து வீரர்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதன் மூலம் இந்தியா லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பதிவு செய்தது.

319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து அணிக்கு இந்தியா நிர்ணயித்தது. 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன்களை எடுத்திருந்தது.

இதனால் இந்தியா வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதி யானது. எனினும் 5-வது நாளான திங்கள்கிழமை பேட்டிங்கை தொடர்ந்த ஜோ ரூட், மொயீன் அலி ஆகியோர் இந்தியாவுக்கு நெருக் கடி அளிக்கும் வகையில் பொறுமையாக பேட்டிங் செய்தனர்.

ஸ்கோர் 173 ஆக இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. மொயீன் அலி 39 ரன்களில் (147 பந்துகள்) இஷாந்த் சர்மா பந்து வீச்சில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய மேட் பிரையரால் 4 ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடிக்க முடிந்தது. அவரையும் இஷாந்த் சர்மா வெளியேற்றினார்.

இதையடுத்து இங்கிலாந்து விக்கெட்டுகள் வேகமாக விழத் தொடங்கின. ஸ்டோக்ஸ் ரன் ஏதுமின்றி வெளியேறினார். தாக்குப் பிடித்து விளையாடிய ரூட் கடைசி கட்டத்தில் அதிரடி காட்ட முயன்று தோல்வியடைந்தார். அவர் 146 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதில் 7 பவுண் டரிகள் அடங்கும்.

அடுத்து வந்த பிராட் 8 ரன்களி லும், ஆண்டர்சன் 2 ரன்களிலும் வெளியேறினர். இதனால் இங்கி லாந்தின் 2-வது இன்னிங்ஸ் 223 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

மறக்க முடியாத வெற்றி தோனி

வெற்றிக்குப் பின் கேப்டன் தோனி கூறியது: இது மறக்க முடி யாத வெற்றி. அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் பலர் இதுவரை இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடியது இல்லை. எனினும் வெற்றி பெற்று சாதனை படைத்துவிட்டார்கள்.

இங்கிலாந்தில் 2011-ம் ஆண்டு அடைந்த தோல்வியில் இருந்து கற்றுக் கொண்ட பாட மும் இந்த வெற்றிக்குக் காரணம் என்பதை நான் கூறியாக வேண்டும். இஷாந்த சர்மாவின் பந்து வீச்சு மிகச் சிறப்பாக அமைந்தது.

ஜடேஜா கடைசி கட்ட நெருக்கடியிலும் சிறப்பாக விளை யாடினார். அவர் இதேபோன்று விளையாட வேண்டும் என்று தோனி கூறினார்.

7 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது பெற்ற இஷாந்த் சர்மா கூறியது: முரளி விஜய், ரஹானே, ஜடேஜா, புவனேஸ்வர் குமார் ஆகியோரது சிறப்பான பேட்டிங் இந்த டெஸ்ட் போட்டியில் நாங்கள் வெல்ல முக்கியக் காரணமாக இருந்தது.

நான் எடுத்த 7 விக்கெட்டுகள் எனக்கானது என்று நினைக்க வில்லை. கேப்டன் தோனியே அந்த விக்கெட்டுகளுக்கு காரணம். அவர் கூறிய ஆலோசனைப்படியே நான் பந்து வீசினேன். நீங்கள் போது மான அளவுக்கு உயரமாக இருக்கிறீர்கள். எனவே பவுன்சர் களை வீசுங்கள் என்று கேப்டன் என்னிடம் கூறினார். அதையே நான் பின்பற்றினேன் என்று இஷாந்த் சர்மா கூறினார்.

சுருக்கமான ஸ்கோர்

* இந்தியா முதல் இன்னிங்ஸ் 295 ஆல் அவுட் (ரஹானே 103, புவனேஷ்வர் குமார் 36, ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 வி)

* இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ் 319 ஆல் அவுட் (பேலன்ஸ் 110, பிளங்கெட் 55*, புவனேஷ்வர் குமார் 6 வி)

* இந்தியா 2-வது இன்னிங்ஸ் 342 ஆல் அவுட் (முரளி விஜய் 95, ஜடேஜா 68, ஸ்டோக்ஸ் 3 வி)

* இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸ் 223 ஆல் அவுட் (ரூட் 66, மொயீன் அலி 39, இஷாந்த் சர்மா 7வி)

கபில் தோனி ஒற்றுமைகள்

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது, லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற்றது என முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கும், இப்போதைய கேப்டன் தோனிக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளன.

இந்திய அணிக்கு முதல்முறையாக 1983-ல் உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டன் கபில். அதன் அதற்கு அடுத்தபடியாக 2011ல் உலகக் கோப்பையை வென்று தந்தவர் தோனி. சரியாக 28 ஆண்டுகள் கழித்து தோனி தலைமையில் இந்தியா உலகக் கோப்பையை வென்றது. இதே போல கபில் தேவ் தலைமையில் 1986-ல் இந்திய அணி முதல்முறையாக லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. அதன் பிறகு சரியாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையிலான அணி மீண்டும் லார்ட்ஸில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது.

1983-ல் உலகக் கோப்பையை வென்ற பிறகு சரியாக 3 ஆண்டுகளுக்குப் பின் கபில் தலைமையில் இந்தியா லார்ட்ஸில் வெற்றி பெற்றது. 2011-ல் உலகக் கோப்பையை வென்ற பிறகு 3 ஆண்டுகளுக்குப் பிறகு தோனி தலைமையில் இந்தியா லார்ட்ஸில் மீண்டும் வென்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x