Published : 03 Jan 2018 01:19 PM
Last Updated : 03 Jan 2018 01:19 PM

முன்னால் வந்து ‘பாசிட்டிவ்’ ஆக ஆடும் பயிற்சியில் இந்திய அணி!

கேப்டவுனில் ஜன.5ம் தேதி முதல் டெஸ்ட் போட்டித் தொடங்கும் நிலையில் இந்திய அணியினர் தங்களது கால் நகர்த்தலைத் துல்லியமாக்கி ‘பாசிட்டிவ்’ ஆக ஆடப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அதாவது எந்தப் பந்துகளை ஆடுவது எந்தப் பந்துகளை ஆடாமல் விடுவது, எந்தப் பந்துகளை முன்னால் வந்து ட்ரைவ் ஆடுவது, ரன் எடுப்பது எந்தப் பந்துகளுக்கு பின்னால் சென்று ஆடுவது என்று தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் லெந்தைக் கற்பனையாகக் கொண்டு இந்திய பேட்ஸ்மன்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரஹானே, விஜய், ராகுல், புஜாரா, விராட் கோலி, ரோஹித் சர்மா பார்த்திவ் படேல், புவனேஷ்வர் குமார் என்று அனைவரும் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டனர். சஞ்சய் பாங்கர் இவர்களுடன் தீவிர கலந்தாலோசனையில் ஈடுபட்டார்.

ஷிகர் தவண் முதல் டெஸ்ட்டில் ஆட முடியாவிட்டாலும் அவரும் பயிற்சியில் ஈடுபட்டார், தவண் குணமடைந்து விட்டார், ஆனால் விஜய், ராகுல் தொடக்க வீரர்கள் என்பதில் இந்திய அணி நிர்வாகம் செட்டில் ஆகிவிட்டது போல் தெரிகிறது.

முன்னால் வந்து ஆடுவதில் இந்திய அணியில் சிறந்தவர் சச்சின் டெண்டுல்கர், எப்போதெல்லாம் அவர் ஆக்ரோஷமாக முன்னால் வந்து ஆடுகிறாரோ அந்த இன்னிங்ஸ்களில் சோபித்துள்ளார். முன் காலில் வந்து பந்தை அதன் லெந்தில் சந்திக்கும் போது ஸ்விங் ஒன்றும் செய்யாது என்பது கிரிக்கெட் நம்பிக்கை, ஆனாலும் ஸ்டீவ் ஸ்மித் அனைத்தையும் பின் காலில் சென்று ஆடுகிறார், மார்க் வாஹ் பின் காலில் சென்று பந்துகள் ஸ்விங் ஆகி முடிந்த பிறகு ஆடுவார்.

பேட்ஸ்மென்கள் நிற்கும் இடத்திலிருந்து 5மீ-க்கு நெருக்கமாக வரும் பந்துகளுக்கு முன்னால் வந்து ஆடவும், 4மீ-க்கு நெருக்கமாக வரும் பந்துகளை டிரைவ் ஆடவும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்காலில் ஆடுவதுதான் இந்திய பேட்ஸ்மென்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதாகும், ஏனெனில் பின்னால் சென்று ஆடுவது சில வேளைகளில் எல்.பி.வாய்ப்பை அதிகரிக்கும். ஏனெனில் மட்டையை விரைவில் இறக்க முடியாத வீரர்கள் நம் வீரர்கள். V-யில் ஆடுவது என்று கூறுவார்கள் அதற்கு மட்டை நேராக வர வேண்டும், இப்படியாடினால் தென் ஆப்பிரிக்க பிட்ச்களில் பாதுகாப்பு, ஸ்கொயர் ஆஃப் த விக்கெட்டில் ஆடுவதை குறைந்தது 2 மணி நேரங்களுக்குத் தவிர்க்க வேண்டும். தென் ஆப்பிரிக்க பவுன்ஸ் பிட்ச்களில் அதிகம் எல்.பி. ஆக வாய்ப்பில்லை எனும்போது, 5மீக்கு வெளியே பிட்ச் ஆகும் பந்துகளை பாதுகாப்பாக விட்டு விட பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

புஜாரா இது பற்றி கிரிக் இன்போ இணையதளத்துக்குக் கூறும்போது, “பவுன்ஸ் பிட்ச்களில் பந்தை ஆடாமல் விடும் முடிவு முக்கியமானது அதேவேளையில் ரன்கள் ஸ்கோர் செய்வதும் முக்கியம், இதற்காகத்தான் முன்னால் வந்து ஆடுவது முக்கியமாகும்” என்றார்.

விராட் கோலி கிரீஸிற்கு வெளியே வந்து நின்று ஆடுகிறார், இது ஒரு விதத்தில் நல்லது மற்றொரு விதத்தில் கெடுதல். கெடுதல் ஏனெனில் விட்டு விட வேண்டிய பந்திற்கும் மட்டையைக் கொண்டு சென்று எட்ஜ் ஆகும் வாய்ப்பு உள்ளது. நல்லது என்னவெனில் எல்.பி.யைத் தவிர்க்கலாம் இன்னொன்று அதிக பந்துகளை டிரைவ் ஆடும் வாய்ப்பு கிட்டும்.

பிட்ச் புல்தரையாக உள்ளது, அபாயகரமானதாக இல்லாவிட்டாலும் வேகம், பவுன்ஸ் இருக்கவே செய்யும் என்று தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் கிப்சன் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற முடிந்தால், அதனைச் சாதிக்க முடிந்தால் இது சிறந்த இந்திய அணி என்ற நிலையை எட்டும் என்று கூறிய புஜாரா, அதற்கான உழைப்பில் இருந்து வருவதாகத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x