Published : 10 Nov 2023 07:28 PM
Last Updated : 10 Nov 2023 07:28 PM

“இந்திய கேப்டன் பொறுப்பை ஏற்க ரோகித்தை நான்தான் கட்டாயப்படுத்தினேன்” - சவுரவ் கங்குலி

கொல்கத்தா: "இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்க ரோகித் சர்மா முதலில் விரும்பவில்லை. அவரிடம் நான்தான் கட்டாயப்படுத்தினேன்" என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி - ரோகித் சர்மா இடையேயான கேப்டன்ஷிப் மாற்றம் மர்மம் நிறைந்த ஒன்றாகவே இருந்து வருகிறது. 2021 டி20 உலகக் கோப்பை தோல்விக்கு பின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலியை அதே ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரின்போது ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து முன்னறிவிப்பின்றி நீக்கியது பிசிசிஐ. தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அணியை வழிநடத்தி இருந்தார் கோலி. 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை இழந்ததும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இதன்பின் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். இந்த விலகல்களுக்கும் நியமனங்களுக்கும் பின்னணியில் இருப்பதாக அப்போது சொல்லப்பட்ட பெயர் அப்போதைய பிசிசிஐ தலைமை பொறுப்பில் இருந்த சவுரவ் கங்குலி.

விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறிய விஷயத்தில் திரைக்குப் பின்னால் என்ன நடந்தது என்பது இன்னும் தெரியாத நிலையில், அப்போது கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மா ஏற்க மறுத்தார் என சவுரவ் கங்குலி தற்போது தெரிவித்துள்ளார். டிவி நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்றபோது கங்குலி இதுதொடர்பாக பேசியுள்ளார். தனது பேச்சில் கங்குலி, "கேப்டன் பொறுப்பை ரோகித் விரும்பவில்லை. ஆர்வமில்லாத அவரை அப்பொறுப்பை ஏற்கும்படி நான்தான் கட்டாயப்படுத்தினேன். ரோகித், சரி என்று சொல்லாவிட்டால், நானே அவரின் பெயரை அறிவிப்பேன் என்று கட்டாயப்படுத்தும் அளவுக்கு நிலைமை அப்போது சென்றது. ரோகித் ஒரு சிறந்த கேப்டன் என்பதாலேயே அவரை கட்டாயப்படுத்தும் நிலைக்குக் காரணம். விராட் கோலிக்கு பிறகு, இந்திய அணியை வழிநடத்த சரியான மனிதர் அவர்தான் எனத் தோன்றியது.

ரோகித் அப்போது கேப்டன் பொறுப்பை ஏற்க மறுத்த காரணம் சரியாக தெரியவில்லை. ஆனால், பணிச்சுமை ஒரு காரணியாக இருக்கலாம் என அப்போது தோன்றியது. ஏனென்றால், ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என அதிக போட்டிகளில் அப்போது பங்கேற்றார். ஐபிஎல் போட்டிகளிலும் கேப்டனாக இருந்தார். என்றாலும், இந்திய அணிக்கு கேப்டன் என்பதைவிட வேறு எதுவும் சிறப்பாக இருக்க முடியாது. என் பேச்சைக் கேட்டு அப்பொறுப்பை ரோகித் ஏற்று, தற்போது அதில் சிறப்பாக செயல்பட்டு வருவதில் மகிழ்ச்சியே" எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x