Published : 23 Jan 2018 10:18 AM
Last Updated : 23 Jan 2018 10:18 AM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் கால்பதித்தார் ஹையோன்: 3 மணி நேரம் 21 நிமிடங்கள் சவால் கொடுத்து ஜோகோவிச்சை வெளியேற்றினார்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார் தென் கொரிய வீரர் ஹையோன் சுங்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 80-ம் நிலை வீரரான ஹங்கேரியின் மார்டன் புஸோவிக்ஸை எதிர்த்து விளையாடினார். 2 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெடரர் 6-4, 7-6 (7-3), 6-2 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய ஓபனில் பெடரர், கால் இறுதி சுற்றுக்கு முன்னேறுவது இது 14-வது முறையாகும்.

மேலும் ஒட்டுமொத்தமாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் பெடரர் 52-வது முறையாக கால் இறுதி போட்டியை சந்திக்க உள்ளார். கால் இறுதியில் பெடரர், செக்குடியரசின் தாமஸ் பெர்டிச்சுடன் மோதுகிறார். இருவரும் இதற்கு முன்னர் 25 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளனர். இதில் பெடரர் 19 ஆட்டங்களிலும், தாமஸ் பெர்டிச் 6 ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்துள்ளனர். 19-ம் நிலை வீரரான தாமஸ் பெர்டிச் தனது 4-வது சுற்றில் 25-ம் நிலை வீரரான இத்தாலியின் ஃபேபியோ போக்னியை 6-1, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 8 நிமிடங்கள் நடைபெற்றது.

5-ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் 4-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். 97-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெனிஸ் சாண்ட்கிரெனை எதிர்த்து விளையாடிய அவர் 2-6, 6-4, 6-7 (4-7), 7-6 (9-7), 3-6 என்ற செட் கணக்கில் 3 மணி நேரம் 54 நிமிடங்கள் போராடி வீழ்ந்தார். டொமினிக் தியமை வீழ்த்தியதன் மூலம் டெனிஸ் சாண்ட்கிரென் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் கடந்த 20 வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய ஓபன் கால் இறுதிக்கு தகுதி பெறும் முதல் அறிமுக வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சாண்ட்கிரென். கடைசியாக இந்த சாதனையை பிரான்சின் நிக்கோலஸ் எஸ்குடு நிகழ்த்தியிருந்தார்.

கால் இறுதியில் டெனிஸ் சாண்ட்கிரென், தென் கொரியாவின் ஹையோன் சுங்கை சந்திக்கிறார். 58-ம் நிலை வீரரான ஹையோன் 4-வது சுற்றில் 14-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்தினார். சுமார் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹையோன் 7-6 (7-4), 7-5, 7-6 (7-3) என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் கால் இறுதிக்கு முன்னேறிய முதல் தென் கொரிய வீரர் என்ற சாதனையை படைத்தார் ஹையோன். கடந்த இரு வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய ஓபனில் ஹையோனை நேர் செட்டில் ஜோகோவிச் வீழ்த்தியிருந்தார். தற்போது இதற்கு ஹையோன் பதிலடி கொடுத்துள்ளார். அதேவேளையில் இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் முழங்கை மற்றும் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப், 72-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 19 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிமோனா ஹாலப் 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். கால் இறுதியில் சிமோனா ஹாலப், 6-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்கொள்கிறார். அவர், தனது 4-வது சுற்றில் சக நாட்டைச் சேர்ந்த பார்போரா ஸ்டிரைகோவாவை 6-7, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

முன்னாள் சாம்பியனும் 21-ம் நிலை வீராங்கனையுமான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 4-வது சுற்றில் 88-ம் நிலை வீராங்கனையான சீன தைபேவின் சூ வெய் ஹெஸியை 4-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார். கால் இறுதியில் கெர்பர், 17-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸை எதிர்கொள்கிறார். மேடிசன் கீஸ் 4-வது சுற்றில் 8-ம் நிலை வீராங்கனையான பிரான்சின் கரோலின் கார்சியாவை 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார்.

ஆடவர் இரட்டையர் பிரிவு 3-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, பிரான்சின் ரோஜர் வாஸலின் ஜோடி 4-6, 7-6, (7-5) 3-6 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் ஆலிவர் மராச், குரோஷியாவின் மேட் பாவிக் ஜோடியிடம் தோல்வியடைந்தது. இதேபோல் இந்தியாவின் திவிஜ் சரண், அமெரிக்காவின் ராஜீவ் ராம் ஜோடி 6-3, 6-7 (4), 4-6 என்ற செட் கணக்கில் போலந்தின் ஹூபோட், பிரேசிலின் மார்செலோ ஜோடியிடம் வீழ்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x