Published : 08 Nov 2023 02:00 AM
Last Updated : 08 Nov 2023 02:00 AM

ஆஸி.க்கு தோல்வி பயம் காட்டிய ஆப்கன் சறுக்கியது எப்படி?

படம்: எக்ஸ்

மும்பை: நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி பயம் காட்டி இருந்தது ஆப்கானிஸ்தான் அணி. இருப்பினும் களத்தில் செய்த தவறினால் இந்தப் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி இந்த அளவுக்கு செயல்படும் என யாரும் கணிக்கவில்லை. முதலில் இங்கிலாந்து, அடுத்து பாகிஸ்தான், பின்னர் இலங்கை என வரிசையாக சாம்பியன்களை வீழ்த்தியது. கடந்த 3-ம் தேதி நெதர்லாந்து அணியையும் வீழ்த்தி இருந்தது. இந்த சூழலில் மும்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பேட்டிங்கில் இப்ராஹிம் ஸத்ரான் சதம் பதிவு செய்தார். அதன் மூலம் ஆஸி.க்கு 292 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆப்கன். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களுக்குள் ஆஸ்திரேலிய அணியின் 7 விக்கெட்களை கைப்பற்றியும் இருந்தது. வேகப்பந்து வீச்சில் நவீன்-உல்-ஹக் மற்றும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் இணைந்து ஆஸி.யின் டாப் ஆர்டரை வெளியேற்றினர். ரஹ்மத் அடித்த டைரக்ட் ஹிட்டில் லபுஷேன் ரன் அவுட் ஆனார். தொடர்ந்து ஸ்டாய்னிஸ் மற்றும் ஸ்டார்க் ஆகியோர் வெளியேறினர்.

அந்த சூழலில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்கள் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மேக்ஸ்வெல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை முஜிப் நழுவவிட்டார். அது ஆப்கன் அணியின் வெற்றியை பறிக்க ஒரு காரணமாக அமைந்தது. ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய தருணமும் அது தான். அப்போது மேக்ஸ்வெல், 33 ரன்களில் பேட் செய்து கொண்டிருந்தார். அதற்கு முன்னதாக அதே ஓவரில் ரிவ்யூ எடுத்து மேக்ஸ்வெல் தப்பினார். அங்கிருந்து அவரது ரன் குவிப்பை ஆப்கன் அணியால் தடுக்க முடியவில்லை. தனி ஒருவராக ஆடி ஆப்கன் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

மேக்ஸ்வெல், தசை பிடிப்பினால் தவித்துக் கொண்டிருந்த போது ஆப்கன் வீரர்கள் வீசிய லைன் மற்றும் லெந்த்தும் ஆஸி.யின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

“பெரிய ஏமாற்றம். கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டு. ஆட்டம் எங்கள் பக்கம் இருந்தது. பந்துவீச்சாளர்கள் சிறப்பான தொடக்கம் தந்தனர். நழுவவிட்ட கேட்ச் வாய்ப்பு வேதனை தருகிறது. அதன்பிறகு, மேக்ஸ்வெல்லை எங்களால் நிறுத்த முடியவில்லை. அவர் எங்களுக்கு எங்குமே வாய்ப்பு தரவில்லை. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் வலுவான கம்பேக் கொடுக்க முயற்சிப்போம்” என ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷஹிதி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x