Last Updated : 31 Oct, 2023 06:16 AM

 

Published : 31 Oct 2023 06:16 AM
Last Updated : 31 Oct 2023 06:16 AM

சவால்களை கடந்து ‘சிக்ஸர்’ விளாசிய இந்தியா!

இந்திய அணி வீரர்கள்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களின் பெரும் பகுதி எப்போதுமே தொடரை நடத்திய நாட்டைச் சேர்ந்த அணிகளுக்கு சொர்க்கமாக இருந்தது கிடையாது. அதீத உணர்ச்சிகளை எல்லையாகக் கொண்ட பரபரப்பும் ரசிகர்களின் உற்சாகமும் மிகவும் கடினமான அணிகளைக் கூட சொந்த மண்ணில் பலவீனப்படுத்தி உள்ளன. 1975 முதல் 2007-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டங்களில் உலகக் கோப்பை தொடர்களில் வெளிநாட்டு அணிகளே சாம்பியன் பட்டம் வென்று வந்தன. தொடரை நடத்திய நாடுகள் தோல்வியின் காயங்களுக்கு மருந்துகளே போட்டு வந்துள்ளன.

இதில் விதிவிலக்காக இலங்கை அணி இருந்தது. 1996-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை இணைந்து நடத்திய நிலையில் வாகை சூடியது. ஆனால் அந்த அணி இறுதிப் போட்டியை வென்றது பாகிஸ்தானின் லாகூரில். ஆனால் 2011-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் கண்களில் தீப்பொறியும், மனதில் உறுதியும் கொண்ட தோனி விளாசிய சிக்ஸர் இந்த நிலையை மாற்றியது. 2011-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தேறிய இந்த வரலாற்று நிகழ்வானது போட்டியை நடத்தும் நாடு சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்பதை உலகக்கு உணர்த்தியது.

இதைத் தொடர்ந்து, 2015-ல் ஆஸ்திரேலியாவும், 2019-ல் இங்கிலாந்தும் சொந்தமண்ணில் தங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளில் எளிதாக சிறந்து விளங்க முடியும் என்பதை காட்டின. நடப்பு உலகக் கோப்பையிலும் இதை காண முடிகிறது. ‘மென் இன் ப்ளூ’ என வர்ணிக்கப்படும் இந்திய அணியின் பாய்ச்சல் சொந்த மண்ணில் முன்பைவிட அசாத்தியமானதாக இருக்கிறது. நிரம்பி வழியும் மைதான கேலரிகளில் இருந்து ஆற்றலை உள்வாங்கி அதனை உயர்மட்ட செயல் திறனாக களத்தில் இந்திய வீரர்கள் பிரதிபலிக்க செய்வது வியக்க வைக்கிறது.

லக்னோவின் ஏகானா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடப்பு சாம்பியனான இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது அணியின் வெற்றி கணக்கை 6 ஆக நீடித்துள்ளது. இந்திய அணிக்கு இன்னும் மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூருவில் லீக் சுற்றின் இறுதி மோதல்கள் காத்திருக்கின்றன. தற்போது கிடைத்துள்ள இந்த 6 வெற்றிகளிலும் இந்திய அணி ஒவ்வொரு சவால்களை வெற்றிகரமாக கடந்து வந்துள்ளது. சென்னையில் ஆஸ்திரேலிய அணியும், தரம்சாலாவில் நியூஸிலாந்து அணியும், லக்னோவில் இங்கிலாந்து அணியும் தங்களது பந்து வீச்சு, பீல்டிங்கால் இந்திய பேட்ஸ்மேன்களை அவ்வளவு எளிதாக ரன்கள் சேர்க்க அனுமதித்துவிடவில்லை.

சொந்த மண்ணின் சாதகங்களை லீக் சுற்றில் இதுவரை இந்திய அணி சரியாக அறுவடை செய்து வருகிறது. எனினும் இவை சுலபமாக கிடைத்துவிடவில்லை. உலகக் கோப்பைக்கான அணியை கட்டமைத்ததில் இந்திய அணி நிர்வாகம் கடும் போராட்டங்களை சந்தித்தது. ஜஸ்பிரீத் பும்ரா, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகிய மூன்று முக்கிய நட்சத்திரங்கள் கடந்த சில மாதங்களாக காயத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில் படிப்படியாக அணிக்குள் கொண்டு வரப்பட்டனர்.

இவர்கள் 3 பேரின் உடற்தகுதி குறித்தும் கவலைகள் இருந்தன. ஆனால் இவர்கள் உடற் தகுதியை அடைவதற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளும், அவர்களை விளையாடும் லெவனில் ஒருங்கிணைக்க அணி நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகளும் கவனிக்கத்தக்கது. காயத்துக்கு பிந்தைய மறுபிரவேசம் என்பது முட்டை ஓடுகளில் நடப்பது போன்றது, இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் இதுவரை விளையாடிய விதத்திலேயே இதை தெளிவாக காணலாம். இதனால் தான் தற்போது கணுக்காலில் காயம் அடைந்துள்ள ஹர்திக் பாண்டியாவை மிகவும் கவனமாக கையாண்டு வருகின்றனர் பிசிசிஐ மருத்துவக் குழுவினர்.

நடப்பு உலகக் கோப்பையில் சீரான செயல்திறன் அடிப்படையில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல், ஜஸ்பிரீத் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த போதிலும் பீல்டிங்கின் போது களத்தில் அவர், பந்து வீச்சாளர்களை உற்சாகப்படுத்திய விதமானது அவர்களை மேலும் சிறப்பாக செயல்பட வைப்பதற்கான ஊக்கியாக அமைந்தது.

முக்கியமான இந்த தொடரில் இந்திய அணி எப்போது எல்லாம் கடினமான சூழ்நிலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளதோ அப்போது எல்லாம் அதில் இருந்து மீண்டு வருவதற்கான வழிகளை சிறப்பாக கண்டறிந்துள்ளது. இதுதான் லீக் சுற்றில் இந்திய அணி முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கு பிரதான காரணமாக இருந்து வருகிறது. முதல் இரு ஆட்டங்களிலும் ஷுப்மன் கில், டெங்கு காய்ச்சல் காரணமாக விளையாடவில்லை. ஹர்திக் பாண்டியா, கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் இரு லீக் ஆட்டங்களை தவறவிட்டுள்ளார். இவர்கள் இல்லாத சூழலை இந்திய அணி சிறப்பாக கையாண்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக வலுவாக இருந்த வேகப்பந்து வீச்சு துறை மொகமது ஷமியின் வருகையால் கூடுதல் பலம் அடைந்துள்ளது. ஹர்திக் பாண்டியாவின் காயம் அணியின் சமநிலையை வெளிப்படையாக பாதித்துள்ளது. எனினும் அதை மொகமது ஷமி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் கலவையை கொண்டு சரியாக பூர்த்தி செய்துள்ளார் கேப்டன் ரோஹித் சர்மா. இவர்கள் இருவருமே அணிக்கு தேவையான போதுமான முடிவுகளைத் தந்துள்ளனர்.

ரோஹித் சர்மாவுக்கும், விராட் கோலிக்கும் களத்தில் காணப்படும் பிணைப்பும் இவர்கள் கூட்டாக வீரர்களை அரவணைத்து ஊக்கம் கொடுப்பதும் பார்க்க மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் ஒருவர் அணியை தற்போது முன்னின்று வழிநடத்துகிறார், ஒருவர் ஏற்கெனவே வெற்றியாளராக அணியை வழி நடத்தி உள்ளார். இந்த நேர்மறையான உந்துவிசையில் ஒட்டுமொத்த அணியும் சாம்பியன் கோப்பை என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறது. இந்த பயணம் வெற்றிகரமாக முடிவதை பார்க்க கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x