Published : 28 Oct 2023 03:31 PM
Last Updated : 28 Oct 2023 03:31 PM

பாரா ஆசிய போட்டிகளில் வரலாறு படைத்த இந்தியா - 111 பதக்கங்கள் வென்று அசத்தல்! 

ஹாங்சோ: 4-ஆவது பாரா ஆசிய விளையாட்டி போட்டிகளின் முடிவில் இந்தியா 111 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. பாரா ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்வது இதுவே முதன் முறையாகும். இதற்கு முன்னதாக, கடந்த 2018-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற தொடரில் இந்தியா 72 பதக்கங்களை வென்றிருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

சீனாவின் ஹாங்சோ நகரில் 4-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. இதில், இதுவரை இல்லாத அளவில் இந்தியா 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தம் 111 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. மேலும், பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் சீனா 521 பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஈரான் 131 பதக்கங்களுடனும் (44 தங்கம்), மூன்றாம் இடத்தில் ஜப்பான் 150 பதக்கங்களுடனும் (42 தங்கம்), கொரியா 103 பதக்கங்களுடன் (30 தங்கம்) 4-வது இடத்திலும் உள்ளன.

முதல் பாரா ஆசிய விளையாட்டு கடந்த 2010-ல் சீனாவில் குவாங்சோ நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா ஒரு தங்கம் உள்பட 14 பதக்கங்களுடன் 15-வது இடத்தை பிடித்தது. 2014-ல் 15-வது இடத்தையும், 2018-ல் 9-வது இடத்தையும் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவர் தீபா மாலிக் பேசுகையில், “நமது பாரா விளையாட்டு வீரர்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். டோக்கியோவை பாரிஸ் பாராலிம்பிக்ஸில் அதிக பதக்கங்களை வெல்வோம். 111 பதக்கங்களை வென்றது எங்களுக்கு ஆச்சரியமில்லை. காரணம், நாங்கள் 110 முதல் 115 பதக்கங்களை எதிர்பார்த்தோம். 111 பதக்கங்களை வென்றுள்ளோம்” என்றார்.

அதிகபட்சமாக பேட்மிண்டன் போட்டிகளில் இந்தியா 4 பதக்கங்கள் உள்பட 21 பதக்கங்களை வென்றுள்ளது. செஸ் போட்டியில் 8 பதக்கங்களும், வில்வித்தையில் 7 பதக்கங்களும் கிடைத்துள்ளன. துப்பாக்கிச் சுடுதலில் 6 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர். இறுதி நாளான இன்று 4 தங்கம் உள்பட 12 பதக்கங்கள் கிடைத்துள்ளன. செஸ் போட்டியில் 7 பதக்கங்களும், தடகளத்தில் 4 பதக்கங்களும், படகு போட்டியில் ஒரு பதக்கத்தையும் கடைசி நாளான இன்று இந்தியா வென்று அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x