Last Updated : 23 Oct, 2023 05:34 AM

 

Published : 23 Oct 2023 05:34 AM
Last Updated : 23 Oct 2023 05:34 AM

பாகிஸ்தானுக்கு சவால் விடுக்குமா ஆப்கானிஸ்தான்?: சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று பலப்பரீட்சை

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று சென்னையில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த லீக் ஆட்டம் சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.

உலகக் கோப்பை போட்டியில் இதுவரை 4 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள பாகிஸ்தான் 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் 4 ஆட்டங்களில் பங்கேற்று ஒரு வெற்றி, 3 தோல்விகளுடன் 2 புள்ளிகளை மட்டுமே பெற்று பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. இங்கிலாந்தை மட்டுமே ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் பலம்வாய்ந்த அணியாகவே திகழ்கிறது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் மொகமது ரிஸ்வான், சவுத் ஷகீல், அப்துல்லா ஷபீக், இப்திகார் அகமது ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றனர். அவர்கள் மீண்டும் ஒரு முறை தங்களது உயர்மட்டத் திறனை வெளிப்படுத்தக் காத்திருக்கின்றனர். இந்த உலகக் கோப்பைத் தொடரில் கேப்டன் பாபர் அஸம் மட்டுமே சுமாரான வகையில் விளையாடி வருகிறார். இந்தியாவுடனான ஆட்டத்தில் மட்டுமே அவர் அரை சதம் விளாசினார். இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் அவர் பழைய ஃபார்முக்குத் திரும்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஆஸ்திரேலியாவுடனான ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் சிறப்பாக விளையாடி 70 ரன்கள் சேர்த்தார். எனவே,பாகிஸ்தானின் முதல் வரிசை ஆட்டக்காரர்களிடமிருந்து அதிரடியான இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும்.

பந்துவீச்சில் ஷாகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி, ஹாரிஸ் ரஃவூப் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். ஆஸ்திரேலியாவுடனான ஆட்டத்தில் ஷாகீன் ஷா அப்ரிடி 5 விக்கெட்களைச் சாய்த்து எதிரணியை மிரட்டினார். எனவே, இந்த ஆட்டத்திலும் அவர்களிடமிருந்து அனல் பறக்கும் பந்துவீச்சை எதிர்பார்க்கலாம். அதேநேரத்தில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி தோல்வி தந்த ஆப்கானிஸ்தான் மற்ற 3 அணிகளிடமும் தோல்வி கண்ட நிலையில் களமிறங்குகிறது.

ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ், இக்ரம் அலிகில், இப்ராஹிம் சத்ரன் ஆகியோர் மட்டும் சிறப்பான திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். எனவே, இந்த ஆட்டத்தில் தங்களது உயர்மட்டத் திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் உள்ளனர். கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி தனது திறமையை நிரூபிக்கும் விதத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பவுலிங்கில் ரஷித் கான், முஜீப் உர் ஹர்மான், பசல்ஹக் பரூக்கி, நவீன் உல் ஹக், மொகமது நபி ஆகியோர் பாகிஸ்தான் வீரர்களை மிரட்டக் காத்திருக்கின்றனர். இவர்களிடமிருந்து சிறப்பான பந்துவீச்சுத் திறன் வெளிப்படும் பட்சத்தில் பாகிஸ்தான் அணியை ஆப்கானிஸ்தானால் வெல்ல முடியும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜோனதான் டிராட் கூறும்போது, ‘‘ஒவ்வொரு ஆட்டத்திலும் சுழற் பந்துவீச்சாளர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் இணைந்து ஒருமித்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்போது மட்டுமே உலகக் கோப்பைத் தொடரை வெல்ல முடியும். இதைத்தான் எங்கள் அணி வீரர்களுக்கு நான் அறிவுறுத்தி வருகிறேன். இரண்டு அல்லது மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமல்லாமல் 11 பேரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அணியின் ஸ்கோரை உயர்த்துவதற்கு நல்ல பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதேபோல் இலக்கைத் துரத்தும்போது ரன்களைக் குவிப்பதற்கான வீரர்களும் எங்களிடையே உள்ளனர்’’ என்றார்.

சென்னையில் 11 ஆண்டுகளுக்குப் பின்னர்...: சென்னையில் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. இதற்கு முன்பு சென்னையில் 2012ல் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஒருநாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி சிறப்பாக விளையாடி சதமடித்தபோதும் அணி தோல்வி கண்டது.இதனைத் தொடர்ந்து 11 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது சென்னையில் விளையாட பாகிஸ்தான் அணி இங்கு வந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x