Published : 16 Oct 2023 03:04 PM
Last Updated : 16 Oct 2023 03:04 PM

ODI WC 2023 | உலகக் கோப்பைக்கு உயிரூட்டிய ஆப்கன் - பழைய ஃபார்முக்கு திரும்புகிறதா இங்கிலாந்து?

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் உலக சாம்பியன் இங்கிலாந்து அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியது. இதன்மூலம் நடப்பு உலகக்கோப்பையில் ஆகப் பெரிய அதிர்ச்சித் தோல்வியை இங்கிலாந்துக்குப் பரிசாக அளித்த ஆப்கானிஸ்தான் இந்த நடப்பு உலகக் கோப்பை தொடருக்கு புத்துயிர் கொடுத்துள்ளது என்றே கூற வேண்டும்.

2015 உலகக் கோப்பையில் சந்தித்த பெரிய தோல்விகளையடுத்து உலகக் கோப்பை தொடர் என்றாலே இங்கிலாந்து அணிக்கு ஆகாத தொடர் என்பதுதான் பேச்சாக இருந்தது. ஆனால் அதன் பிறகு இயான் மோர்கன், அணியைக் கட்டமைத்தார். பிட்ச்களை அதிரடி பிட்ச்களாக மாற்றி, அதிரடி வீரர்களை உள்நாட்டுக் கிரிக்கெட்டிலிருந்து தேர்ந்தெடுத்து இங்கிலாந்து அணியை அதிரடி அணியாக உருவாக்கி, அனைத்து இருதரப்பு தொடகளையும் சகட்டுமேனிக்கு சரவெடியாக வென்று 2019 உலகக் கோப்பையையும் வெல்லச் செய்தார். அவர் உருவாக்கிய பட்லர் தலைமையில் டி20 உலகக் கோப்பையையும் இரண்டாவது முறையாக இங்கிலாந்து வென்றது.

ஆனால் நேற்று ஆப்கன் அணியை 284 ரன்கள் அடிக்கவிட்டதோடு, சேஸிங் செய்ய முடியாமல் முஜீப் உர் ரஹ்மான், ரஷீத் கான், முகமது நபி ஆகிய அபார ஸ்பின்னர்களின் அதியற்புத கட்டுக்கோப்புக்கு இரையானது இங்கிலாந்து. ஏற்கனவே இதே இங்கிலாந்து ஸ்காட்லாந்துடன் உதை வாங்கியதும் நினைவிருக்கலாம். அடுத்தடுத்த இந்த தோல்விகள் இங்கிலாந்து மீண்டும் பழைய ஃபார்முக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் வெளிப்படுத்தும் தொய்ந்து போன உடல் மொழி, பழைய பாணியிலான தன்னம்பிக்கை இல்லாத இறுகிப் போன முகங்கள் மீண்டும் இங்கிலாந்து 2015-க்கு முந்தைய நிலைக்குத் திரும்புவதையே காட்டுகிறது. இங்கிலாந்து டாஸ் வென்ற நிலையில், ஆப்கானிஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்து தவறிழைத்தது. இதனால், ஆப்கானிஸ்தான் ஒரு அதிரடித் தொடக்கத்தை ஏற்படுத்தியது. 21 வயதான ரஹ்மானுல்லா குர்பாஸ் நான்கு சிக்ஸர்களை அடித்து 57 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். ஆனால், ஆப்கன் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிடி தவற்றால் ரன் அவுட் ஆகி கடுமையான கோபத்துடன் வெளியேறினார் குர்பாஸ். இவர் ஆட்டமிழந்த பிறகு ஆப்கானிஸ்தான் 154/4 என்று சரிவிலிருந்தும்கூட இங்கிலாந்து கோட்டை விட்டது. இன்ஸ்பிரேஷனே இல்லாமல் ஆடியது. மாறாக 4 விக்கெட்டுகளை இழந்தபிறகும் ஆப்கன் பேட்டர் இக்ரம் கீழ் வரிசை பேட்ஸ்மென்களை வைத்துக் கொண்டு ஒரு சூப்பர் அரை சதத்தை விளாசினார்.

குர்பாஸ், கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சு மீது பாய்ந்தார். வோக்ஸின் பந்துவீச்சில் பெரிய சிக்சர் அடித்த குர்பாஸ், சில பவுண்டரிகளையும் விளாசி அதிரடி காட்டினார். எதிர்முனையில் டாப்ளே நன்றாக வீசினாலும், பிட்ச்சின் பவுன்ஸை சரியாகப் புரிந்து வைத்திருந்த குர்பாஸ் இருமுறை இரு கட் பவுண்டரிகளை விளாசினார். சரி வேண்டாம் சாம் கரனிடம் கொடுப்போம் என்று முடிவெடுத்தார் பட்லர். ஆனால் சாம் கரனையும் போட்டு புரட்டி எடுத்து விட்டார் குர்பாஸ். அவரது 2வது ஓவரில் குர்பாஸ் 20 ரன்களை விளாசினார். இதில் 2 பவுண்டரிகள் ஒரு பெரிய சிக்ஸ் அடங்கும்.

பவர் ப்ளேயின் போது ஆப்கானிஸ்தான் 79/0 என்று இருந்தது. குர்பாஸ் 33 பந்துகளில் அரைசதம் விளாசினார். மார்க் உட்டையும் டீப் தேர்ட்மெனில் சிக்ஸ் அடித்தவர், இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் அடில் ரஷீத்தின் ஸ்பின்னில் மிட்விக்கெட்டில் அடித்த பிக் அப் சிக்ஸ் ஷாட் தான் நேற்றைய இன்னிங்ஸின் அற்புதமான ஷாட். கடைசியில் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிடியின் மோசமான ரன் கணிப்பினால் விக்கெட்டை இழந்தார் குர்பாஸ். இவரது தொடக்கம்தான் ஆப்கானின் வெற்றிக்குக் காரணம் என்றால் மிகையாகாது. வளர்ந்துவரும் வீரர்களில் மிக மிக அபாயகரமான ஒரு வீரர் இந்த குர்பாஸ். இலங்கையின் 1996 உலகக் கோப்பை புகழ் கலுவிதரனா போன்ற ஒரு விக்கெட் கீப்பர் விளாசல் பேட்டர் குர்பாஸ்.

இங்கிலாந்து இலக்கைத் துரத்திய போது ஸ்பிரிட்டட் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஃபஸ்லுல்லா பரூக்கி அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோவை 2 ரன்களில் இன்ஸ்விங்கர் வீசி அவுட் செய்தார். நல்ல வேளையாக இதனை நடுவர் அவுட் என்றார். ஏனெனில் ரீ-ப்ளேயில் இது அம்பயர்ஸ் கால் என்று வந்தது. ஜோ ரூட்டுக்கு ஒரு வேகமான ஸ்கிட் ஆகும் கூக்ளியை வீச பவுல்டு ஆனார்.

ப்ரென்ட் ஃபுட் (Front foot) போட்டு ஆடாமல் பவுலர் ஏதோ உருட்டி விக்கெட் எடுத்தது போல் சிரித்து விட்டுச் சென்றார் ரூட். இங்கிலாந்தின் டேவிட் மலான் சிறந்த வீரர்தான். ஆனால் அவர் பரூக்கியின் இடது கை ஸ்விங் பவுலிங்கில் தடவு தடவென்று தடவினார். ஆனால் கொஞ்சம் சுதாரித்து ஆடிக்கொண்டிருந்த போது அவருக்கென்றே வந்தார் நபி. சாதாரண பந்து, அதைவிட சாதாரணமான ஷாட், ஆனால் பீல்டிங் பொசிஷன் அபாரம் என ஷார்ட் எக்ஸ்ட்ரா கவரில் கேட்ச் ஆனார். சரி ஜாஸ் பட்லர் நிலை நிறுத்துவார் என்று பார்த்தால் நவீன் உல் ஹக்கின் இன்ஸ்விங்கரில் பந்தை உள்ளே விட்டுக் கொண்டு பவுல்டு ஆனார்.

வழக்கத்தைவிட ஆப்கன் நல்ல அட்டாக்கிங் மைன்ட்செட்டில் ஆடினர். இங்கிலாந்து அதை முறியடிக்க ஒன்றுமே செய்யாமல் இருந்தது. லிவிங்ஸ்டன், சாம் கரன், வோக்ஸ் என வரிசையாக வீழ்ந்தனர். ஆட்ட நாயகன் முஜீப் 3 விக்கெட்டுகளையும், ரஷீத் கான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்ற, சீனியர் வீரர் நபி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வோக்ஸ், சாம் கரன் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 87 ரன்களை கொடுத்தது இங்கிலாந்தின் ஆக்சிஜன் குழாயை பிடுங்கி விட்டது போல் ஆகிவிட்டது.

ஜாஸ் பட்லர் போட்டி முடிந்து கூறியது போல், “இதுபோன்ற தோல்விகள் ஒன்றுமேயில்லை, கடந்து போக வேண்டும் என்று எண்ணாமல் இந்தத் தோல்விகள் ஒரு அணியை காயப்படுத்த வேண்டும். அவ்வளவு சுலபமாகக் கடந்து போய் விட முடியாது. தோல்வி காயப்படுத்தினால்தான் மீட்டெழுச்சி கடுமையாக இருக்கும்.

ஏன் ரோஹித் சர்மாவே தோற்கும் போதெல்லாம், இதைக் கடந்து செல்ல வேண்டும். கடந்த 4-5 ஆண்டுகள் நன்றாகத்தானே ஆடுகிறோம். அந்த நல்ல ஆட்டங்களை இந்தத் தோல்வி காலி செய்து விடுமா என்றெல்லாம் கேட்டதைப் பார்த்திருக்கிறோம். அப்படிப் பார்க்கக் கூடாது, இப்படிப்பட்ட தோல்விகள் காயப்படுத்த வேண்டும். என்ன நடந்தது என்பதை மீண்டும் மனக்கண்களில் ஓட்டிப் பார்க்க வேண்டும். அப்போதுதான் மீண்டு எழுவது சாத்தியம். தோல்வியைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது பாசிட்டிவ் அணுகுமுறை அல்லது மனநிலை அல்ல. தோல்வியை அசைபோட்டு கண்முன்னால் கொண்டு வந்து அடுத்த முறை இது நடக்கக் கூடாது என்ற திண்ணமே பாசிட்டிவ் அணுகுமுறை’’ என்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x