Published : 16 Jul 2014 06:13 PM
Last Updated : 16 Jul 2014 06:13 PM

முதல் டெஸ்ட்: தேநீர் இடைவேளைக்குப் பிறகு 4 விக்கெட்டுகளை இழந்த தென் ஆப்பிரிக்கா

இலங்கையில் பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க அணி புதிய கேப்டன் ஆம்லாவின் தலைமையின் கீழ் முதல் டெஸ்ட் போட்டியை இன்று தொடங்கியது.

கால்லே சர்வதேச விளையாட்டரங்கில் இன்று காலை டாஸ் வென்ற ஆம்லா மட்டைப் பிட்ச் என்று தெரிந்தவுடன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

அந்த அணியின் டீன் எல்கர் என்ற தொடக்க வீரர் 102 ரன்களில் இருந்த போது தேநீர் இடைவேளை சமயத்தில் தென் ஆப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்களை எடுத்திருந்தது.

டீன் எல்கர், இலங்கையில் டெஸ்ட் சதம் கண்ட முதல் தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார். அவர் தேநீர் இடைவேளைக்குப் பிறகு சுரங்க லக்மல் வீசிய அபாரமான பந்தை எட்ஜ் செய்து விக்கெட் கீப்பர் சந்திமாலிடம் கேட்ச் கொடுத்து 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

மொத்தம் 187 பந்துகளைச் சந்தித்த டீன் எல்கர் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்களை அடித்திருந்தார்.

முன்னதாக தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய அல்விரோ பீட்டர்சன் (34) டீன் எல்கர் இணைந்து 70 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

அல்வீரோ பீட்டர்சன் 34 ரன்கள் எடுத்து பெரேரா பந்தில் எல்.பி.ஆகி வெளியேறினார். 3வது நடுவர் தீர்ப்பளித்தார்.

அதன் பிறகு டு பிளேசியும் டீன் எல்கரும் இலங்கைப் பந்து வீச்சிற்கு வெறுப்பேற்றினர். இருவரும் இணைந்து 125 ரன்களைச் சேர்க்க ஸ்கோர் 195 ரன்களாக உயர்ந்தபோதுதான் டீன் எல்கர் அவுட் ஆனார்.

தேநீர் இடைவேளைக்குப் பிறகான சரிவை டீன் எல்கர் தொடங்க, அடுத்ததாக வந்த கேப்டன் ஆம்லா 36 பந்துகள் போராடி கடைசியில் 11 ரன்களில் ஹெராத் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

5 பவுண்டரிகள் 1 சிக்சர் உதவியுடன் 80 ரன்கள் எடுத்த டு பிளேசி, பெரேராவிடம் அவுட் ஆனார்.

கடைசியாக டிவிலியர்ஸ் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்திருந்த போது அருமையான பந்தில் லக்மலிடம் பவுல்டு ஆனார். முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை 91 ஓவர்கள் வீசியது. தென் ஆப்பிரிக்கா 268/5.

விக்கெட் கீப்பர் டி காக் 17 ரன்களுடனும், ஸ்டெய்ன் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x