Last Updated : 30 Nov, 2017 03:08 PM

 

Published : 30 Nov 2017 03:08 PM
Last Updated : 30 Nov 2017 03:08 PM

உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை சய்கோம் மீராபாய் சானு தங்கம் வென்று சாதனை

அமெரிக்காவில் உள்ள அனாஹெய்மில் நடைபெற்ற பளுதூக்குதல் விளையாட்டு உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனையான மீராபாய் சானு, தங்கப் பதக்கம் வென்றார்.

உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டி, அமெரிக்காவில் உள்ள அனாஹிம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் நடந்த போட்டியில் இந்திய வீராங்கனையான மீராபாய் சானு, தங்கப் பதக்கம் வென்றார். இவர் ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ எடையையும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 109 கிலோ எடையையும் தூக்கி இப்பிரிவில் முதலிடத்தைப் பிடித்தார். இதன்மூலம் 48 கிலோ எடைப்பிரிவில் புதிய தேசிய சாதனையையும் அவர் படைத்தார். இப்போட்டியில் தாய்லாந்து வீராங்கனை சுக்சரோன் துன்யா வெள்ளிப் பதக்கத்தையும், செகுரா அனா ஐரிஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் மீராபாய் சானு, இப்போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார். முன்னதாக 1994 மற்றும் 1995 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவின் கர்ணம் மல்லேஸ்வரி இப்போட்டியில் தங்கம் வென்றிருந்தார்.

கடந்த ஒலிம்பிக் போட்டியிலேயே சானு பதக்கம் வெல்வார் என்று இந்திய ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக ஒலிம்பிக்கில் அவரால் பதக்கம் வெல்ல முடியவில்லை. தற்போது அதற்கு ஈடுகட்டும் வகையில், உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் சானு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 

ஊக்க மருந்து விவகாரம் தொடர்பான பிரச்சினையால் ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், உக்ரைன், அஜர்பைஜான் ஆகிய நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கவில்லை. 

பிரதமர் வாழ்த்து 

பளு தூக்கும் போட்டியில் பட்டம் வென்ற சானுவுக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “மீராபாய் சானுவை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்:” என்று குறிப்பிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உலக பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்ற சானுவுக்கு வாழ்த்துகள். இந்தியா உங்களை நினைத்து பெருமை கொள்கிறது. அவரை நாட்டுக்கு அளித்த மணிப்பூர் மாநிலத்துக்கும் வாழ்த்துகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

4 மடங்கு அதிகம்

விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன்சிங் ராத்தோர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மீராபாய் சானு பளுதூக்கும் போட்டியில் மொத்தம் 194 கிலோ எடையைத் தூக்கியுள்ளார். இது அவரது உடல் எடையை விட 4 மடங்கு அதிகமாகும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கர்ணம் மல்லேஸ்வரிக்குப் பிறகு உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற சானுவுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார். குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கும் சானுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். -பிடிஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x