Published : 30 Sep 2023 08:02 PM
Last Updated : 30 Sep 2023 08:02 PM

‘ஐபிஎல்-க்கு கட் அவுட், உலகக் கோப்பைக்கு கெட் அவுட்’ - மழைக்காலத்தில் ஐசிசி ஒப்புக்கொண்டது எப்படி?

அசாமின் கவுகாத்தியில் கனமழை காரணமாக இந்தியா - இங்கிலாந்து இடையே நடக்கவிருந்த பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. | படம்: ரிது ராஜ் கோன்வர்

இந்தியாவில் 1987 உலகக் கோப்பை நீங்கலாக 1996, 2011 உலகக் கோப்பை போட்டிகள் மழையில்லா சீசனில்தான் நடந்தது. 1996 உலகக் கோப்பை இறுதிப் போட்டி லாகூரில் மார்ச் மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது. 2011 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டி ஏப்ரல் மாதம் 2-ம் தேதி நடைபெற்றது.

ஒரு முழுமையான உலகக் கோப்பைத் தொடராக பலராலும் பாராட்டப்பட்ட ஓர் உலகக் கோப்பைத் தொடராக 2011 உலகக் கோப்பை அமைந்தது. அதில் இந்தியா தோனி தலைமையில் கோப்பையை வென்றது முத்தாய்ப்பாக அமைந்தது. ஆனால், இந்த முறை உலகக் கோப்பை சரியான மழை சீசனில் நடைபெறுகிறது. ஐசிசி போன்ற அமைப்புகள் எப்படி இதை அனுமதித்தது என்பதுதான் இன்று பெரிய கேள்வி.

இன்று இந்தியா - இங்கிலாந்து, ஆஸ்திரேலியா - நெதர்லாந்து உலகக் கோப்பை பயிற்சி போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுவாக இந்தியாவில் மழை சீசன் அக்டோபர் - நவம்பரில் ஆரம்பித்து, டிசம்பர் கடைசி வரை நீடிக்கிறது. அதனால்தான் ஐபிஎல் போட்டிகளை மார்ச் - ஏப்ரல் - மே மாதங்களில் நடத்துகின்றனர். இந்நிலையில், ஏன் 1996, 2011 உலகக் கோப்பைகள் போல் இந்த உலகக் கோப்பையும் ஜனவரி - மார்ச் காலக்கட்டத்தில் நடத்தப்படவில்லை என்ற கேள்வி பெரிதாக எழுகின்றது.

இந்தக் கேள்விக்கு விடை என்னவெனில், ஐபிஎல் தொடர் பாதிக்கப்படக் கூடாது; பிசிசிஐ முதலீட்டாளர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது. ஆனால் ஐசிசி உலகக் கோப்பையை நம்பி முதலீடு செய்பவர்கள் மட்டுமல்ல, வானளாவிய விலை கொடுத்து போட்டிகளை நேரில் பார்க்க டிக்கெட் எடுக்கும் ரசிகர்கள், நேரம் காலம் பார்க்காமல் தொலைக்காட்சி முன் ஆர்வத்துடன் போட்டியைப் பார்க்க அமரும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் ஐசிசி கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

ஏன் உலகக் கோப்பை என்று வீரர்கள் எத்தனை கால பகலிரவு பாரா தயாரிப்புகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பார்கள். அத்தனையும் மழையினால் விரயமாவதை எப்படி அனுமதிக்க முடியும்? பிசிசிஐ-யின் தற்போதைய நிர்வாகமும் கிரிக்கெட் ரசிகர்களை ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்றே தெரிகிறது. ஐசிசி ஏன் இதற்கு ஒப்புக் கொண்டது என்பது அனைத்தையும் விட பெரிய கேள்வி.

ஐபிஎல் போட்டிகளை ரசிப்பவர்கள் பொழுதுபோக்குக்காக ரசிப்பவர்கள், தங்கள் ஹீரோக்கள் ஆடுவதை ரசிப்பதற்காகப் பார்ப்பவர்கள். ஆனால், உலகக் கோப்பை என்பது தேசம், தேசாபிமானம் பற்றிய விவகாரமாகும். ஒவ்வொரு நாட்டு ரசிகர்களும் தங்கள் நாடு கோப்பையை வெல்ல வேண்டும், ஒவ்வொரு போட்டியையும் வெல்ல வேண்டும் என்று ஆர்வத்துடன் எதிர்நோக்கும் தொடராகும். இது மழையினால் பாதிக்கப்பட்டால் ரசிகர்களின் கோபாவேசத்தைத்தான் சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

1992 உலகக் கோப்பை போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டு சொதப்பலான உலகக் கோப்பையாக நடந்ததை பார்த்தோம். இந்த மழையினால்தான் இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் உலகக் கோப்பையை வென்றது. இல்லையெனில் இந்தியா, மே.இ.தீவுகள், தென் ஆப்பிரிக்கா, அணிகளுக்கு எதிராக படுதோல்வி கண்ட பாகிஸ்தான் கோப்பையை வெல்ல தகுதியில்லாத அணிதான். அதிலும் இங்கிலாந்துக்கு எதிராக 74 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அந்தப் போட்டி மழையால் கைவிடப்பட்டதால் தலா 2 புள்ளிகளை இங்கிலாந்துடன் பகிர்ந்து கொண்டது. இந்த 2 புள்ளிகள்தான் பாகிஸ்தானை நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறச் செய்தது. இது மழையின் கைங்கரியம்தானே!

மேலும் தென் ஆப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு வந்திருந்தால் பாகிஸ்தான் உலகக் கோப்பைக் கனவு தகர்ந்திருக்கும். ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் படுமட்டமான மழை விதிகளால் தென் ஆப்பிரிக்கா தோல்வி கண்டது. அதாவது தென் ஆப்பிரிக்கா தனது 252 ரன்கள் இலக்கை எதிர்த்து 42.5 ஓவர்களில் 231/6 என்று இருந்தபோது மழை குறுக்கிட்டது.

ஏற்கெனவே மழையால் 45 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்தப் போட்டி திடீர் மழை குறுக்கீட்டினால் தென் ஆப்பிரிக்காவுக்கு 43 ஓவர்களில் 252 ரன்கள் இலக்காக மாற்றப்பட்டது. 13 பந்துகளில் 22 ரன்கள் என்று இருந்த இலக்கு அபத்தமாக 1 பந்தில் 21 ரன்கள் என்பதாக கணக்கிடப்பட்டது. கிறிஸ் லூயிஸ் அபத்தமாக அந்த ஒரு பந்தையும் வீசினார், பிரையன் மெக்மில்லன் 1 ரன் எடுக்க தென் ஆப்பிரிக்கா 232 ரன்கள் மட்டுமே எடுத்து உலகக் கோப்பை வாய்ப்பை இழந்தது. ஒரு 12 நிமிட மழை கிளாசிக் போட்டியையே கபளீகரம் செய்தது.

இந்த 2023 உலகக் கோப்பையில் இது போன்று பல போட்டிகளை மழை கபளீகரம் செய்து விடும் என்ற அச்சமே இப்போது நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா பயிற்சிப் போட்டி திருவனந்தபுரத்தில் மழையால் ரத்து செய்யப்பட்டது. சமீபமாக நடைபெற்ற ஆசியக் கோப்பைப் போட்டிகள் பாகிஸ்தான் நடத்துவதாகத்தான் பெயரே தவிர நடந்தது இலங்கையில், மழையால் ஆட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

அசாமின் கவுகாத்தியில் கனமழை காரணமாக இந்தியா - இங்கிலாந்து இடையே நடக்கவிருந்த பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. | படம்: ரிது ராஜ் கோன்வர்

இந்த முறை சென்னையில் 5 போட்டிகள் ஆடப்படவுள்ளன, அக்டோபர் 8-ம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா மோதுகின்றது. அக்டோபர் 13, அக்டோபர் 18, அக்டோபர் 23, அக்டோபர் 27 என்று போட்டிகள் நடைபெறுகின்றன. சென்னையில் இப்போதெல்லாம் தினமுமே காலையில் கடும் வெயில் மாலை அல்லது இரவில் மழை என்று கொட்டோ கொட்டென்று இடியும், மின்னலுமாக மழை பெய்து கொண்டிருக்கிறது. எப்படி போட்டி நடத்த முடியும் என்பது தெரியவில்லை.

கடந்த முறை ஐபிஎல் இறுதிப் போட்டியே அகமதாபாத்தில் மழையால் பாதிக்கப்பட்டது ரசிகர்களிடையே பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும்போது, இந்த முறை இந்தியா பாகிஸ்தான் போட்டி, இறுதிப் போட்டி என்று அகமதாபாத்தை கிரிக்கெட்டின் தலைமையிடமாக மாற்றியிருக்கிறார்கள். இப்போது பெரிய விலை கொடுத்து வாங்கிய டிக்கெட்டுகள் என்ன ஆகுமோ என்ற கவலை ரசிகர்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.

மழை, ரிசர்வ் நாள் தொடர்பாக ஐசிசி தலைவர் டேவ் ரிச்சர்ட்ஸன் 2019 உலகக் கோப்பையின் போது கூறியதைக் கேட்போம்: “ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு ரிசர்வ் நாளை வைப்பது போட்டியின் நீளத்தை கணிசமாக அதிகரிக்கும் மற்றும் நடைமுறையில் இது சிக்கலானதாக இருக்கும். ஆடுகளம் தயாரிப்பு, அணி தங்களை மீட்டெடுப்பது, மற்றும் பயண நாட்கள், தங்குமிடம் மற்றும் இடம் கிடைப்பது, போட்டி பணியாளர்கள், தன்னார்வ மற்றும் போட்டி அதிகாரிகள் கிடைப்பது, ஒளிபரப்பு தளவாடங்கள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் சில மணிநேரம் பயணம் செய்த பார்வையாளர்களை பாதிக்கும். ரிசர்வ் நாளில் மழை இருக்காது என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை” என்று கூறுகிறார்.

நாக் அவுட் போட்டிகளுக்கு மட்டும்தான் ரிசர்வ் நாள் வைக்க முடியும் என்று கூறுகின்றனர். ஆகவே இப்போது மகாராஷ்ட்ரா, குஜராத் நீங்கலாக போட்டிகள் நடைபெறும் இந்தியாவின் கிழக்குப் பகுதிகள் மற்றும் தெற்குப் பகுதிகளில் முழுதும் மழை சீசனே. எப்படி நடத்துவார்கள், ரிசர்வ் நாள் இல்லாமல் என்பதுதான் கேள்வி.

கிரிக்கெட் வர்த்தகம்: இந்தியாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் டிவி, டிஜிட்டல் மீடியா விளம்பரங்கள், ஸ்பான்சர்கள், குறைந்தது ரூ.2000 கோடி முதல் ரூ.2300 கோடி வரை வருவாயை ஈட்டித்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2019 இங்கிலாந்து உலகக்கோப்பையில் இது ரூ.1350 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. போட்டியாளர் ஜியோ சினிமா என்ற இடையூறு வர்த்தக சேனலினால் இந்த முறை டிஸ்னி ஹாட்ஸ்டார் செயலியில் இலவசமாக மேட்ச்களை ரிலே செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

அப்படியென்றால் விளம்பர வருவாயை எண்ணியே கோடிகளைக் கொட்டிக்கொடுத்து ஒப்பந்தம் எடுத்திருப்பார்கள், இப்படியிருக்கையில் விளம்பர வருவாயை எதிர்பார்க்கும் இவை மழையால் போட்டிகள் பாதிக்கப்பட்டால் எப்படி லாபம் ஈட்ட முடியும்? நஷ்டமடையாமல் இருப்பதே பெரிய விஷயம் என்றுதான் தெரிகிறது. விளம்பரதாரர்களும் ஒளிப்பரப்பு நிறுவனங்களும் முழு போட்டி நடந்தால்தான் லாபம் பார்க்க முடியும் இல்லையெனில் முதலீட்டுச் செலவினங்களுக்கு ஏற்ற வருவாய் இல்லாமல் நஷ்டமடைய வேண்டிய நிலைதான் ஏற்படும்.

இது தொடர்பாக ஐசிசி தலைவர் டேவ் ரிச்சர்ட்ஸன் 2019 உலகக் கோப்பையின் போது கூறியதைக் கேட்போம்: “ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு ரிசர்வ் நாளை வைப்பது போட்டியின் நீளத்தை கணிசமாக அதிகரிக்கும் மற்றும் நடைமுறையில் இது சிக்கலானதாக இருக்கும். ஆடுகளம் தயாரிப்பு, அணி தங்களை மீட்டெடுப்பது, மற்றும் பயண நாட்கள், தங்குமிடம் மற்றும் இடம் கிடைப்பது, போட்டி பணியாளர்கள், தன்னார்வ மற்றும் போட்டி அதிகாரிகள் கிடைப்பது, ஒளிபரப்பு தளவாடங்கள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் சில மணிநேரம் பயணம் செய்த பார்வையாளர்களை பாதிக்கும். ரிசர்வ் நாளில் மழை இருக்காது என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை” என்று கூறுகிறார்.

நாக் அவுட் போட்டிகளுக்கு மட்டும்தான் ரிசர்வ் நாள் வைக்க முடியும் என்று கூறுகின்றனர். ஆகவே இப்போது மகாராஷ்ட்ரா, ராஜஸ்தான் நீங்கலாக போட்டிகள் நடைபெறும் இந்தியாவின் கிழக்குப் பகுதிகள் மற்றும் தெற்குப் பகுதிகளில் முழுதும் மழை சீசனே. எப்படி நடத்துவார்கள், ரிசர்வ் நாள் இல்லாமல் என்பதுதான் கேள்வி.

ஏன் ஜனவரி மார்ச்சிலோ, ஏப்ரலிலோ நடத்தியிருக்கலாமே? நடத்த முடியாததற்குக் காரணம் ஐபிஎல் சாளரத்தை பிசிசிஐ விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்பதே. இப்படியிருக்கையில் இந்தக் காலக்கட்டத்தில் நடத்த முடியும் என்றால் நடத்துங்கள் இல்லையென்றால் வேறு நாடுகள் இருக்கின்றன அங்கு நடத்திக் கொள்கிறோம் என்று பிசிசிஐ-யிடம் ஏன் ஐசிசி தெரிவிக்கவில்லை?

காரணம் பிசிசிஐ-யின் வர்த்தக, பணபலம் தான். இப்போது மட்டுமென்ன போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டால் பிசிசிஐ-க்கு ஒன்றும் நஷ்டம் ஏற்படாது. போட்டியின் அனைத்து ஒப்பந்தங்களையும் நம்பி எடுத்தவர்களுக்குத்தான் நஷ்டம் ஏற்படும். மழை வந்தால் டிஆர்பி ரேட்டிங் நிச்சயம் பாதிக்கப்படும். 2 மணிக்கு தொடங்கி 10 மணிக்குள் முடிய வேண்டிய போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் குறைந்தது 20 ஓவர்கள் நடத்துவதென்றால் கட் ஆஃப் டைம் இரவு 7:30 என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டிகள் போல் கடும் விமர்சனங்களுக்கு இடையேயும் விடிய விடிய நடத்திக் கொண்டிருக்க முடியாது. யார் அமர்ந்து பார்ப்பார்கள்? ஆகவே மழை வந்தால் இந்த உலகக்கோப்பை வர்த்தக அளவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதும் ரசிகர்கள் கொடுக்கும் அதிகப்படியான டிக்கெட் விலைகள் போன்றவைதான் இப்போது உலகக்கோப்பையின் பேசுபொருளாகியுள்ளது.

ஐபிஎல் சீசனை கொஞ்சம் ஒத்தி வைத்து விட்டு உலகக்கோப்பையை ஜனவரி - பிப்ரவரியிலோ அல்லது மார்ச் - ஏப்ரலிலோ நடத்தியிருந்தால் நல்ல உலகக்கோப்பையை பார்த்திருக்க முடியும். இப்போது வானத்தைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். பொதுவாகவே குளோபல் வார்மிங் என்னும் புவி வெப்பமடைதால் நிகழ்வினால் ஒட்டுமொத்த பூமியின் பருவநிலையே தலைகீழாக மாறி வரும்போது அதற்கேற்றவாறு ஐசிசி பிக்ச்சர்ஸை வடிவமைத்தல்தானே சரியாக இருக்க முடியும்?

பிசிசிஐ கால்ஷீட்டை நம்பியிருந்தால் இப்படிப்பட்ட இக்கட்டுகளை ஐசிசி சந்திக்க வேண்டிய நிலைதான் ஏற்படும். மறைந்த காமெடி நடிகர், விவேக் ஒரு படத்தில் கேட்பாரே, ‘இங்கிலீஷுக்கு கட் அவுட், தமிழுக்கு கெட் அவுட்டா?’ என்று அதேபோல்தான் இப்போது ஐசிசியும் கேட்க வேண்டும். “ஐபிஎல்-க்கு கட் அவுட், உலகக்கோப்பைக்கு கெட் அவுட்டா? என்று.

1992-ஆம் ஆண்டு இம்ரான் கான் உலகக் கோப்பையை வென்று கோப்பையை தூக்கியபடியே என்ன கூறினார் தெரியுமா? “துணைக் கண்டத்தில் கிரிக்கெட் என்பது மதம் போன்றது, அதிகாலை 3 மணியாக இருந்தாலும் உறக்கத்தைத் தியாகம் செய்து ரசிகர்கள் எழுந்து டிவி முன் உட்காருவார்கள். ஆனால் இந்த உலகக் கோப்பை பெருத்த ஏமாற்றத்தையே எங்களுக்கு அளித்தது. மிக மோசமாக ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட உலகக் கோப்பை இதுதான்” என்று சாடினார். அதே போன்ற விமர்சனத்தை இந்த உலகக்கோப்பை எதிர்நோக்காமல் இருக்க இயற்கையை ஐசிசி பிரார்த்திக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x