Published : 07 Jul 2014 03:20 PM
Last Updated : 07 Jul 2014 03:20 PM

ஹஷிம் ஆம்லா சதம்: இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

கொழும்புவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஹஷிம் ஆம்லா 109 ரன்கள் விளாச, ரயான் மெக்லாரன் 3 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்த இலங்கையை தென் ஆப்பிரிக்கா 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் 130 பந்துகளில் ஆம்லா 109 ரன்கள் எடுத்தார். மேலும் இவரும் கேப்டன் ஏ.பி.டிவிலியர்ஸ் (75) இணைந்து 3வது விக்கெட்டுக்காக 151 ரன்கள் சேர்க்க தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய இலங்கை அணியில் சங்கக்காரா மீண்டும் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 84 பந்துகளில் 88 ரன்கள் எடுத்தும் இலங்கை 40.3 ஓவர்களில் 229 ரன்களுக்குச் சுருண்டது. இன்னும் 10 ஓவர்கள் மீதமிருக்கையில் நின்று ஆட ஆளில்லாமல் இலங்கை மடிந்துள்ளது.

ஆட்டம் இலங்கை சார்பாகவே சென்று கொண்டிருந்தது. ஆனால் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரயான் மெக்லாரன் ஆட்டத்தின் 38வது ஓவரில் திரிமன்ன, சங்கக்காரா விக்கெட்டுகளைக் கைப்பற்ற சரிவு தொடங்கியது.

அதாவது கடைசி 5 விக்கெட்டுகள் வெறும் 13 ரன்களுக்கு விழுந்தது. இலங்கை பேட்ஸ்மென்களின் மோசமான ஷாட் தேர்வே சரிவுக்குக் காரணம் என்று கேப்டன் மேத்யூஸ் போட்டி முடிந்த பிறகு தெரிவித்தார்.

லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர் 7 ஓவர்களில் 50 ரன்கள் கொடுத்தாலும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இலங்கை சரிவில் முக்கியப் பங்காற்றினார்.

முன்னதாக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட் செய்ய முடிவெடுத்தது. 58 ரன்கள் சேர்த்த பிறகு குவிண்டன் டீ காக் மற்றும் ஜாக் காலிஸ் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

டீ காக் 27 ரன்களுக்கு மேத்யூஸ் பந்தில் பவுல்டு ஆனார். இதில் அவர் சேனநாயகே பந்தை மிட்விக்கெட்டில் அடித்த சிக்ஸ் அபாரம். அதன் பிறகுதான் டிவிலியர்ஸ், ஆம்லா சரிவை நிறுத்தி 141 பந்துகளில் 151 ரன்கள் சேர்த்தனர்.

இந்த வெற்றி தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் பெற்ற 3வது வெற்றியாகும். 17 போட்டிகளில் 3வது போட்டியை வென்றது தென் ஆப்பிரிக்கா.

ஆம்லா சதம் எடுத்ததற்கு இலங்கையே காரணம், அவர் 49 ரன்களில் இருந்தபோது திசரா பெரேரா லாங் ஆனில் கேட்ச் ஒன்றைக் கோட்டைவிட்டார். 8 பவுண்டரிகள் 1 சிக்சர் அடித்த ஆம்லா 109 ரன்கள் எடுத்து எல்.பி. ஆனார். அவர் எடுத்த 13வது ஒருநாள் சதமாகும் இது.

2வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் பல்லெகிலேயில் நடைபெறுகிறது. பிறகு ஞாயிறன்று ஹம்பன் டோட்டாவில் கடைசி ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x