Published : 26 Dec 2017 09:49 AM
Last Updated : 26 Dec 2017 09:49 AM

இலங்கைக்கு எதிராக மிகப்பெரியவெற்றியைப் பெற்ற இந்தியா

மும்பை இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இது இலங்கைக்கு எதிராக டி20 போட்டிகளில் இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும்.

டி20 தொடரில் இந்தியா, இலங்கை அணிகள் நேற்று முன்தினம் மும்பையில் மோதிய கடைசி ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி கண்டு இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது. இதன்மூலம் டி20 தொடரில் இந்தியா மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

சாதனைத் துளிகள்

2-வது முறையாக இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இதற்கு முன் 2016-ல் ஆஸ்திரேலியாவை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றிருந்தது.

இதுவரை டி20 போட்டிகளில் இந்தியா, இலங்கைக்கு எதிராக 14 போட்டிகளில் விளையாடி 10-ல் வெற்றி கண்டுள்ளது. 4 தோல்விகளைப் பெற்றுள்ளது. வெற்றி சதவீதம் 71.42.

2016 பிப்ரவரி 12 முதல் நடைபெற்ற டி20 போட்டிகளில் இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக 7 ஆட்டங்களில் இந்தியா வென்றுள்ளது. இதேபோல 2013 அக்டோபர் 10 முதல் 2017 அக்டோபர் 7 வரையிலான காலத்தில் இந்தியா 7 ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவை தொடர்ச்சியாக வென்றிருந்தது.

இந்த ஆண்டில் இந்தியா டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என 3 விதமான போட்டிகளில் மொத்தம் 37-ல் வெற்றி கண்டுள்ளது. இதில் 12 போட்டிகளில் இந்தியா தோல்வி கண்டது. 4 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை. ஓராண்டில் இந்தியா பெற்ற சிறப்பான வெற்றியாகும் இது.

2003-ல் ஆஸ்திரேலியா 47 போட்டிகளில் விளையாடி 38-ல் வெற்றி கண்டதே இதுவரை சிறப்பான வெற்றியாக உள்ளது.

2017 ஏப்ரல் 6 முதல் 2017 டிசம்பர் 24 வரை இலங்கை தொடர்ந்து 8 போட்டிகளில் தோல்வி கண்டு மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளது.

ஓராண்டில் 40 தோல்விகளைப் பெற்றுள்ளது இலங்கை. 57 ஆட்டங்களில் ஆடிய இலங்கை, 14-ல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. 3 ஆட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை.

இந்த ஆண்டில் ரோஹித் சர்மா 33 போட்டிகளில் விளையாடி 65 சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2015-ல் தென்னாப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் 63 சிக்ஸர்களை ஓராண்டில் விளாசியதே சாதனையாக இருந்தது.

இந்த டி20 தொடரில் ரோஹித் சர்மா 54 என்ற சராசரியில் 162 ரன்களைக் குவித்தார். இரு நாடுகளுடனான டி20 தொடர் போட்டியில் ஒரு இந்திய வீரர் குவித்த அதிகபட்ச ரன்களாகும் இது.

உனத்கட் தனது சிறப்பான பந்துவீச்சை (2வி-15) இந்த டி20 ஆட்டத்தில் பதிவு செய்தார். முதன்முறையாக டி20 போட்டிகளில்

ஆட்டநாயகன் விருதையும் அவர் பெற்றார்.

டி20 போட்டிகளில் அறிமுகமான இளம் இந்திய வீரர் (18 ஆண்டுகள் 80 நாட்கள்) என்ற பெருமையை வாஷிங்டன் சுந்தர் பெற்றார். இதற்கு முன் இந்திய வீரர் ரிஷப் பந்த் (19 ஆண்டுகள் 120 நாட்கள்) இந்த பெருமையைப் பெற்றிருந்தார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x