Last Updated : 24 Sep, 2023 05:16 AM

 

Published : 24 Sep 2023 05:16 AM
Last Updated : 24 Sep 2023 05:16 AM

உலகக் கோப்பை நினைவுகள் | கைகொடுத்த அதிர்ஷ்டமும், இம்ரானின் 20 நிமிடங்களும்

1992-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் யாரும் கணிக்க முடியாத வகையில் செயல்பட்டது இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி. அந்த அணிக்கு அதிர்ஷ்டமும் கைகொடுத்தது. இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 70 ரன்களில் சுருண்டிருந்தது. எளிதான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி 8 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன் எடுத்திருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது.

லீக் சுற்றை பாகிஸ்தான் 4 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லாத ஆட்டம் என 9 புள்ளிகளுடன் நிறைவு செய்திருந்தது. அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பு என்பது ஆஸ்திரேலியா - மேற்கு இந்தியத் தீவுகள் மோதிய கடைசி லீக் ஆட்டத்தின் முடிவை சார்ந்திருந்தது. மேற்கு இந்தியத் தீவுகள் வெற்றி பெற்றால் 10 புள்ளிகளுடன் கடைசியாக அணியாக அரை இறுதில் கால்பதிக்கலாம் என்ற சூழ்நிலை இருந்தது. ஆனால் அந்த ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் பாகிஸ்தான் அணி அரை இறுதி வாய்ப்பை பெற்றது.

இது ஒருபுறம் இருக்க பாகிஸ்தான் அணியின் நம்பிக்கையை கட்டியெழுப்பியதில் இம்ரான் கானின் பங்கு அசாத்தியமானது. லீக் சுற்றில் முதல் 5 ஆட்டங்களில் பாகிஸ்தான் ஒரே ஒரு வெற்றியை மட்டுமேபெற்றிருந்தது அதுவும் ஜிம்பாப்வேக்கு எதிராக. பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறும் விளிம்பில் இருந்தபோது, அந்த அணியின் கேப்டன் இம்ரான் கான் தனது வீரர்களை தட்டியெழுப்பி உத்வேகப்படுத்தினார்.

புலி பாய்வதற்கு தயாராக இருப்பது போன்ற வெள்ளை நிற டி-ஷர்ட்டுடன் இம்ரான் கான், தனது அணி வீரர்களைஓய்வறைக்கு அழைத்து சென்று சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக பேசினார். அவரது எழுச்சி உரை சக அணி வீரர்களுக்கு புதிய நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் கொடுத்தது. கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தை தனது வீரர்களுக்கு நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஆட்டத்திலும் டாஸ் போடுவதற்கு வரும் போது ‘புலி பாய்ச்சல்’ டி-ஷர்ட்டை அணிந்து வந்தார். இதனால் உத்வேகம் பெற்ற பாகிஸ்தான் அணி அதன் பின்னர் நியூஸிலாந்து, இலங்கை, இங்கிலாந்து ஆகிய அணிகளை வீழ்த்தியது.

அரை இறுதியில் தொடரை வெல்லக்கூடிய அணியாக திகழ்ந்த நியூஸிலாந்தை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். 263 ரன்கள் இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு முக்கியமான கட்டத்தில் இன்சமாம் உல் ஹக் 37 பந்துகளில் 60 ரன்கள் விளாசி அணியின் கனவை நனவாக்கியதில் பிரதான பங்கு வகித்தார். அவர், லீக் சுற்றில் 8 ஆட்டங்களிலும் கூட்டாக 123 ரன்களே சேர்த்திருந்தார். எனினும் அவர், மீது வைத்த இம்ரானின் நம்பிக்கை வீண்போகவில்லை. மற்றொரு அரை இறுதியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியிருந்தது.

இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 250 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 49.2 ஓவர்களில் 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதன்முறையாக உலகக் கோப்பையை கைகளில் ஏந்தியது. இறுதிப் போட்டியில் முக்கியமான தருணத்தில் வாசிம் அக்ரம் தனது அபாரமான ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சால் அடுத்தடுத்த பந்துகளில் ஆலன் லம்ப், கிறிஸ் லீவிஸ் ஆகியோரை போல்டாக்கினார். உலகக் கோப்பை வரலாற்றில் இன்று வரையிலும் இந்த பந்து வீச்சு பேசப்பட்டு வருகிறது.

இந்திய அணியானது மொகமது அசாரூதின் தலைமையில் களமிறங்கியது. 1983-ல் உலகக் கோப்பையில் சாம்பியன், அடுத்த உலகக் கோப்பையில் அரை இறுதி வரை அணியை எடுத்துச் சென்ற கபில்தேவ் ஆல்ரவுண்டராக அணியில் இருந்தார். 18 வயதான சச்சின் முதன்முறையாக உலகக் கோப்பையில் களமிறங்கினார். உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. பேட்டிங்கில் சச்சின் டெண்டுல்கர் 62 பந்துகளில் 54 ரன்களும், கபில்தேவ் 26 பந்துகளில் 35 ரன்களும் சேர்த்து முக்கிய பங்களிப்பை வழங்கி இருந்தனர். இந்த ஜோடி 8 ஓவர்களில் 60 ரன்கள் சேர்த்தது சிறப்பம்சமாக இருந்தது. 217 ரன்கள் இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி 48.1 ஓவரில் 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் ஜாவேத் மியான்தத், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கிரண் மோரே போன்று துள்ளிக் குதித்து பாவனை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வுக்கு சற்று முன்னர் மியான்தத் பேட்டிங் செய்த நிலையில் லெக் திசையில் சென்ற பந்தை பிடித்த கிரண் மோரே துள்ளி குதித்தவாறு அவுட்டுக்காக அப்பீல் செய்திருந்தார். இந்த நிகழ்வு சர்ச்சையாகவும் பின்னர் வேடிக்கையாவும் முடிவடைந்தது.

1992-ம் ஆண்டு உலகக் கோப்பையில் சுமாரான செயல் திறனை வெளிப்படுத்திய இந்திய அணி 2 வெற்றி, 5 தோல்விகளுடன் லீக் சுற்றில் 7-வது இடம் பிடித்து வெளியேறியது.

> கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக வீரர்கள் வண்ண ஆடைகளுடன் களமிறங்கினர். மேலும் பந்தின் நிறமும் வெள்ளையாக மாறியது. முத்தாய்ப்பாக கணிசமான ஆட்டங்கள் மின்னொளியில் நடத்தப்பட்டன.

> முந்தைய 4 தொடர்களில் இருந்தும் முற்றிலும் மாறுபட்ட வகையில் 1992-ம் ஆண்டு உலகக் கோப்ப கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டது. பங்கேற்ற 9 அணிகளும் ரவுண்ட் ராபின் முறையில் லீக் சுற்றில் மோதின. இதன்படி ஒவ்வொரு அணியும் மற்ற அணியும் தலா ஒரு முறை மோதின. இதில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4இடங்களை பிடித்த அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. அங்கிருந்து இரு அணிகள் பட்டம் வெல்ல பலப்பரீட்சை நடத்தின.

> 1970-ம் ஆண்டில் ஐசிசி, தென்னாப்பிரிக்காவை அதன் அரசாங்கத்தின் நிறவெறி கொள்கை காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து காலவரையின்றி இடைநீக்கம் செய்திருந்தது. இந்தத் தடை விலகி 1992-ம் ஆண்டு முதன் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றது.

‘பாயும் புலி’: 1992-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ் தனது அசாத்தியமான பீல்டிங் திறனால் வியக்க வைத்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பந்துடன் ஸ்டெம்பை நோக்கி பாய்ந்து விழுந்து, இன்சமாமை ரன் அவுட் செய்த விதம் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இன்றும் நீங்கா இடம் பெற்றுள்ளது. தான், நின்ற இடத்தில் இருந்து பந்தை த்ரோ செய்தால் ரன் அவுட் செய்யும் வாய்ப்பு 50 சதவீதம் இருக்கும் என கருத்திய ஜான்டி ரோட்ஸ் நொடிப்பொழுதில் பந்துடன் ஸ்டெம்பு மீது பாய்ந்து இன்சமாமை வெளியேற்றி இருந்தார்.

ஒரு பந்தில் 21 ரன்: அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா இலக்கை துரத்திய போது மழை குறுக்கீடு இருந்தது. ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 13 பந்துகளில் 23 ரன்கள் எடுக்க வேண்டும். அப்போது மழை காரணமாக 12 நிமிடங்கள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால் ஒரு ஓவர் குறைக்கப்பட்டது. இதில் 7 பந்துகளில் 22 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. ஆனால் சில நிமிடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஒரு ஓவர் குறைக்கப்பட்டு ஒரு பந்தில் 22 ரன் எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்த விசித்திரமான ‘விதி’ தென் ஆப்பிரிக்காவின் தலைவிதியை புரட்டிபோட்டது.

பங்கேற்ற அணிகள்: ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே.

இறுதிப் போட்டி

அதிக ரன்கள், அதிக விக்கெட்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x