Published : 22 Dec 2017 10:35 AM
Last Updated : 22 Dec 2017 10:35 AM

2-வது டி 20 ஆட்டத்தில் இன் று மோதல்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா;பதிலடி கொடுக்குமா இலங்கை அணி

இலங்கை அணிக்கு எதிரான 2-வது டி 20 ஆட்டத்தில் இன்று இந்திய அணி மோதுகிறது. இந்தூரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் ரோஹித் சர்மா குழுவினர் களமிறங்குகின்றனர்.

இரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் கட்டாக்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி 20 ஆட்டத்தில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 181 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 16 ஓவர்களில் வெறும் 87 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் டி 20 வரலாற்றில் இந்திய அணி பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன்னர் கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.

அதேவேளையில் தனது 100-வது சர்வதேச டி 20 ஆட்டத்தில் பங்கேற்ற இலங்கை அணி மோசமான தோல்வியை பதிவு செய்தது. இதற்கு முன்னர் அந்த அணி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. மேலும் இலங்கை அணி இந்த ஆண்டில் டி 20 ஆட்டங்களில் தொடர்ச்சியாக 6-வது தோல்வியை பதிவு செய்துள்ளது. இதில் 5 தோல்விகள் இந்திய அணிக்கு எதிரானவையாகும்.

எந்தவித போராட்டமும் இல்லாமல் ஆட்டம் ஒருதரப்புக்கு சாதகமாக அமைவதும், பலவீனமான இலங்கை அணிக்கு எதிராக மீண்டும் மீண்டும் போட்டிகள் நடத்தப்படுது ஏன்? என்ற தர்க்கரீதியான கேள்விகள் பல்வேறு தரப்பில் இருந்து தற்போது அதிகமாக எழத்தொடங்கி உள்ளது.

சாதகமான சூழ்நிலையில் வலுவில்லாத அணிக்கு எதிரான மேலாதிக்கம் செலுத்தும் இந்திய அணிக்கு, இந்தத் தொடர் எந்த வகையில் தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்துக்கான முன் தயாரிப்பாக அமையும் என்பது தெரியவில்லை.

இந்திய பேட்ஸ்மேன்கள் எதிர்தாக்குதல் தொடுக்கும் அளவுக்கு பலத்தை கொண்டிராத அணிக்கு எதிராக ரன் வேட்டையாடி மகிழ்ச்சி கொள்கின்றனர். ரன்கள் குவிப்பதும், விக்கெட்கள் எடுப்பதும் ஒரு வகையில் வீரர்களுக்கு நம்பிக்கையை வழங்கும்தான். ஆனால் இந்த திறன்கள் எல்லாம் தென் ஆப்பிரிக்க சூழ்நிலைகளில் எந்த அளவுக்கு கணக்கிடப்படும் என்ற கேள்விகளும் எழுகின்றன.

இது ஒருபுறம் இருந்தாலும் இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வரும் நிலையில் இலங்கை அணி இந்த விஷயத்தில் மோசமான கட்டத்தில் உள்ளது. அந்த அணிக்கு தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தக்கூடிய வீரர்கள் தேவையாக உள்ளனர். விராட் கோலி, ஷிகர் தவண், புவனேஷ்வர் குமார் போன்ற முக்கியமான வீரர்கள் இடம்பெறாத நிலையிலும் இலங்கை அணியால் தோல்வியின் பிடியில் இருந்து மீளமுடியவில்லை. மூத்த வீரரான ஏஞ்சலோ மேத்யூஸை மட்டுமே மலைபோல் அணி நம்பி இருக்கிறது.

அவர் உட்பட சில மூத்த வீரர்கள், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராகவும் பந்து வீச்சாளர்களுக்கு எதிராகவும் எதிர் தாக்குதல் தொடுப்பதில் தடுமாறுகின்றனர். அதேவேளையில் ஐபிஎல் போன்ற தொடர்களின் வாயிலாக இந்திய அணியில் இடம் பெறும் வீரர்களின் திறனும் வலுப்பெற்று வருகிறது. யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் சர்வதேச போட்டிகளில் நுழைந்த சிறிது காலத்திலேயே தங்களது திறனை சிறந்த முறையில் செதுக்கிக் கொண்டும், அதனை சரியாக நிர்வகித்தும் வருகின்றனர்.

இந்திய அணிக்கு எதிராக போராட வேண்டும் என்றால் கேப்டன் திசாரா பெரேரா, உபுல் தரங்கா, மேத்யூஸ் ஆகியோர் சிறந்த திறனை வெளிப்படுத்தி அணியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் இவர்கள் 3 பேரும் தான் அணியில் நீண்டகாலமாக பயணித்து வருகின்றனர். இவர்கள் வலுவான திறனை வெளிப்படுத்தினால் மட்டுமே ஏமாற்றங்களை சந்தித்து வரும் ஒட்டுமொத்த அணியிடத்தில் நம்பிக்கையை உண்டாக்கும். துஷ்மந்தா சமீரா, தனஞ்ஜெயா டி சில்வா போன்ற வளரும் நட்சத்திரங்களை சரியான முறையில் வழிநடத்தினால் அவர்களிடம் இருந்து தொடர்ச்சியாக சிறந்த திறன்கள் வெளிப்படக்கூடும்.

தற்போதைய இலங்கை வீரர்களின் அணி சேர்க்கையுடன் ஒப்பிடும் போது, இந்தியா வலுவான அணியாக களமிறங்க தேவையில்லை என்றே கருதப்படுகிறது. ஆனால் அதேவேளையில் இந்திய வீரர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில் சிறந்த திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். இதை அவர்கள் தொடரவே செய்வார்கள். தற்போதைய சூழலில் வெற்றி பெற்றால் பெரிய அளவில் பாராட்டுகள் இருக்காது. ஆனால் தோல்வியடைந்தால், அதிலும் பலவீனமான அணிக்கு எதிராக வெற்றியை பெறமுடியாவிட்டால் நிச்சயம் அது எதிர்மறையான விமர்சனங்களை அள்ளித் தெளிக்கும்.

சமீபகாலமாக மகேந்திர சிங் தோனியின் டி 20 பார்ம் சந்தேகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், கட்டாக் போட்டியில் 4-வது வீரராக களமிறக்கப்பட்ட நிலையில் சிறந்த திறனை மீண்டும் வெளிப்படுத்தினார். 22 பந்துகளில் 39 ரன்கள் விளாசிய அவர், மீண்டும் அதே பேட்டிங் வரிசையில் களமிறக்கப்படும் பட்சத்தில் கூடுதல் ஓவர்களை எதிர்கொள்ள வசதியாக இருக்கும். இது சவாலான தென் ஆப்பிரிக்க தொடரில் தோனி தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொள்ள உதவும்.

விராட் கோலி இல்லாத சூழலை இளம் வீரரான ஸ்ரேயஸ் ஐயர் சரியாக பயன்படுத்திக் கொண்டு கணிசமான அளவில் ரன்கள் சேர்த்து வருகிறார். கே.எல்.ராகுலும் நல்ல பார்மில் உள்ளார். பந்து வீச்சாளர்களும் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் இலங்கை அணி மீது மீண்டும் ஒரு முறை இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினால் அது ஆச்சர்யப்படுவதற்கான விஷயமாக இருக்காது.

அணிகள் விவரம்

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தோனி, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ், தீபக் ஹூடா, பும்ரா, முகமது சிராஜ், பாசில் தம்பி, உனத்கட்.

இலங்கை: திசாரா பெரேரா (கேப்டன்), உபுல் தரங்கா, மேத்யூஸ், குசால் பெரேரா, குணதிலகா, திக்வெலா, குணரத்னே, சதீசமரவிக்ரமா, ஷனகா, சதுரங்கா டி சில்வா, பதிரனா, தனஞ்ஜெயா டி சில்வா, நூவன் பிரதீப், விஷ்வா பெர்னான்டோ, துஷ்மந்தா சமீரா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x