Published : 21 Sep 2023 06:24 PM
Last Updated : 21 Sep 2023 06:24 PM

அஸ்வின் முதல் பவானி தேவி வரை - மைதானத்தை அதிர வைத்தவர்கள்! 

அஸ்வின் நம்பர் 2! - மொகாலியில் 2022இல் இந்தியா - இலங்கை இடையேயான டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர்களின் பட்டியலில் கபில்தேவை (434) முந்தினார். தற்போது வரை 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் அஸ்வின் 486 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 619 விக்கெட்டுகளுடன் அனில் கும்ப்ளே முதலிடத்தில் உள்ளார். இதேபோல 3 வடிவ போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என்கிற பெருமையையும் அஸ்வின் (712 விக்கெட்டுகள்) பெற்றார். இந்த வகையில் அனில் கும்ப்ளே (953 விக்கெட்டுகள்) முதலிடத்தில் உள்ளார்.

கவனம் ஈர்த்த வீரர்: இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்ற ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கித் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த அணியில் இடம் பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த முன்கள வீரரான கார்த்தி செல்வம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். வேகம், துல்லியம், கோல் அடிக்கும் திறமை ஆகியவை அவருக்குப் போட்டியின் சிறந்த இளம் வீரருக்கான விருதைப் பெற்றுக்கொடுத்தது.

நீரஜ் சோப்ராவின் ‘தீரா வேட்டை: உலக விளையாட்டு அரங்கில் இந்திய வீரர், வீராங்கனைகள் கடந்த சில ஆண்டுகளாகவே புதிய உயரங்களை எட்டி வருகின்றனர். இதில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். 2022 உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

கடந்த மாதம் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த், டைமண்ட் லீக் தொடர்களில் 4 முறை பட்டம், டைமண்ட் லீக் சாம்பியன்ஸ் டிராபி என நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் மகுடம் சூடாத போட்டிகளே இல்லை. இதன் மூலம் ஈட்டி எறிதலில் அமெரிக்கா, ஜெர்மனி, பின்லாந்து வீரர்களின் ஆதிக்கத்துக்கு முடிவுகட்டியுள்ளார்.

கால்பந்து குதிரை: உலகின் புகழ்பெற்ற விளையாட்டான கால்பந்தில் பல தசாப்தங்களாக இந்தியாவுக்கு ஒரு நல்ல அணி இருந்ததில்லை. ஆனால், இன்றோ கால்பந்து விளையாட்டில் சர்வதேசத் தொடர்களில் கோப்பையை வெல்லும் அளவுக்கு இந்திய அணி உருவெடுத்திருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, இந்திய வீரர் சுனில் சேத்ரியின் சாதனை உலக அளவில் அணிக்குப் பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது.

சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் புகழ்பெற்ற நட்சத்திர ஆட்டக்காரர்களின் வரிசையில் அவரும் இடம்பிடித்து அசத்தியுள்ளார். தற்போதைய நிலையில் போர்ச்சுக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 123 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஈரானில் அலி டெய் (108 கோல்) இரண்டாமிடத்திலும் அர்ஜெண்டினாவின் லியனோல் மெஸ்ஸி (102 கோல்) மூன்றாமிடத்திலும் உள்ளனர். இந்தியாவின் சுனில் சேத்ரி 92 கோல்களுடன் நான்காம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நம்பர் ஒன் குகேஷ், வியக்க வைக்கும் பிரக்ஞா: கடந்த ஓராண்டுக் காலமாக உலக செஸ் அரங்கில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கி உள்ளனர் இந்திய கிராண்ட் மாஸ்டர்களும் சென்னையைச் சேர்ந்தவர்களுமான டி.குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோர். அண்மையில் முடிவடைந்த உலகக் கோப்பை செஸ் தொடரில் உலகின் முதல் நிலை வீரரும் 5 முறை உலக சாம்பியனுமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனைக் கடும் சோதனைகளுக்கு உள்படுத்தினார் பிரக்ஞானந்தா. இதனால் இறுதிப் போட்டியை டை பிரேக்கருக்குக் கொண்டு சென்றே கார்சனால் வெற்றி பெற முடிந்தது.

வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தா அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கேண்டிடேட்ஸ் போட்டியில் பங்கேற்கிறார். விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் இரண்டாவது வீரர் பிரக்ஞானந்தா. பிரக்ஞானந்தா அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகி உள்ள நிலையில், டி.குகேஷ் இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக உருவெடுத்துள்ளார்.

அதிலும், இந்தப் பட்டத்தை 38 ஆண்டுகளாகத் தன்வசம் வைத்திருந்த விஸ்வநாதன் ஆனந்தைக் கீழே இறக்கி முன்னேறிச் சென்றுள்ளார். இத்தனைக்கும் விஸ்வநாதன் ஆனந்த், குகேஷுக்கு மானசீக குரு. குருவை மிஞ்சிய சிஷ்யனின் அடுத்த கணக்கு உலகின் நம்பர் 1 வீரர் இடத்தை அடைவதுதான். அந்த இலக்கை நோக்கி குகேஷ் பயணிக்கவும் தொடங்கிவிட்டார்.

பாட்மிண்டனில் வரலாறு: பாங்காங்கில் கடந்த ஆண்டு நடைபெற்ற தாமஸ் கோப்பையில் லக்சயா சென், ஹெச்.எஸ்.பிரனோய், கிடாம்பி ஸ்ரீகாந்த், சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஆகியோரை உள்ளடக்கிய இந்திய பாட்மிண்டன் அணி 72 வருட வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. இறுதிப் போட்டியில் 14 முறை சாம்பியனான இந்தோனேஷியாவை 3-0 என முழுமையாகப் பந்தாடியிருந்தது.

மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்: ஹங்கேரியில் முடிவடைந்த உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இடம்பெற்ற 4 இந்திய வீரர்களில் திருச்சியைச் சேர்ந்த ராஜேஷ் ரமேஷ் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருந்தார். தகுதிச் சுற்றில் ராஜேஷ் ரமேஷை உள்ளடக்கி இந்திய அணி பந்தய தூரத்தை 2:59.92 விநாடிகளில் எட்டி ஆசிய அளவில் சாதனை படைத்தது.

திருச்சி ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றிவரும் ராஜேஷ் ரமேஷ், ஆங்க்ரலிக் எனப்படும் இறுதிக் கட்டத்தில் மின்னல் வேகத்தில் முன்னேறிச் சென்றார். எனினும் இறுதிப் போட்டியில் இந்திய அணி தாக்கம் ஏற்படுத்தத் தவறியது. இருப்பினும் அமெரிக்கர்களும் ஆப்பிரிக்கர்களும் கோலோச்சும் ஓட்டப்பந்தயத்தில் 5ஆவது இடம் என்பது இலக்கை எட்டிப் பிடிக்கும் தூரமே.

அடுத்த பி.டி. உஷா: தெலங்கானாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேசியத் தடகளப் போட்டியில் கோவையைச் சேர்ந்த வித்யா 400 மீட்டர் ஓட்டம், தடை ஓட்டம், கலப்புத் தொடர் ஓட்டம் ஆகிய 3 பிரிவுகளில் தங்கம் வென்று கவனம் ஈர்த்தார். இதன் நீட்சியாகக் கடந்த வாரம் சண்டிகரில் நடைபெற்ற இந்தியன் கிராண்ட் பிரீ 5 போட்டியில் மகளிருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வித்யா ராம்ராஜ் இலக்கை 55.43 விநாடிகளில் கடந்தார்.

இது 1984 லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் 4ஆவது இடம் பிடித்த இந்தியாவின் தங்க மங்கை என அழைக்கப்படும் பி.டி.உஷாவின் இலக்கு 55.42. இவரைவிட 0.01 விநாடி நேரம்தான் வித்யா அதிகம் எடுத்துள்ளார்.

டோக்கியோவும் தமிழக வீரர்களும்: டோக்கியோ ஒலிம்பிக்கில் தமிழகத்தில் இருந்து வீரர், வீராங்கனைகள் 11பேர் இந்தியா சார்பில் பங்கேற்றனர். கலப்பு 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகியோரும் ஆடவருக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோரும் டேபிள் டென்னிஸில் சரத் கமல், சத்தியன் ஞானசேகரன் ஆகியோரும் வாள்வீச்சில் பவானி தேவியும் படகுப் போட்டியில் நேத்ரா குமணன், கணபதி, வருண் தாக்குர் ஆகியோரும் கலந்து கொண்டனர். இவர்களில் யாரும் பதக்கம் வெல்லாவிட்டாலும் உலக விளையாட்டுத் திருவிழாவில் பங்கேற்கத் தகுதி பெற்றதும் பெருமைக்குரியதுதான்.

முப்பொழுதும் வாள் வீச்சு: இந்த ஆண்டில் ஜூன் மாதம் சீனாவின் வுக்ஸி நகரில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சி.ஏ.பவானி தேவி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அரை இறுதியில் அவர், ஒரு புள்ளி வித்தியாசத்தில் உஸ்பெகிஸ்தானின் ஜெய்னாப் தயிபெகோவாவிடம் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.

இந்தத் தொடரில் பவானி தேவி, உலக சாம்பியனான ஜப்பானின் மிசாகி எமுராவை தோற்கடித்தார். சென்னையைச் சேர்ந்த பவானி தேவி, ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் அடுத்த ஆண்டு நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக்கிலும் பங்கேற்பதற்காக வெளிநாடுகளில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் விளையாடும் கனவை நனவாக்கத் தற்போது பிரான்ஸின் ஆர்லியன்ஸ் நகரில் பயிற்சி எடுத்துவருகிறார் பவானி தேவி.

தொகுப்பு: மாரிமுத்து, மிது கார்த்தி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x