Published : 28 Dec 2017 03:53 PM
Last Updated : 28 Dec 2017 03:53 PM

குக் சாதனைத் துளிகள்; பிராட் அவுட் சர்ச்சை: மெல்போர்ன் டெஸ்ட் சுவையான தகவல்கள்

மெல்போர்ன் மைதானத்தில் ஆஷஸ் தொடர் 4-வது டெஸ்ட் 3-ம் நாள் ஆட்டத்திலும் அலிஸ்டர் குக்கை ஆஸி.யால் வீழ்த்த முடியவில்லை. அவர் 244 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ ஆஸ்திரேலியா 491/9 என்று இன்றைய தினத்தை 164 ரன்க்ள் முன்னிலையில் முடித்துள்ளது.

தொடர்ந்து 2-வது நாளாக நாட் அவுட்டாகத் திகழும் அலிஸ்டர் குக்கிற்கு ஆஸ்திரேலிய வீரர்கள் 2-வது நாளாக கைகொடுத்தனர்.

குக் அடித்த அவரது 5-வது டெஸ்ட் சதம் சில சாதனைகளுக்கு அவரைச் சொந்தக் காரராக்கியுள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட இரட்டை சதம் அடித்த 3வது வீரரானார் குக்.

 

வாலி ஹேமண்ட் மற்றும் பிரையன் லாரா மற்ற இரட்டைச் சத வீரர்களாவார்கள். மெல்போர்னில் வருகை தந்த அணி வீரர் அடித்த அதிக ஸ்கோர் சாதனையையும் குக் நிகழ்த்தியுள்ளார். விவ் ரிச்சர்ட்ஸ் இங்கு 1984-ல் அடித்த 208 ரன்களே சாதனையாக இருந்தது.

பிரிஸ்பனில் 2010-11-ல் 235 ரன்கள் எடுத்த குக், ஆஸ்திரேலியாவின் பிரதான மைதானங்களில் இரண்டில் அதிக ஸ்கோர்களை அடித்த அயல்நாட்டு பேட்ஸ்மென் என்ற சாதனைக்குரியவரானார்.

ஓராண்டில் 2 இரட்டைச் சதம் அடித்த இரண்டே வீரர்கள் தற்போது விராட் கோலி, அலிஸ்டர் குக்.

பிரிஸ்பனில் குக் 235 அதிக ஸ்கோர், மெல்போர்னில் குக் 244 (இன்னும் அவுட் ஆகவில்லை) அதிக ஸ்கோர், அடிலெய்டில் ராகுல் திராவிட் எடுத்த 233 ரன்கள் இங்கு வெளிநாட்டு வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர். பெர்த்தில் ராஸ் டெய்லர் 290 ரன்கள் எடுத்து பெர்த் சாதனையை கைவசம் வைத்துள்ளார். சிட்னியில் மட்டும் 1903-ல் டிப் ஃபாஸ்டர் எடுத்த 287 தான் இன்று வரை அதிகபட்ச தனி வீரர் ஸ்கோராக இருந்து வருகிறது.

அதே போல் 150+ ஸ்கோர்களை குக் 11 முறை எடுத்துள்ளார். இவர்தான் அதிக முறை 150+ ஸ்கோர்களை எடுத்த இங்கிலாந்து வீரராகிறார்.

அதே போல் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மகேலா ஜெயவர்தனே, சந்தர்பால், பிரையன் லாரா ஆகியோரைக் கடந்து இன்று 6-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் குக்.

ஸ்மித், குக்கிற்கு 153 ரன்களில் மீண்டும் ஒரு கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார்.

ஸ்டூவர்ட் பிராட் அதிரடி அரைசதமும் அவுட் சர்ச்சையும்

அலிஸ்டர் குக்கும், ஸ்டூவர்ட் பிராடும் இணைந்து 9-வது விக்கெட்டுக்காக 100 ரன்களைச் சேர்த்தனர், அதாவது 373/8லிருந்து 473/9 வரை கொண்டு சென்றனர், இதில் பிராட் 63 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்து சர்ச்சைக்குரிய விதத்தில் அவுட் தீர்ப்பளிக்கப்பட்டார்.

இவருக்கு பவுன்சர்களாகவே ஆஸ்திரேலியா வீசினர், இவரும் சில பந்துகளில் ஒதுங்கினார், குனிந்தார், பிறகு ஹூக், புல், ஸ்லேஷ் ஷாட்களை ஆடினார், நேதன் லயனை நேராக ஒரு சிக்ஸ் தூக்கினார், டைமிங்கில் அவரை ஒரு பாயிண்ட் பவுண்டரி விளாசினார். மொத்தத்தில் அபாராமாக ஆடி கிறிஸ் லூயிஸுக்குப் பிறகு 9-ம் நிலை வீரராக அரைசதம் அடித்தார். ஆஸ்திரேலியா 9-வது விக்கெட்டுக்காக இதுவரை 8 முறை சதக்கூட்டணியை அனுமதித்துள்ளனர், கடந்த முறை சென்னையில் தோனி 224 ரன்கள் விளாசிய போது புவனேஷ்வர் குமாருடன் இணைந்து தோனி 9-வது விக்கெட்டுக்காக 140 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பிராடுக்கு இன்று அவுட் கொடுக்கப்பட்டது பரிதாபமே. இன்னிங்ஸின் 138-வது ஓவர், கமின்ஸ் வீசினார், மீண்டும் ஒரு ஷார்ட் பிட்ச் பந்து. ஸ்லேஷ் செய்தார் தேர்ட்மேனில் பந்து காற்றில் சென்று இறங்கும் தருணத்தில் கவாஜா ஒடி வந்து தரைக்கு சற்று மேலே கேட்சைப் பிடித்தார் பந்து கையிலிருந்து நழுவியது தெரிந்தது, கவாஜா உருண்டு பந்தோடு பந்தாக எழுந்து கேட்ச் பிடித்துவிட்டேன் என்றார்.

நடுவர் தர்மசேனா அவுட் என்ற சிக்னலுடன் 3-வது நடுவர் திரும்பத் திரும்ப ரீப்ளேவைப் பார்த்தார் ஒரு கோணத்தில் பந்து தரையில் பட்டது போல் தெரிந்தது, ஆனால் தீர்மானமாக, உறுதியாக கேட்ச் தானா என்று கூற முடியவில்லை, சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மெனுக்குப் போவதற்குப் பதிலாக பீல்டருக்கு அளிக்கப்பட்டது, பிராட் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.

மொயின் அலி 7 இன்னிங்ஸ்களில் இன்று 6-வது முறையாக நேதன் லயனிடம் விக்கெட்டை இழந்தார்.

நாளை 200 ரன்கள் முன்னிலையை குக் உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x