Published : 14 Sep 2023 03:43 PM
Last Updated : 14 Sep 2023 03:43 PM

2019 உலகக் கோப்பை ஹீரோ ரிட்டர்ன்ஸ்... - சாதனையுடன் அதிரடி முறைகளுக்குத் திரும்பிய பென் ஸ்டோக்ஸ்!

உலகக் கோப்பை நெருங்குகிறது. ஆஸ்திரேலியாவில் டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆடுவதைப் பார்த்தால் அச்சமாக உள்ளது. இங்கிலாந்து ஏற்கெனவே அதிரடி அணியாகத் திகழ்கிறது, இந்நிலையில், பென் ஸ்டோக்ஸ் ரிட்டையர்மென்ட்டிலிருந்து மீண்டும் அணிக்கு வந்து நேற்று நியூஸிலாந்துக்கு எதிராக 124 பந்துகளில் 15 பவுண்டரிகள் 9 சிக்சர்களுடன் 182 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் அதிகபட்ச தனிப்பட்ட ஒரு நாள் ஸ்கோர் சாதனையை நிகழ்த்தினார். நேற்று பென் ஸ்டோக்ஸ் காட்டிய அதிரடி ஆட்டம் இங்கிலாந்து அணியை மேலும் அச்சுறுத்தல் அணியாக உயர்த்தியுள்ளது.

நியூஸிலாந்து அணிக்கு மீண்டும் திரும்பிய ட்ரெண்ட் போல்ட் நேற்றும் பந்துகளை ஸ்விங் செய்ய இங்கிலாந்து 13/2 என்று தடுமாறிய போது இறங்கினார் பென் ஸ்டோக்ஸ். 76 பந்துகளில் சதம் விளாசி தனது 4வது ஒருநாள் சதத்தை எட்டினார், இவரும் டேவிட் மலானும் (96 ரன்கள் 95 பந்துகள் 12 நான்கு, ஒரு ஆறு) சேர்ந்து 199 ரன்களை 165 பந்துகளில் வெளுத்துக் கட்டினார்கள்.

பவுலர் யார் என்றெல்லாம் பார்க்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே மேலேறி வந்து ஆடுவது, லெக் ஸ்டம்பில் ஒதுங்கிக் கொண்டு ஆஃப் திசையில் வெளுத்துக் கட்டுவது என்று பிரெண்டன் மெக்கல்லம்மின் ‘பாஸ்பால்’ முறையை ஒருநாள் போட்டிகளிலும் ஆடினார். நியூஸிலாந்தின் அதிவேகப் பவுலர் பெர்கூசன், நம் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சொல்வது போல் ‘நேரே நேரே வந்து மோதினார்’ பென் ஸ்டோக்ஸ் இவரை முதலில் மூன்று பவுண்டரிகள் விளாசினார். அதிலிருந்து திரும்பிப் பார்க்கவில்லை. பெர்கூசன் மோது மோதென்று மோதி கடைசியில் 9 ஓவர் 80 ரன்கள் என்று படுமோசமான ஒரு ஸ்பெல்லாகிப் போனது. கிளென் பிலிப்ஸ் பந்தை ஸ்டோக்ஸ் அடித்த ஷாட் ஸ்டேடியத்தின் 2வது அடுக்கில் போய் விழுந்தது.

முழங்கால் காயத்துடன் ஆடும்போதே இந்த அடி என்றால் காயமில்லை என்றால் இன்னும் என்ன ஆகும் என்று தெரியவில்லை. அவர் ஆடிய கடைசி 31 பந்துகளில் மட்டும் 6 சிக்சர்களை விளாசினார். 2019 உலகக்கோப்பை நாயகன் இந்த முறையும் இங்கிலாந்து உலக சாம்பியனாவதை உறுதி செய்வார் என்ற நம்பிக்கைப் பிறந்துள்ளது. குல்தீப் யாதவ்தான் நம்மை இவரிடமிருந்து காப்பாற்ற வேண்டும். 182 ரன்கள் என்பதில் ஜேசன் ராயின் 151 பந்து 180 ரன்கள் சாதனையைக் கடந்தார். அதே போல் அலெக்ஸ் ஹேல்ஸ் 122 பந்துகளில் எடுத்த 171 ரன்களையும் அனாயசமாகக் கடந்தார்.

அகமதாபாதில் அக்டோபர் 5ம் தேதி 2019 உலகக்கோப்பை இறுதிப் போட்டியாளர்களான இங்கிலாந்தும் - நியூஸிலாந்தும் மீண்டும் மோதும் போது ரணகளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணியில் உலகக்கோப்பையில் டேவிட் மலான், பேர்ஸ்டோ ஓப்பனிங் இறங்கினால், மிடில் ஆர்டரில் பென் ஸ்டோக்ஸுடன் ஹாரி புரூக், ஜாஸ் பட்லர் சேர்ந்தால் அதகளம்தான்.

இங்கிலாந்தின் இந்த அதிரடியிலும் போல்ட் 5 விக்கெட்டுகளை 51 ரன்களுக்கு கைப்பற்றியது நியூஸிலாந்துக்கு ஒரு ஆறுதல் செய்தி. வேகப்பந்து வீச்சை மட்டுமல்ல ரச்சின் ரவீந்திரா ஸ்பின்னையும் விளாசித் தள்ளிய பென் ஸ்டோக்ஸ், ஸ்பின் பவுலிங்கில் 35 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். இதில் ராச்சின் ரவீந்திராவை அடித்த 3 பெரிய சிக்சர்களினால் அவரை மீண்டும் பந்து வீசவே அழைக்க முடியாமல் செய்துவிட்டார்.

அனைத்தையும் விட பென் ஸ்டோக்ஸ் இந்தச் சதம் குறித்து பேசியதுதான் விஷயமே: “சும்மா ஒருநாள் கிரிக்கெட் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்று பரிச்சயம் செய்து கொள்ள ஆடினேன்” என்கிறார். பரிச்சயம் செய்து கொள்ளலே இந்த அடின்னா, சீரியஸா ஆடினா என்ன ஆகும் என்று அவர் எச்சரிக்கை விடுப்பது போல் தெரிகிறது. மேலும் தன் ரோல் பந்து வீச்சு அல்ல, வெறும் பேட்டிங் தான் என்றவுடனேயே மனத்தெளிவு ஏற்பட்டு விட்டதாகக் கூறுகிறார் பென் ஸ்டோக்ஸ்.

எது எப்படியிருந்தாலும் டேவிட் வார்னர், ட்ராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், மலான், கோலி, ரோகித், ராகுல், பாபர் அசாம், கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், குவிண்டன் டி காக், அய்டன் மார்க்ரம், ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் என்று வரும் உலகக்கோப்பை அதிரடி வீரர்களினால் களைக் கட்டப்போவது என்னவோ நிச்சயம்! பிட்சை ஒழுங்காகப் போட வேண்டும், குழிப்பிட்சைப் போட்டு சுவாரஸ்யமற்ற குறைந்த ஸ்கோர் மேட்ச்களாக்கி விடக்கூடாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x