Published : 11 Sep 2023 06:11 PM
Last Updated : 11 Sep 2023 06:11 PM

“பாண்டியா, ஜடேஜாவை யுவராஜ் சிங் உடன் ஒப்பிடாதீர்கள்!” - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

2011 உலகக் கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வென்றதன் பசுமையான நினைவுகளுடன் இந்திய ரசிகர்கள் மீண்டும் அது போன்ற ஒன்று நிகழ வேண்டும் என்ற ஆவலுடன் உலகக் கோப்பையை எதிர்நோக்குகின்றனர். அதற்காக நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை 50 ஓவர் தொடரில் இந்திய வீரர்களின் ஆட்டத்தை ரசிகர்கள் கூர்மையாக அவதானித்து வருகின்றனர். 2011 உலககக் கோப்பை என்றால் தொடர் நாயகன் யுவராஜ் சிங் நினைவு வருவதை தவிர்க்க முடியாது. அந்த உலகக் கோப்பை வெற்றி அவருடையது என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.

யுவராஜ் சிங் ஆல்ரவுண்டராக சிறப்பாக 2011 உலகக் கோப்பையில் செயல்பட்டார். 362 ரன்களையும் 9 மேட்ச்களில் 15 விக்கெட்டுகளையும் கைப்பற்றி தவிர்க்க முடியாத பங்களிப்பினைச் செய்து வெற்றிக்கு முழுமுதற் காரணமாகத் திகழ்ந்தார். ஆனால் இவர்களையெல்லாம் மறந்து தோனி ரசிகர்கள் 2011 உலகக் கோப்பையையே ஏதோ தோனி என்ற ஒரு தனிநபரின் மகாத்மியத்தினால் வென்றது போல் கருதும் போக்கு இருப்பதாக கவுதம் கம்பீர் போன்றோர் கண்டித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்காக வக்கார் யூனிஸ், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தங்கள் கலந்துரையாடலில் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். அப்போது யுவராஜ் சிங் போல் இப்போது ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இது தொடர்பாக வக்கார் யூனிஸ் கூறியதாவது: “ஹர்திக் பாண்டியாவும் ஜடேஜாவும் என்ன கொண்டு வருகின்றனர் என்பதைப் பார்க்க வேண்டும். இருவருமே பேட்டிங், பவுலிங்கில் சிறப்பாகச் செயல்படுகின்றனர். பாகிஸ்தானுடன் அன்று குறிப்பாக ஹர்திக் பாண்டியா பேட் செய்ததை வைத்துக் கூறுகிறேன்.

6-ம் நிலையில் ஹர்திக் பாண்டியா உண்மையில் எதிரணியை சிதைக்கக் கூடிய பேட்டர் என்பதில் சந்தேகமில்லை. அவரைப் போன்ற ஒரு ஆல்ரவுண்டரை எந்த அணியும் விரும்பும். அவர் ஆக்ரோஷமாக ஆடுகிறார். அதே வேளையில் விவேகத்துடனும் சமயோசிதத்துடனும் ஆடுகிறார். ஆகவே ஹர்திக் பாண்டியா உண்மையில் இந்திய அணிக்கு ஒரு பெரிய பங்களிப்பாளராக இருப்பார்.

சாம்பியன் போல் ஆடினார். வந்தவுடன் செட்டில் ஆக கொஞ்சம் கால அவகாசம் எடுத்துக் கொண்டார். பிறகு சரியான நேரம் பார்த்து தன் இயல்பான ஆட்டத்திற்குத் திரும்பினார் பாண்டியா. ஆகவே 6 மற்றும் 7 -ம் நிலைகளில் பாண்டியா, ஜடேஜா இந்திய அணிக்கு ஒரு ‘புஷ்’ கொடுப்பார்கள். இந்திய அணி முதலில் படபடவென விக்கெட்டுகளை இழக்காமல் இருக்குமேயானால், இவர்கள் இருவரும் கடைசி 10 ஒவர்களில் எந்த இலக்கையும் விரைவில் விரட்டுவார்க்ள்” என்றார் வக்கார் யூனிஸ்.

ஆனால் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இதிலிருந்து மாறுபட்டவராக, “இந்தியாவின் சிறந்த வெள்ளைப் பந்து பேட்டர் என்றால் யுவராஜ் சிங் தான். அவர் போட்டிகளை வென்று கொடுப்பவர். அவர் வேற லெவலில் இருக்கிறார். ஹர்திக் பாண்டியா, ஜடேஜாவைக் குறைத்து மதிப்பிடாமல் கூறுகிறேன். இவர்கள் யுவராஜ் சிங்கின் இடத்தில் இல்லை என்பதுதான். இவர்கள் இருவரும் யுவராஜ் சிங்கை விட நல்ல பவுலர்கள்.

பாண்டியாவிடம் திறமை உள்ளது என்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், அவர் ஒருநாள் போட்டிகளில் 10 ஒவர்கள் கோட்டாவை முழுதுமாக வீசக்கூடியவர்தானா என்பதில் சந்தேகம் உள்ளது. அவர் பேட்டிங் ஆல்ரவுண்டர் கடந்த பாகிஸ்தான் போட்டியில் அபாரமாக ஆடினார். ஆகவே ஜடேஜா, பாண்டியாவின் கூட்டுத் திறமை அவர்கள் செய்யக்கூடிய பங்களிப்பில் தெரிகிறது, ஆனால் யுவராஜ் சிங்குடன் ஒப்பிட முடியாது; அவர் வேற லெவல்” என்றார் சஞ்சய்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x