Published : 05 Dec 2017 06:35 PM
Last Updated : 05 Dec 2017 06:35 PM

410 ரன்கள் வெற்றி இலக்கு: 3 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பாதையில் இலங்கை

டெல்லி டெஸ்ட் போட்டியில் 410 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடி வரும் இலங்கை அணி 4-ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்து தோல்வி முகம் காட்டுகிறது.

ஆட்டம் முடிய சற்று முன் வரை 1 விக்கெட்டையே இழ்ந்திருந்த இலங்கை அணி ஜடேஜா வீசிய கடைசி ஓவரில் கருணரத்னே (13), லக்மல் (0) ஆகியோரை வீழ்த்தினார், டிஎம்.டிசில்வா 13 ரன்களுடன் களத்தில் நிற்கிறார். மீண்டும் மேத்யூஸ், சந்திமால் கூட்டணியை நம்பி இலங்கை அணி நாளை 5-ம் நாள் தோல்வியைத் தவிர்க்கப் போராட வேண்டியுள்ளது.

முன்னதாக தொடக்க வீரர் சதீரா சமரவிக்ரம, மொகமது ஷமியின் ஆக்ரோஷ பந்துவீச்சில் சிக்கினார், வேகம், எகிறும் பந்துகளில் அவர் நிலைகுலைந்தார், முதல் பவுன்சரைத் தவிர்க்கும் முயற்சியில் கீழே விழுந்தார். 2-வது பவுன்சர் கிளவ்வில் பட்டு கல்லியில் கேட்ச் ஆனது. டெல்லி காற்று மாசு சூழலில் ஷமியும் வாந்தி எடுத்து களத்தை விட்டுச் சென்றார்.

முன்னதாக இந்திய அணி 2-வது இன்னிங்ஸை ஆடிய போது 2 பவுண்டரிகளுடன் 9 ரன்கள் எடுத்த முரளிவிஜய் லக்மல் பந்தை தன் உடலுக்குத் தள்ளி ஆடமுற்பட்டு எட்ஜ் ஆகி வெளியேறினார். ரஹானே 2 பவுண்டரிகளுடன் 10 ரன்கள் எடுத்த நிலையில் மீண்டும் சொதப்பி திலுருவன் பெரேரா பந்தை சிக்ஸ் அடிக்கப் போய் டீப் மிட் ஆனில் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்தத் தொடரில் 5 இன்னிங்ஸ்களில் 17 ரன்கள் மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது, உண்மையில் தென் ஆப்பிரிக்கத் தொடருக்கு முன்பாக ரஹானேயின் இத்தகைய சொதப்பல் இந்திய அணிக்கு கவலையேற்படுத்தக் கூடியதே.

ஷிகர் தவண், புஜாரா 3-வது விக்கெட்டுக்காக 77 ரன்கள் சேர்த்தனர். நல்ல ரன் விகிதத்தில் இதனைச் சேர்த்தனர். 66 பந்துகளில் 5 பவுண்டரிகள் அடித்த புஜாரா 49 ரன்களில் டிசில்வாவின் ரவுண்ட் த விக்கெட் பந்தில் எட்ஜ் ஆகி மேத்யூஸ் கேட்சுக்கு வெளியேறினார்.

ஷிகர் தவண் 91 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 67 ரன்கள் எடுத்த நிலையில் சண்டகன் பந்தை மேலேறி வந்து தூக்கி அடிக்க முயன்றார் பந்து திரும்பியதால் மட்டையில் சிக்கவில்லை ஸ்டம்ப்டு ஆனார்.

பிறகு விராட் கோலி, ரோஹித் சர்மா ஜோடி கிட்டத்தட்ட பந்துக்கு 1 ரன் என்ற விகிதத்தில் 90 ரன்கள் கூட்டணி அமைத்தனர். கோலி அரைசதம் எடுத்தவுடன் கமகேவின் வேகம் குறைக்கப்பட்ட பந்தை தூக்கி லாங் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார், இந்தத் தொடரில் விராட் கோலி 600 ரன்களைக் கடந்துள்ளார்.

246/5 டிக்ளேர் என்றவுடன் 410 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து களமிறங்கி இலங்கை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது, ஷமி 1 விக்கெட்டையும் ஜடேஜா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x