Published : 19 Dec 2017 07:17 PM
Last Updated : 19 Dec 2017 07:17 PM

நான் இங்கிலாந்துக்கு ஆடியிருந்தால் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவேன்?: மிட்செல் ஜான்சன் விளக்கம்

ஆஸ்திரேலிய அணியில் லெக் ஸ்பின்னராக, நம்பர் 8-ல் களமிறங்குபவராக வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்டீவ் ஸ்மித் இன்று டான் பிராட்மேனின் அனைத்து கால சிறந்த தரவரிசைப் புள்ளிகளுக்கு அருகில் உள்ளார்.

ஸ்மித்தை வீழ்த்த இங்கிலாந்து பவுலர்கள் திணறி வரும் நிலையில் ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் டெஸ்ட் பவுலர் மிட்செல் ஜான்சன் தான் இங்கிலாந்துக்கு ஆடியிருந்தால் ஸ்மித்தை எப்படி வீழ்த்த முயற்சி எடுப்பேன் என்று கூறியுள்ளார்.

டெய்லி டெலிகிராப் பத்திரிகையில் ஜான்சன் எழுதிய பத்தியில் இது குறித்து கூறியிருப்பதாவது:

நான் இப்போது ஸ்மித்துக்கு வீசினேன் என்றால், வலையில் எப்படி வீசுவேனோ அப்படித்தான் வீசுவேன். அதாவது நான் அந்தத் தருணத்தை ஒரு டெஸ்ட் போட்டியாகவே கருதுவேன். பவுன்ஸ் செய்து கேட்சில் வீழ்த்த முயற்சிப்பேன்.

அவருக்கு எதிராக சிலபல வார்த்தைகளையும் வீசுவேன். இங்கிலாந்து அடிலெய்டில் இதனைச் செய்து அவருக்கு எதிராக வெற்றி கண்டனர், ஆனால் பெர்த்தில் செய்யவில்லை.

ஸ்மித் களமிறங்கும் போது முதலில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு பந்தை கொடுக்க வேண்டும், ஜோ ரூட் இதனைச் செய்வதில்லை. ஆண்டர்சனை கொண்டு வரும்போதும், ஸ்மித்துக்கு டீப் ஸ்கொயர் லெக், டீப் கவர் வைத்து வீசுகிறார் ஜோ ரூட், இது ஸ்மித்துக்கு எளிதான ரன்களை வழங்குகிறது.

கிறிஸ் வோக்ஸ் ஸ்மித்துக்கு சில பல பவுன்சர்களை வீசி சோதித்திருக்கலாம் பெர்த் மைதானத்தின் ஸ்கொயர் பவுண்டரிகள் நீளமானது, ஒவ்வொருமுறையும் அவரால் சிக்சர், பவுண்டரி அடிக்க முடியாது.

ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து சிலபல பவுன்சர்களை ஸ்மித்துக்கு வீச வேண்டும். ஸ்மித்தோ ஆஃப் ஸ்டம்ப் நோக்கி நகர்கிறார் இதன் மூலம் அவரது லெக் ஸ்டம்பைப் பெயர்க்க வாய்ப்பு ஏற்படும்.

பவுன்சர் வீசுவது தவிர நான் ஸ்மித்தின் ஆஃப் திசை 4-வது ஸ்டம்புக்கு பந்தை வீசுவேன். இன்னும் அவரை பின்னே பின்னே தள்ளித் தள்ளி கடைசியாக ஒரு யார்க்கரை வீசுவேன். முதலில் அவரை முன் காலில் வந்து டிரைவ் ஆட வைக்க வேண்டும், ஆனால் இங்கிலாந்து கொஞ்சம் ஷார்ட் ஆக வீசுகின்றனர்.

ஓவர்டன் அடிலெய்டில் செய்தது சரி. ஆஃப் கட்டரை வீசி அவரை வீழ்த்தினார். மேலும் மார்க் உட் போன்று கூடுதல் வேகமுள்ள பவுலரை இங்கிலாந்து இறக்க வேண்டும். அதே போல் ஸ்மித்தின் கண்பார்வைக்குட்பட்ட பகுதியில் பீல்டர்களை நெருக்கமாக நிறுத்த வேண்டும், இது அவரை வெறுப்படையைச் செய்யும்.

ஸ்மித்தாகட்டும் விராட் கோலியாகட்டும் கடைசி எல்லை எதுவென்றால் இங்கிலாந்தின் பசுந்தரை ஆட்டக்களமே. ஆண்டர்சன் அங்கு பேட்ஸ்மெனை முன்னால் இழுத்து எட்ஜ் எடுக்கச் செய்வார். எனவே இன்று மிகப்பெரிய வீரர்களாக இருக்கும் ஸ்மித், கோலி, இங்கிலாந்தில் பவுலர்களை ஆட்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தன் பத்தியில் கூறியுள்ளார் மிட்செல் ஜான்சன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x