Published : 21 Nov 2017 09:52 AM
Last Updated : 21 Nov 2017 09:52 AM

இந்திய வம்சாவழி மலையக தமிழர்களின் அவல நிலையை தமிழக அரசியல் தலைவர்கள் நேரில் வந்து பார்க்க வேண்டும்: இலங்கை அமைச்சர் பழனி திகம்பரம் கருத்து

இலங்கையில் வசிக்கும் மலையக தமிழர்கள் பற்றி கருத்து தெரிவிப்பதற்கு முன்பு தமிழக அரசியல் தலைவர்கள் இங்கு வந்து அவர்களது நிலையை நேரில் பார்க்க வேண்டும் என்று அந்நாட்டு அமைச்சர் பழனி திகம்பரம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் மலையக புதிய கிராமங்கள், உள்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தித் துறை அமைச்சர் பழனி திகம்பரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “தமிழக அரசியல்வாதிகள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வசிக்கும் ஈழ தமிழர்களுக்காக மட்டுமே பேசுகிறார்கள். ஆனால் இங்கு வசிக்கும் இந்திய வம்சாவழி மலையக தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி மிக அரிதாகவே பேசுகின்றனர்’’ என்றார்.

பிரபல அரசியல் தலைவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (சிடபிள்யூசி) கட்சியின் முன்னாள் தலைவருமான, மறைந்த சவுமியாமூர்த்தி தொண்டமானின் பெயர் 3 இலங்கை அரசு பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து நீக்கப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். மலையக தமிழர்களுக்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கையை தடுத்து நிறுத்த மத்திய அரசு தலையிட வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மாவுக்கு ட்விட்டர் மூலம் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இதுகுறித்து இலங்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என சுஷ்மாவும் பதில் அளித்திருந்தார்.

இதுகுறித்து திகம்பரம் கூறும்போது, “இந்த விவகாரத்தில் இலங்கை அரசு எதுவும் செய்ய முடியாது. அதேநேரம் முந்தைய ஆட்சியாளர்களோடு ஒப்பிடும்போது, அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு தமிழர்களின் நலனுக்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்றார்.

அமைச்சர் திகம்பரம் மேலும் கூறும்போது, “அரசு நிறுவனங்களின் பெயர்கள், வரலாற்று பின்னணியை பிரதிபலிக்கவேண்டும். தொண்டமான் மட்டுமல்ல, நடேச அய்யர் உட்பட பல தலைவர்கள் மலையக தமிழர்களுக்காக பாடுபட்டுள்ளனர். அவர்களையும் கண்டிப்பாக அங்கீகரிக்க வேண்டும். தமிழக அரசியல் தலைவர்கள் உண்மைகளை அறியாமல் கருத்து தெரிவிக்க கூடாது.

இதனால் சிங்களர்களுடனான எங்களது உறவு பாதிக்கும். அவர்கள் இங்கு வந்து மலையக தமிழர்களின் அவல நிலையை பார்க்க வேண்டும். இன்றும் கூட 40 ஆயிரம் குடும்பங்களுக்கு கழிவறை இல்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x