Last Updated : 13 Aug, 2023 05:15 AM

 

Published : 13 Aug 2023 05:15 AM
Last Updated : 13 Aug 2023 05:15 AM

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி | 4-வது முறையாக பட்டம் வென்றது இந்தியா - முழு விவரம்

கோல் அடித்த மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள்.படம்: எஸ்.சத்தியசீலன்

சென்னை: 7-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வந்தது. 6 அணிகள் கலந்துகொண்ட இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் நேற்று இந்தியா - மலேசியா மோதின.

8-வது நிமிடத்தில் இந்திய அணியின் கார்த்தி செல்வத்தை வட்டத்துக்குள் வைத்து மலேசிய வீரர் அஸுவான் ஹசன் ஃபவுல் செய்தார். இதனால் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி ஜுக்ராஜ் சிங் கோல் அடிக்க இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்த 6-வது நிமிடத்தில் மலேசியா பதிலடி கொடுத்தது. அஸுவான் ஹசன் பந்தை வட்டத்துக்குள் கடத்திச் சென்று அபு கமல் அஸராயிடம் கொடுக்க அவர், அதனை கோலாக மாற்றினார். இதனால் முதல் கால்பகுதி ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது.

18-வது நிமிடத்தில் மலேசிய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை ராஸி ரஹிம் கோலாக மாற்ற மலேசியா 2-1 என முன்னிலை பெற்றது. 28-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை முகமது அமினுதின் கோலாக மாற்ற இந்திய அணி வீரர்களும், ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த கோல் காரணமாக மலேசியா 3-1 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலையை நோக்கி நகர்ந்தது. இந்திய அணி வீரர்கள் பலமுறை கோல் வலையை நோக்கி பந்தை கடத்திச் சென்ற போதிலும் அவற்றை மலேசிய அணியின் டிபன்டர்களை கடந்து கோலாக மாற்ற முடியாமல் போனது.

32, 36-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை இந்திய அணி வீணடித்தது. 37-வது நிமிடத்தில் கார்த்தி செல்வம் இலக்கை நோக்கி வலுவாக அடித்த ஷாட்டை மலேசியா கோல்கீப்பர் கோல் விழவிடாமல் தடுத்தார். 42-வது நிமிடத்தில் மன்தீப் சிங் இலக்கை நோக்கி அடித்த ஷாட்டை கோல்கீப்பர் ஒட்மேன் தடுத்தார். அடுத்த நிமிடத்தில் மலேசிய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது கோலாக மாற்றப்படவில்லை.

44-வது நிமிடத்தில் தொடர்ச்சியாக இரு முறை இந்திய அணியின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. மன்தீப் சிங் அடித்த ஷாட் தடுக்கப்பட்டது. அடுத்து ஜர்மன்பிரீத் சிங் அடித்த ஷாட் கோல் வலைக்குள் மேலே சென்று ஏமாற்றம் அளித்தது. 45-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி ஸ்டிரோக் வழங்கப்பட்டது. இதை கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்றினார். அடுத்த நிமிடத்தில் இந்திய அணி மின்னல் வேகத்தில் செயல்பட்டு பீல்டு கோல் அடித்தது.

குர்ஜாந்த் சிங் அடித்த இந்த கோல் காரணமாக ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது. 50-வது நிமிடத்தில் மலேசியா அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அமித் ரோஹிதாஸ் அற்புதமாக மட்டையால் இடை மறித்து விலக்கிவிட்டார். அடுத்த நிமிடத்தில் கார்த்தி செல்வத்தின் கோல் அடிக்கும் முயற்சியை ஓட்மான் தடுத்தார். 54-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இது கோலாக மாற்றப்படவில்லை.

அடுத்த நிமிடத்தில் இந்திய அணிக்கு மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஹர்மன்பிரீத் சிங் வலுவாக அடித்த ஷாட் விலகிச் சென்றது. எனினும் 56-வது நிமிடத்தில் சுக்ஜீத் சிங், மன்தீப் சிங்கிடம் பந்தைகொடுக்க அவர், ஆகாஷ் தீப் சிங்கிடம் தட்டிவிட அவர், அடித்த வலுவான ஷாட் கோல் வலையின் வலதுபுறத்தை துளைத்தது. இதனால் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதன் பின்னர் எஞ்சிய 4 நிமிடங்களிலும் இந்திய அணி வீரர்கள் தொடர்ச்சியாக மலேசியா டிபன்டர்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்தனர். இருப்பினும் மேற்கொண்டு கோல் அடிக்கப்படவில்லை. முடிவில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்திய அணி பட்டம் வெல்வது இது 4-வது முறையாகும். 2011, 2016-ல் கோப்பையை வென்ற இந்திய அணி 2018-ம் ஆண்டு தொடரில் பாகிஸ்தானுடன் சாம்பியன் பட்டத்தை பகிர்ந்து கொண்டது.

ஜப்பான் 3-வது இடம்: ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் நேற்று நடைபெற்ற 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜப்பான், நடப்பு சாம்பியனான தென் கொரியாவுடன் மோதியது. இதில் ஜப்பான் அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3-வது இடம் பிடித்து தொடரை நிறைவு செய்தது. அந்த அணி சார்பில் ரயோமா (3-வது நிமிடம்), ரயோசி கடோ (9-வது நிமிடம்), கென்டரோ புகுடா (28-வது நிமிடம்), ஷோடா யமடா (53-வது நிமிடம்), கென் நகயோஷி (58-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். கொரியா அணி சார்பில் ஜாங்யுன் ஜாங் (15, 33-வது நிமிடம்) இரு கோல்களும், சியோலியோன் பார்க் (26-வது நிமிடம்) ஒரு கோலும் அடித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x