Published : 07 Nov 2017 03:45 PM
Last Updated : 07 Nov 2017 03:45 PM

இரண்டு ஹாட்ரிக்குடன் இங்கிலாந்தை அச்சுறுத்தும் மிட்சல் ஸ்டார்க்: உள்ளூர் போட்டியில் அதிரடி

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடர் துவங்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் முதல் தர டெஸ்ட் போட்டி ஒன்றில் இரண்டு ஹாட்ரிக் எடுத்து அசத்தியுள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் - வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஷெஃப்பீல்ட் ஷீல்ட் முதல் தர போட்டி ஹர்ஸ்ட்வில் ஓவலில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் ஜேசன் பெஹ்ரண்டார்ஃப், டேவிட் மூடி, சைமன் மெக்கின் ஆகியோரது விக்கெட்டுகள் மூலம் ஹாட்ரிக் எடுத்திருந்தார் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க்.

இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் ஸ்டார்கை எதிர்கொள்வது கடினமாக இருந்தது. இம்முறையும் தனது 15வது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் ஜேசன் பெஹ்ரண்டார்ஃப் மற்றும் டேவிட் மூடி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஸ்டார்க். அவரது அடுத்த ஓவரின் முதல் பந்தில் ஜோனோ வெல்ஸ் பேட்டின் எட்ஜில் பட்டு வந்த கேட்சை முதல் ஸ்லிப்பில் இருந்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பிடிக்க, இரண்டாவது ஹாட்ரிக்கை முடித்தார் ஸ்டார்க். இந்த விக்கெட்டின் மூலம் நியூ சவுத் வேல்ஸ் அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.

ஷெஃப்பீல்ட் ஷீல்ட் என்றழைக்கப்படும் இந்த உள்ளூர் தொடர் ஆஸ்திரேலியாவின் முதல் தர கிரிக்கெட்டில் முக்கியமான போட்டியாகும். மொத்தம் 6 அணிகள் இதில் விளையாடும். 1892ஆம் ஆண்டு முதல் இந்தத் தொடர் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தத் தொடரில் எந்த வீரரும் ஒரே போட்டியில் இரண்டு ஹாட்ரிக் எடுத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிட்சல் ஸ்டார்கின் இந்த அதிரடி பந்துவிச்ச்சு இங்கிலாந்து அணிக்கு இப்போதே உளவியல் ரீதியான அச்சுறுத்தலாக இருக்கும் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் வர்ணித்துள்ளன. குறிப்பாக ஸ்டார்கின் வேகமான ரிவர்ஸ் ஸ்விங் வீச்சு எதிரணியினரை திணறடிக்கும் என்றும், இந்த போட்டியின் பயிற்சியே ஸ்டார்கை முக்கியமான அச்சுறுத்தலாக முன்னிறுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

2015ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரை இங்கிலாந்து வென்றது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்ததால் கண்டிப்பாக ஆஷஸ் தொடரை ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது.

முதல் ஆஷஸ் போட்டி நவம்பர் 23 அன்று காபா மைதானத்தில் நடக்கவுள்ளது. மேலும் 2வது டெஸ்ட் போட்டி ஆஷஸ் தொடரின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x