Published : 29 Nov 2017 10:39 AM
Last Updated : 29 Nov 2017 10:39 AM

உள்ளூர் போட்டியில் அசத்தியதாலேயே இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது: வேகப் பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் கருத்து

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் 27 வயதான பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மிதவேகப் பந்து வீச்சு ஆல்ரவுண்டர் சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டுள்ளார். அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்ட சமயத்தில் ரஞ்சி கோப்பை தொடரில் சர்வீசஸ் அணிக்கு எதிராக பந்து வீசி கொண்டிருந்தார். அமிர்தசரஸில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குடிநீர் இடைவேளையின் போதுதான், சித்தார்த் கவுல் தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட விவரம் தெரியவந்துள்ளது. அதிலும் களத்தில் மேட்ச் ரெப்ரியான சுனில் சதுர்வேதி, களநடுவர்களான வீனித் குல்கர்னி, ஸ்ரீநாத் ஆகியோர் வழியாக இந்த தகவலை சித்தார்த் கவுலிடம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு தேர்வானது குறித்து சித்தார்த் கவுல் கூறும்போது, “குடிநீர் இடைவேளையின் போது கள நடுவரான ஒருவர் என்னிடம் வந்து, ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். அந்த தருணத்தில் எப்படி செயலாற்றுவது என்றே எனக்கு தெரியவில்லை. எனது கிரிக்கெட் வாழ்வில் இது பெரிய செய்தியாகும். அதிலும் ஆடுகளத்தில் இருக்கும் போதே தேசிய அணிக்கு விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளேன்” என்றார்.

சித்தார்த் கவுல் 2008-ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடைசி ஓவரை சிறப்பாக வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். தென் ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சித்தார்த் கவுல் 6 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும் வீழ்த்தினார். இந்த தொடருக்கு விராட் கோலி கேப்டனாக செயல்பட்டார்.

இந்தத் தொடரின் வாயிலாகவே விராட் கோலி, இந்திய அணிக்கு தேர்வானர். தற்போது அவர் இந்திய அணியின் அதிசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். மேலும் இந்த உலகக் கோப்பையில் விளையாடிய ரவீந்திர ஜடேஜா, சவுரப் திவாரி, அபிநவ் முகுந்த் ஆகியோர் தேசிய அணிக்காக விளையாடும் வாய்ப்புகளை விரைவாக பெற்றனர். ஆனால் சித்தார்த் கவுலுக்கு 9 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

எனினும் சித்தார்த் கவுல் மனம் தளரவில்லை. நம்பிக்கையுடன் செயல்பட்டு பஞ்சாப், வடக்கு மண்டலம், இந்தியா ஏ அணிகளில் இடம் பிடித்தார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த சீசனில் அவர், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். இதுவரை 50 முதல் தர போட்டிகளில் விளையாடி 175 விக்கெட்களும், 52 லிஸ்ட் ஏ போட்டிகளில் பங்கேற்று 99 விக்கெட்களும் வீழ்த்தி உள்ளார் சித்தார்த் கவுல்.

சித்தார்த் கவுல் மேலும் கூறும்போது, “சிறந்த திறனை வெளிப்படுத்தினால் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்தேன். இதற்கு கிடைத்த பலனாகவே தற்பாது தேசிய அணிக்கு தேர்வாகி உள்ளேன். பஞ்சாப் அணிக்காக விளையாடும் போது யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் அதிக ஊக்கம் கொடுத்துள்ளனர்.

அதிக அளவிலான சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ள அவர்களது உள்ளீடுகள் ஒரு பந்து வீச்சாளராக என்னை மேம்படுத்திக் கொள்ள உதவியது. இந்திய ஏ அணி அல்லது ஐபிஎல் தொடரில் விளையாடுவது என்பதே உயர்மட்ட அளவிலான கிரிக்கெட் விளையாடுவது தான். இது குறிப்பிட்ட மட்டத்தில் நம்பிக்கையை அளிக்கும். ராகுல் திராவிட்டுடன் உரையாடியது பெரிய உதவியாக இருந்தது” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x