Published : 24 Nov 2017 03:21 PM
Last Updated : 24 Nov 2017 03:21 PM

பிரிஸ்பன் டெஸ்ட்: ஸ்மித், ஷான் மார்ஷ் போராட்டம்; ஆஸ்திரேலியா 165/4

ஆஷஸ் தொடர், பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தை 302 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.

கேப்டன் ஸ்மித் 65 ரன்களுடனும், ஷான் மார்ஷ் 44 ரன்களுடனும் களத்தில் உள்ளனர், இருவரும் சேர்ந்து 89 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளனர்.

முன்னதாக இங்கிலாந்து அணி 246/4 என்ற நிலையிலிருந்து மலான் விக்கெட்டை ஸ்டார்க் பவுன்சரில் வீழ்த்த, இங்கிலாந்து 302 ரன்களுக்குச் சுருண்டது.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி, ஜோ ரூட்டின் சமயோசிதமான கேப்டன்சி மற்றும் நெருக்கும் பந்து வீச்சின் காரணமாக ஆஸ்திரேலியா 25-வது ஓவரில் 76/4 என்று சரிவுமுகம் கண்டது.

முதல் நாளை விட பிட்ச் கொஞ்சம் வேகம் காட்டியது. இதனால் தொடக்க வீரர் பேங்கிராப்டுக்கு பிராட் பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே கொஞ்சம் கூடுதலாக பவுன்ஸ் ஆனது, அவர் பந்தை மட்டையால் சீண்டினார் பேர்ஸ்டோ பிடித்தார். 5 ரன்னில் அவுட்.

500 விக்கெட் சாதனையாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு பந்தை வீசுவது போல் இன்னொரு பந்தை வீசவில்லை ஆனால் அனைத்தும் ஆஃப் ஸ்டம்பை நோக்கியது. இவர் இவ்வாறு வீசினாலும் 3-ம் நிலையில் உஸ்மான் கவாஜா இறங்கியதையடுத்து நேதன் லயன் பவுலிங்கைப் பார்த்த ஜோ ரூட், மொயின் அலியைக் கொண்டு வந்தார். 11 ரன்கள் எடுத்த கவாஜா, ஒரு பந்து நன்றாகத் திரும்பி மட்டையைக் கடந்து சென்றதைப் பார்த்தார், அடுத்ததாக அதே லெந்தில் பந்து நேராக வரும் என்பதை எதிர்பார்க்கவில்லை கால்காப்பில் வாங்க எல்.பி.ஆனார்.

டேவிட் வார்னர் நிதானமாக ஆடி வந்தார் மொயின் அலியை அபாரமான கவர் டிரைவ் அடித்து வரவேற்றார். 43 பந்துகளில் 2 பவுண்டரிகள் அடித்த நிலையில் ஜேக் பால் ஓவரில் ஆஃப் ஸ்டம்பில் வந்த ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆடினார், ஆனால் அவர் முழுநிறைவான புல் ஷாட்டை ஆடவில்லை, ஷாட் மிட்விக்கெட்டில் மலானிடம் கேட்ச் ஆனது.

தேநீர் இடைவேளை முடிந்து, கடும் நெருக்கடியில் கிரீஸிற்குள்ளேயே நின்று ஆடிய ஹேண்ட்ஸ்கம்ப் விக்கெட்டை ஜேம்ஸ் ஆண்டர்சன் ‘வொர்க் அவுட்’ செய்தார். 2 பந்துகளை மணிக்கு 139, 135 கிமீ வேகத்தில் வீசி விட்டு பிறகு 132 கிமீ வேகத்தில் அரை யார்க்கர் அரை இன்ஸ்விங்கர் போல் வீசினார். பந்து நேராக பின் கால் பேடைத் தாக்கியது. கடும் முறையீட்டுக்கு நடுவர் செவிசாய்க்கவில்லை, ஆனால் 3-வது நடுவர் செவிசாய்த்தார். 76/4 என்று ஆஸி.க்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

ஸ்மித் முதலில் பவுண்டரி அடித்தாலும் 2-வது பவுண்டரி 20 ஓவர்களுக்குப் பிறகுதான் அடித்தார், ஆஸ்திரேலியாவின் ரன் வாய்ப்புகளை சில டைட்டான பவுலிங் மூலம் இங்கிலாந்து முறியடித்தது. கடைசி 2 மணி நேர ஆட்டத்தின் முதல் 1 மணி நேரத்தில் ரன்கள் வேகமாக வரமுடியவில்லை என்றாலும். கடைசியில் ரன்கள் விரைவில் வந்தன. ஸ்மித் 6 பவுண்டரிகளுடன் 64 ரன்களுடனும் மார்ஷ் 7 பவுண்டரிகளுடன் 44 ரன்களையும் எடுத்து களத்தில் உள்ளனர்.

ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தினால்தான் இங்கிலாந்து 302 ரன்களுக்குள் ஆஸ்திரேலியாவைச் சுருட்ட வாய்ப்பு கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x