Published : 29 Nov 2017 04:31 PM
Last Updated : 29 Nov 2017 04:31 PM

சச்சின் டெண்டுல்கர் அணிந்த நம்பர் 10 ஜெர்சிக்கு ஓய்வு?

 

சச்சின் டெண்டுல்கர் என்றால் நம்பர் 10; நம்பர் 10 என்றால் சச்சின் டெண்டுல்கர் என்று அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் அவருடன் இணைந்திருப்பது அவர் அணிந்த நம்பர் 10 சீருடை.

ஒருகாலத்தில் 99 என்ற எண்ணுடைய சீருடையை ஒருநாள் போட்டிகளில் அணிந்த சச்சின் டெண்டுல்கர் பிறகு அர்ஜெண்டீன கால்பந்து மேதை டீகோ மாரடோனாவின் தாக்கத்தில் நம்பர்10 என்ற சீருடையை அணிந்தார். அதோடு மட்டுமல்லாமல் 'Ten'dulkar' என்று அவர் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டதும் ஒரு காரணம்அன்றிலிருந்து சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் நம்பர் 10 பிரிக்க முடியாமல் இணைந்திருந்தது.

இந்நிலையில் அந்த நம்பர்10 சீருடையை வேறு எந்த வீரரும் அணிய முடியாத விதமாக அவரது நம்பர் 10 சீருடைக்கும் பிசிசிஐ ஓய்வு அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நவம்பர் 2013-ல் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றார், ஒருநாள் போட்டிகளில் கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக 2012-ல் ஒருநாள் போட்டியில் நம்பர் 10 சீருடையுடன் களமிறங்கினார் சச்சின்.

அதிலிருந்து நம்பர் 10 சீருடையை யாரும் அணியவில்லை, ஆனால் கடந்த ஆகஸ்டில் கொழும்புவில் நடந்த ஒருநாள் போட்டியில் மும்பை வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர் இதே நம்பர்10 சீருடையை அணிந்து களமிறங்கியதையடுத்து சமூக வலைதளங்களில் பிசிசிஐ, தாக்குர் ஆகியோர் மீது வலைத்தள வாசிகள் கேலிச்சொற்களை வீசினர்.

''இதனால் தேவையற்ற சர்ச்சைகள் உருவாகி வீரர்கள் விமர்சனத்துக்கு ஆளாகின்றனர். எனவே அதிகாரபூர்வமற்ற முறையில் நம்பர் 10 ஜெர்சிக்கு ஓய்வு அளித்து விடுவோம். எனவே எந்த ஒரு வீரரும் இந்தியா ஏ, சர்வதேச போட்டியல்லாத லிஸ்ட் ஏ போட்டிகளில் நம்பர் 10 ஜெர்சியை அணியலாம், சர்வதேசப் போட்டிகளில் நம்பர் 10 ஜெர்சியை அணிய வேண்டாம்'' என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிரபல நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.

ஷர்துல் தாக்குர் இது பற்றி கூறும்போது, தான் எண் கணித நம்பிக்கை உள்ளவர் என்பதால் நம்பர்10 ஜெர்சி அணிந்ததாகத் தெரிவித்தார்.

ஜெர்சிக்கும் ஓய்வு அளிக்கும் நடைமுறை கிரிக்கெட்டுக்குப் புதிது, கால்பந்து, என்பிஏ கூடைப்பந்து போட்டிகளில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x