Published : 07 Nov 2017 08:40 AM
Last Updated : 07 Nov 2017 08:40 AM

திருவனந்தபுரத்தில் இன்று கடைசி ஆட்டம்: மழை மிரட்டலுக்கு இடையே டி 20 தொடரை வெல்வது யார்? - இந்தியா - நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை; நெருக்கடியில் களமிறங்கும் தோனி, ஹர்திக் பாண்டியா

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான கடைசி டி 20 ஆட்டம் திருவனந்தபுரம் கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடரை வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் வகையில் திருவனந்தபுரம் ஆட்டம் அமைந்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் நியூஸிலாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.

இதன் மூலம் குறுகிய வடிவிலான ஆட்டங்களில் மீண்டும் ஒரு முறை இந்திய மண்ணில் தொடரை வெல்லக்கூடிய ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி விளையாட உள்ளது. ஒருநாள் போட்டித் தொடரும் இதேபோன்று அமைந்திருந்தது. கடுமையாக சவால் கொடுத்த நியூஸிலாந்து கடைசி வரை போராடி 6 ரன்களில் தோல்வியடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டிருந்தது. இதனால் இம்முறை அந்த அணி கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.

காலின் முன்ரோ

தொடக்க வீரரான காலின் முன்ரோ அதிரடி பார்முக்கு திரும்பி இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. ராஜ்கோட்டில் 58 பந்துகளில் 109 ரன்கள் விளாசிய டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனான அவர், இன்றைய ஆட்டத்திலும் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடித் தரக்கூடும். பவர் பிளேவில் நிதானமாக விளையாடிய முன்ரோ, அதன் பின்னரே மட்டையை சுழற்றினார். அதிலும் ‘நக்குல்’ உள்ளிட்ட மெதுவாக வீசப்பட்ட பந்து வீச்சை பதம் பார்த்தார்.

கடந்த சில தொடர்களில் இந்த வகையிலான பந்து வீச்சையே இந்திய அணி வீரர்கள் பலமான ஆயுதமாக பயன்படுத்தினர். ஆனால் அவற்றை முன்ரோ தகர்த்தெறிந்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் வெற்றிக்கான வியூகங்களை விராட் கோலி மாற்றியமைக்கக்கூடும். முகமது சிராஜ் களமிறங்கிய முதல் ஆட்டத்திலேயே 53 ரன்களை வாரி வழங்கியதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான். அவர் நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

மேலும் இளம் வீரரான ஸ்ரேயஸ் ஐயரும் பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. உள்ளூர் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடிய போதிலும், சர்வதேச போட்டியில் அவரது ஷாட் தேர்வு அந்த அளவுக்கு சிறப்பானதாக இல்லை என்ற கருத்து எழுந்துள்ளது.

பெரிய அளவிலான இலக்கை துரத்திய ஆட்டத்தில் கிடைத்த வாய்ப்பை ஸ்ரேயஸ் ஐயர் சரியாக பயன்படுத்தவும் தவறினார். 3-வது வீரராக களமிறக்கப்பட்ட அவர் 21 பந்துகளில் 23 ரன்களே சேர்த்தார். இன்றைய ஆட்டத்தில் அவர் நீக்கப்படும் பட்சத்தில் தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டே, கே.எல். ராகுல் ஆகியோரில் யாராவது ஒருவரை விளையாடும் லெவனில் சேர்ப்பது குறித்து விராட் கோலி பரிசீலிக்கக்கூடும்.

தோனி

இதுஒரு புறம் இருக்க முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பார்ம், விவாத பொருளாக மாறி உள்ளது. ராஜ்கோட் ஆட்டத்தில் அவர் 37 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார். அவர், களமிறங்கிய போது வெற்றிக்கு 65 பந்துகளில் 130 ரன்கள் தேவையாக இருந்தது. ஒரு முனையில் விராட் கோலி அதிரடியாக விளையாடிய நிலையில், அவருக்கு இணையாக மட்டையை சுழற்றத் தவறினார் தோனி. அவர், சேர்த்த ரன்களில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும்.

அதாவது 49 ரன்களில், பவுண்டரிகள், சிக்ஸர்கள் வாயிலாக மட்டும் 26 ரன்கள் சேர்த்தார். இதை தவிர்த்து எஞ்சிய 23 ரன்களை அவர் 32 பந்துகளில் தான் எடுத்தார். இதுதான் அணியின் வீழ்ச்சிக்கு பிரதான காரணமாக அமைந்ததாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். முன்னாள் வீரர்களான விவிஎஸ் லட்சுமண், அஜித் அகர்கர் உள்ளிட்டோர் தோனி ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் டி20 ஆட்டங்களில் அவருக்கு பதிலாக புதிய வீரரை கொண்டு வருவதற்கான சரியான தருணம் இதுதான் என்று கூறியுள்ளனர்.

இவர்கள் விமர்சனத்தை தொடுக்கும் அதேவேளையில் தோனியின் பேட்டிங் வரிசை கடந்த இரு ஆண்டுகளாகவே சீரான இடத்தில் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும். விக்கெட் சரிவு மற்றும் அணியின் ரன் ரேட் விகிதம், புதிய வீரர்களுக்கு வாய்ப்பு, எதிர்கால திட்டம் உள்ளிட்டவையால் தோனியின் பேட்டிங் வரிசை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், விராட் கோலியும் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது அடுத்த சில ஆட்டங்களின் வாயிலாக அறியலாம்.

முரண்பாடு

டி20 தொடரின் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெளிப்படுத்திய திறனில் சற்று முரண்பாடு இருப்பதாக கருதப்படுகிறது. முதல் ஆட்டத்தில் டாப் ஆர்டர் பேட்டிங் அசத்தியதால் இந்திய அணி மிகப்பெரிய இலக்கை கொடுத்து வெற்றியை வசப்படுத்தியது. அதேவேளையில் 2-வது ஆட்டத்தில் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, ஷிகர் தவணை விரைவிலேயே வெளியேற்றினார் டிரென்ட் போல்ட். இதனால் 197 ரன்கள் இலக்கை துரத்திய ஆட்டத்தில் இந்திய அணி ஆட்டம் கண்டது.

நியூஸிலாந்து அணி பெரிய இலக்கை அமைக்க இந்திய அணியின் மோசமான பீல்டிங்கும் ஒருவகையில் உதவியாக அமைந்தது. சதம் விளாசிய காலின் மன்ரோவை இரு முறை ஆட்டமிழக்க செய்யும் வாய்ப்பை இந்திய வீரர்கள் கோட்டை விட்டனர். சர்வசாதாரணமாக சிக்ஸர்கள் விளாசும் பெரிய ஹிட்டரான ஹர்திக் பாண்டியா கடந்த சில ஆட்டங்களாகவே வந்த வேகத்திலேயே விக்கெட்டை பறிகொடுப்பது அணியின் சமநிலையை வெகுவாக பாதித்துள்ளது.

இதனால் பேட்டிங்கில் அவர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளார். கடந்த ஆட்டத்தில் இந்திய அணியின் ரன்குவிப்பை நியூஸிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களான இஷ் சோதி, மிட்செல் சான்டர் வெகுவாக கட்டுப்படுத்தினர். இவர்கள் கூட்டாக 8 ஓவர்களில் 56 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினர். நடுகள ஓவர்களில் சவால் அளித்த இந்த சுழல் கூட்டணி மீண்டும் நெருக்கடி தரக்கூடும்.

ராஜ்கோட்டில் நியூஸிலாந்து அணி ரன்வேட்டை நிகழ்த்திய போதிலும் புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தொடக்கத்திலும் கடைசி பகுதியிலும் சிறப்பாக பந்து வீசினார்கள். இதனாலேயே நியூஸிலாந்து அணி 196 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. மீண்டும் ஒரு முறை இந்த வேகக்கூட்டணி சவால் கொடுக்க ஆயத்தமாக உள்ளது. கடந்த ஆட்டத்தில் நடுகள ஓவர்களில் அதிக ரன்கள் விளாசப்பட்டதால் இம்முறை இந்திய அணி இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை காட்டக்கூடும்.

29 வருடங்களுக்குப் பிறகு

திருவனந்தபுரத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி 29 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் நடைபெற உள்ளது. இங்குள்ள பல்கலைக்கழக மைதானத்தில் கடந்த 1988-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 7-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. தற்போது பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி தலைமையிலான இந்திய அணி, அந்த ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. கிரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மழை மிரட்டல்

இதற்கிடையே திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது. நாளை வரை இந்த மழை நீடிக்கும் என்றும் இன்று (செவ்வாய்) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 வரையும் அதன் பின்னர் இடைவெளிவிட்டு மழை பெய்யும் எனவும் அறிவித்துள்ளது. இதனால் டி20 ஆட்டத்துக்கு மழையால் இடையூறு ஏற்படக்கூடும். ஒருவேளை மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் தொடர் 1-1என சமனில் முடிவடையும். கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் கடைசி ஆட்டமும் (ஹைதராபாத்) மழையால் பாதிக்கப்பட்டு தொடர் 1-1 என சமனில் முடிவடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், ஸ்ரேயஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், மகேந்திர சிங் தோனி, கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா.

நியூஸிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்தில், காலின் மன்ரோ, டாம் லதாம், மேட் ஹென்றி, ஹென்றி நிக்கோல்ஸ், ராஸ் டெய்லர், ஆடம் மில்னே, காலின் டி கிராண்ட் ஹோம், மிட்செல் சான்டர், இஷ் சோதி, டிம் சவுத்தி, டாம் புரூஸ், டிரென்ட் போல்ட், கிளென் பிலிப்ஸ்.

நேரம்: இரவு 7

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x