Published : 25 Nov 2017 08:22 PM
Last Updated : 25 Nov 2017 08:22 PM

‘ஒரு அற்புத சதமும் ஒரு கோடி அடவுகளும்’: ஆஸி. கேப்டன் ஸ்மித்துக்கு குவியும் பாராட்டுகள்

எந்த வித அச்சுறுத்தலுக்கும், தூண்டுதல்களுக்கும் இடம் கொடுக்காமல் உறுதியுடன் ஆடி 141 ரன்கள் எடுத்து வீழ்த்த முடியா வீரராக திகழ்ந்த ஆஸி. கேப்டன் ஸ்மித்துக்கு பலரும் ட்விட்டரில் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.

அவரை முன்னால் வந்து ஆடவே வைக்க முடியாமல் திணறியது இங்கிலாந்து, பேக்ஃபுட் என்பதில் தெளிவாக இருந்தது ஆச்சரியமளித்தது ஏனெனில் அந்த அளவுக்கு கவனக்குவிப்பு இருந்தால் மட்டுமே இதனை ஒரு இன்னிங்ஸ் முழுதும் செய்ய முடியும்.

ஸ்மித் கிரீசில் இருந்த இந்த 400க்கும் அதிகமான நிமிடங்களில் ஏகப்பட்ட உடலசைவுகளை மேற்கொண்டார், பொதுவாக தன்னை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள கையைக் காலை ஆட்டுவது, ஸ்டம்பிலிருந்து கொஞ்சம் தொலைவு நடந்து விட்டு வருவது, மட்டையை உயர்த்துவது, மேலே பார்ப்பது, கீழே பார்ப்பது, தலையை ஆட்டுவது என்று ஏகப்பட்ட அசைவுகளை மேற்கொள்வார். இதனைச் சுட்டிக்காட்டிய ஆஸ்திரேலிய நகைச்சுவையாளரும் மியுசீஷியனும் ஆன ஆன்டி லீ தன் ட்விட்டரில்

100 ரன்கள்

261 பந்துகள்

418 நிமிடங்கள்

13,600,798 அடவுகள்

என்று வேடிக்கையாக பதிவிட்டுள்ளார்.

மிட்செல் ஜான்சன் தன் ட்விட்டரில், “பிரமாதமான இன்னிங்ஸ். ஆஷஸ் டெஸ்ட் சதம் இப்போது கேப்டன் ஸ்மித்துக்கு மிகப்பெரிதாக அமைந்தது” என்று பதிவிட்டுள்ளார்.

சஞ்சய் மஞ்சுரேக்கர்: “கிரேட் ball sense, இதுதான் ஸ்டீவ் ஸ்மித்திடம் உள்ளது. இதே அளவு ரன்களை வேறு உத்திகள் மூலமும் அவர் எடுக்க முடியும். ஏனெனில் அவரிடம் உள்ள பந்துக்கான உணர்வு”

ஆகாஷ் சோப்ரா: இந்த நேரம் வந்தது.. கேப்டன் ஸ்மித்தும் சாதித்தார், ஸ்டீவ் ‘அன் ஸ்டாப்பபிள் ஸ்மித்’, புனேயில் சூழலை ஆதிக்கம் செலுத்தினார், தற்போது பிரிஸ்பனில்.

டாம் மூடி: மிக அருமையாகக் கட்டமைக்கப்பட்ட 100. எங்களுக்கு வார்த்தைகள் இல்லாமல் செய்து விட்டார்.

எட் கோவன்: எனக்கு பல கிரிக்கெட் ஹீரோக்கள் இருக்கின்றனர். ஸ்லாட்டர், ரிக்கி பாண்டிங், பலரில் சிலரைத்தான் குறிப்பிடுகிறேன், ஆனால் ஸ்டீவ் ஸ்மித் இந்தப் பட்டியலில் ராக்கெட் வேகத்தில் முன்னேறி வருகிறார்.

மைக்கேல் வான்: நம்பமுடியாத சதம்

டேவிட் வார்னர்: நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த சதம்.

மைக்கேல் கிளார்க்: இப்போது தரத்தின் உச்சத்தில் ஸ்டீவ் ஸ்மித்.

இவர் தவிர கெவின் பீட்டர்சன் உள்ளிட்டோரும் ‘பிரில்லியண்ட்’ என்று பாராட்டித்தள்ளியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x