Published : 24 Nov 2017 09:34 AM
Last Updated : 24 Nov 2017 09:34 AM

பிரிஸ்பன் டெஸ்ட்: மலான் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து 302 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று இங்கிலாந்து அணி தன் முதல் இன்னிங்சில் 302 ரன்களுக்குச் சுருண்டது.

196/4 என்று தொடங்கிய இங்கிலாந்து அருமையாக ஆடி வந்த மலான் விக்கெட்டை ஷாட் தேர்வின் காரணமாக இழந்ததையடுத்து 302 ரன்களுக்குச் சுருண்டது. மலான் ஆட்டமிழந்த பிறகு 56 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து.

பிட்சில் ஈரப்பதம் காய்ந்து பந்துகள் ஓரளவுக்குச் சீராக வரத் தொடங்கின. ஆஸ்திரேலியாவின் ஷார்ட் பிட்ச் பவுலிங் உத்தி கைகொடுத்தது. ஆனால் நேதன் லயன் பந்து வீச்சு திகைக்க வைத்தது. மலான், மொயின் அலி ஆகிய 2 இடது கை பேட்ஸ்மென்களுக்கும் அவர் தனக்கு ரவுண்ட் த விக்கெட்டில் வீசினாலும் பந்துகள் நல்ல லெந்தில் லெக் அண்ட் மிடிலில் பிட்ச் ஆகி நன்றாகத் திரும்பி, எழும்பி மட்டையை பீட் செய்தன, ஓரு சில பந்து ஷேன் வார்னின் நூற்றாண்டின் பந்து போல் திரும்பி ஸ்டம்புக்கு அருகில் சென்றன. மலான், மொயின் அலி உண்மையில் நேதன் லயனிடம் திணறினர். மற்றபடி வேகப்பந்து வீச்சாளர்களில் கமின்ஸ், ஹேசில்வுட் ஆகியோர் பந்துகளில் ஓரிரு பந்துகளில் பீட்டன் ஆயினர், ஆனாலும் சவுகரியமாகவே இருவரும் ஆடினர், விக்கெட் வீழ்த்துவது போல் அச்சுறுத்தியது நேதன் லயன்.

ஸ்மித்தின் கேப்டன்சி அபாரம் அருமையான களவியூகம், அருமையான பந்து வீச்சு மாற்றம், சமயோசித ஷார்ட் பிட்ச் பவுலிங் உத்தி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

ஒருவிதத்தில் 2-ம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து முதல் ஒருமணி நேரத்தில் விக்கெட்டைக் கொடுக்காமல் ஆஸி.யின் முயற்சிகளை முறியடித்து ஆடினர், ஆனால் மலான் தனது விக்கெட்டை பரிசளித்ததால் வினை தொடங்கியது.

மலான் மிக இயல்பான புல், ஹூக் வீரர் என்று தெரிகிறது. டீப் ஸ்கொயர் லெக், டீப் ஃபைன் லெக் நிறுத்தி வைத்து ஷார்ட் பிட்ச் போட்டாலும் அருமையாக தரையில் புல், ஹூக் ஆடினார், ஒன்றுமே செய்ய முடியவில்லை. மொயின் அலி நேதன் லயனிடம் பீட் ஆனாலும் ஸ்வீப் ஷாட்டில் ஒரு பவுண்டரி அடித்தார், இருவரும் சிங்கிள்கள் என்று ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்தனர்.

மலான் 130 பந்துகளில் 11 ஆக்ரோஷமான பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்த நிலையிலும் இவரும் மொயின் அலியும் இணைந்து 83 ரன்களைச் சேர்த்து வலுவாக செல்ல வேண்டிய நிலையிலும் ஸ்டார்க் தனது 2-வது ஸ்பெல்லை வீச அழைக்கப்பட்டார்.

ரவுண்ட் த விக்கெட்டில் சரமாரி ஷார்ட் பிட்ச் பந்துகளை மலானுக்கு வீசினார் ஸ்டார்க். மலான் அசராமல் புல் ஆடினார், ஒர் பந்து ஸ்கொயர் லெக் பவுண்டரியில் தெறித்தது, மற்றொன்று ஷார்ட் லெக்கில் நின்று கொண்டிருந்த பேங்க்கிராப்ட் ஹெல்மெட் முன்பக்க கம்பியை பதம் பார்த்தது. ஆனாலும் ஸ்டார்க் ஷார்ட் பிட்ச் உத்தியை நிறுத்தவில்லை, திடீரென ஒரு பந்தை சற்று கூடுதல் வேகத்துடன் அதிகம் எழுப்ப இரண்டு கால்களையும் தூக்காமல் மலான் ஹூக் செய்தார் டாப் எட்ஜ் ஆனது, ஸ்கொயர் லெக்கில் பாதியிலேயே ஷான் மார்ஷ் கேட்ச் எடுத்தார். இந்த ஷாட்டை அவர் ஆடியிருக்க வேண்டாம்தான், ஆனால் அவர் அந்தப் பந்துகளை ரன் எடுக்கும் வாய்ப்பாகப் பார்க்கிறார். நல்ல அணுகுமுறை, ரிஸ்க்கி அணுகுமுறை. இது திருப்புமுனையை ஏற்படுத்தியது. இது ஸ்டார்க்கின் 150-வது டெஸ்ட் விக்கெட்.

102 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்திருந்த மொயின் அலி, நேதன் லயன் ஒரு பந்தை லெக் அண்ட் மிடில் குட் லெந்தில் நேராக்க கால்காப்பில் வாங்கினார், நடுவர் அலீம் தார் அவுட் என்றார், ரிவியூ செய்தார் மொயின், பயனில்லை. ஆனால் லயன் பந்துவீச்சுக்கு அவர் குறைந்தது 5 விக்கெட்டுகளையாவது வீழ்த்தியிருக்க வேண்டும். ஏனெனில் எண்ணற்ற பந்துகள் மட்டையைக் கடந்தும் ஸ்டம்பை நூலிழையில் தவிர்த்தும் சென்றன. கிறிஸ் வோக்ஸ் ரன் எடுக்காமல் லயன் பந்தை மேலேறி வந்து டிரைவ் ஆட முயன்றார், பந்து ஆஃப் ஸ்டம்ப் லைனில் குட்லெந்தில் பிட்ச் ஆகித் திரும்பி ஸ்டம்பைப் பதம் பார்த்தது.

ஜானி பேர்ஸ்டோ கமின்ஸை ஒரு அருமையான கட் ஷாட் பவுண்டரியுடன் 9 ரன்கள் எடுத்த நிலையில் பின்னால் சென்று நேர் மட்டையில் ஆஃப் திசையில் ஆட வேண்டிய பந்தை புல் ஷாட் ஆட டாப் எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் பெய்னிடம் கேட்ச் ஆனது.

ஜேக் பால் இறங்கி நேதன் லயன் பந்தில் ஒரு எட்ஜ் பவுண்டரி அடித்தார், பிறகு ஒரு ஸ்வீப், ஒரு கட் என்று மேலும் 2 பவுண்டரிகளை ஒரே ஓவரில் அடித்தார். 11 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தை வார்னரிடம் லெக் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார்.

பிராட் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்து கடைசியாக ஹேசில்வுட் பந்தை ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க இங்கிலாந்து 302 ரன்களுக்குச் சுருண்டது. ஆஸ்திரேலிய அணியில் கமின்ஸ், ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, லயன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x