Published : 27 Jul 2023 03:41 PM
Last Updated : 27 Jul 2023 03:41 PM

“இங்கிலாந்து அணிக்காக பரிதாபப்படுகிறேன். ஏனெனில்...” - முன்னாள் ஆஸி. ஸ்பின்னர்

பென் ஸ்டோக்ஸ்-பிரெண்டன் மெக்கல்லம் கூட்டணியில் உருவான ‘பாஸ்பால்’ என்று பிரபலமாக அழைக்கப்படும் ஆக்ரோஷ முத்திரைக் கிரிக்கெட் உண்மையான கிரிக்கெட் வீரர்களை, டெஸ்ட் வீரர்களை அந்நியப்படுத்துகிறது. உள்ளே வரும் வீரர்களும் அட்டாக்கிங் கிரிக்கெட் ஆட முடிந்தால் இரு, இல்லையேல் போய் விடு என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் ஸ்பின்னர் கெரி ஓ’கீஃப் சாடியுள்ளார்.

நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா பிறகு பாகிஸ்தானில் 3-0 என்று பெரிய சக்சஸ் ஆனதையடுத்து பாஸ்பால் என்பது வெறும் கண்கட்டு வித்தையல்ல உண்மையான வெற்றிக்கான கிரிக்கெட் என்று பென் ஸ்டோக்ஸும் மற்றவர்களும் கூறி வருகின்றனர். ஆனால், இந்தத் தொடர் வெற்றிகளின் தேனிலவு முடிந்து விட்டது என்றும், நியூசிலாந்துக்கு எதிராக பாலோ ஆன் கொடுத்து இங்கிலாந்து 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இப்போது ஆஷஸ் தொடரில் 2-1 என்று பின் தங்கியுள்ளது. ஆகவே பாஸ்பால் ஹனிமூன் முடிந்து விட்டது என்கிறார் ஓ’கீஃப்.

கடந்த 40 ஆண்டுகளில், முதல் இன்னிங்ஸில் டிக்ளேர் செய்த பிறகு, ஆஸ்திரேலியா ஒரு டெஸ்ட் போட்டியை ஒரே ஒரு முறை மட்டுமே இழந்துள்ளது - இங்கிலாந்து இந்த ஆண்டு ஏற்கனவே இரண்டு முறை தோற்று விட்டது.

இந்நிலையில், ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திற்கு பேட்டியளித்த கெரி ஓ’கீஃப் கூறும்போது, “பாஸ்பால் அடித்து நொறுக்கப்பட்டது. ஆம், இது உற்பத்தி செய்யப்பட்ட ஒரு கட்டமைப்பு. இந்த வகை ஆட்டம் முழுவதும் மட்டை ஆடுகளங்களை மட்டுமே நம்பியிருப்பதாகும். இந்த வகை பிளாட் பிட்ச்களை போடுமாறு பென் ஸ்டோக்ஸ் மைதான பிட்ச் தயாரிப்பாளர்களை வற்புறுத்தி வருகிறார்.

இத்தகைய பிட்ச்களில் அதிக ரிஸ்க்குகள் எடுத்து ஆட வேண்டும். இருமுறை இந்த அணுகுமுறையில் அவர்கள் தப்பி விட்டனர். அதற்குக் காரணம் பிட்சின் தன்மையே. இங்கிலாந்து கிரிக்கெட்டுக்காக நான் பரிதாபப்படுகிறேன். நான் ஒரு ஆற்றல் மிக்க இங்கிலாந்து வீரர் என்று வைத்துக் கொள்வோம். என்னை அவர்கள் பின்பற்றக்கூடிய அந்த ஒற்றை வழியில் மட்டுமே ஆட வேண்டும் என்று வற்புத்துவார்கள்.

நான் என் நாட்டுக்காக 5 நாள் கிரிக்கெட்டை மிகவும் கடினமாக ஆட நினைக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். மெக்கல்லமும், ஸ்டோக்ஸும் தேவையில்லை. அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடு என்றுதான் கூறுவார்கள். சில வீரர்கள் எடுத்த எடுப்பிலேயே அடித்து ஆடுவதையும் எல்லா பந்துகளையும் அடித்து ஆடவும் விரும்ப மாட்டார்கள். அது சாத்தியமும் இல்லை. நான் இங்கிலாந்து கிரிக்கெட்டை நினைத்துப் பரிதாப்படுகிறேன்.

ஜாக் கிராலி, பென் டக்கெட், ஹாரி புரூக், பேர்ஸ்டோ போன்ற வீரர்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். ராரி பார்ன்ஸ், டாம் சிப்லி, ஹசீப் ஹமீது ஆகியோர் இத்தனையாண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட்டில் காட்டிய தீவிரம் விரயம்தானா? இங்கிலாந்தின் சிறந்த விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் அணியில் இல்லை. ஆனால் கேட்ச்களை விட்டு மோசமாக விக்கெட் கீப்பிங் செய்யும் பேர்ஸ்டோ அவரது பேட்டிங்குக்காக அழைக்கப்படுகிறார். இது என்ன? இங்கிலாந்து கிரிக்கெட்டுக்காகப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை” என்று கூறுகிறார் ஓ’கீஃப்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x