Published : 21 Nov 2017 10:02 AM
Last Updated : 21 Nov 2017 10:02 AM

மாநில அளவிலான ரோடு சைக்கிளிங் போட்டியில் 5-வது முறையாக தங்கம் வென்றார் ஐஸ்வர்யா

மாநில அளவிலான ரோடு சைக்கிளிங் போட்டியில் தொடர்ந்து 5-வது முறையாக முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார் திருச்சியைச் சேர்ந்த மாணவி ஐஸ்வர்யா.

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் பால் விற்பனை செய்யும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா, ஸ்ரீரங்கம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டிருந்த இவருக்கு, இவரது பெரியப்பா ஆறுமுகம் மற்றும் சர்வதேச சைக்கிள் வீரர் ராஜேஷ் ஆகியோர் ஊக்கமளித்து தொடர்ந்து பயிற்சியளித்தனர். ஐஸ்வர்யா 10 வயது முதலே மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

மாவட்ட, மண்டல போட்டிகளில் பங்கேற்று இதுவரையில் ஏராளமான பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். 6-ம் வகுப்பு படிக்கும் போது மாநில அளவிலான ரோடு சைக்கிளிங் போட்டியில் பங்கேற்று இரண்டாமிடம் பெற்றார். இதைத் தொடர்ந்து தனது கடுமையான பயிற்சியின் மூலம் 7-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தொடர்ந்து 4 ஆண்டுகள் மாநில அளவிலான ரோடு சைக்கிளிங் போட்டிகளில் முதலிடம் பெற்றார்.

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டுப் போட்டி மாநில அளவில் நடத்தப்பட்டது. இதில் ரோடு சைக்கிளிங் போட்டியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் பிரிவில் பங்கேற்ற ஐஸ்வர்யா முதலிடம் பெற்றார். இதன் மூலம் தொடர்ந்து 5-வது முறையாக மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார் ஐஸ்வர்யா.

இதுகுறித்து மாணவி ஐஸ்வர்யா ‘தி இந்து’விடம் கூறியபோது, “தினமும் அதிகாலை 4.30 மணிக்கு பயிற்சியில் ஈடுபடுவேன். 40 கிலோ மீட்டர் தொலைவு வரை சைக்கிள் ஓட்டுவேன். போட்டிகளுக்குத் தயாராகும்போது இன்னும் அதிக தொலைவுக்கு சைக்கிள் ஓட்டி பயிற்சி பெறுவேன். என் குடும்பத்தினரும், பள்ளி நிர்வாகமும் அளிக்கும் ஊக்கம்தான் என் வெற்றிக்கு காரணம்” என்றார்.

பாராட்டு

பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர் குரு.ராகவேந்திரன் கூறும்போது, “மாநில அளவிலான போட்டியில் தொடர்ந்து 5 முறை முதலிடம் பெறுவது என்பது எளிதான காரியமல்ல. இவரது திறமையை முன்பே அடையாளம் கண்டுதான் பல நல்ல உள்ளங்களின் உதவியால் ரூ.2.25 லட்சம் மதிப்பில் ஜெர்மனியிலிருந்து இவருக்கு சைக்கிளை வாங்கிக் கொடுத்துள்ளோம். அதை நன்கு பயன்படுத்தி, போட்டிகளில் ஐஸ்வர்யா வெற்றி பெற்று வருகிறார்” என்றார்.

மாணவி ஐஸ்வர்யாவை பள்ளித் தலைமையாசிரியர் மீனலோசினி, உடற்கல்வி ஆசிரியர்கள் சிவகாமி, சுடர்விழி, கார்த்திக் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x